தொடர் பேச்சுவார்த்தைகள் வெற்றி; இந்திய – பாக்கித்தான் போட்டி இடம்பெறும்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 ரி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, திட்டமிட்டபடி பெப்ரவரி 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் சபை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) ஆகியவற்றுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை லாகூரில் நடைபெற்ற முத்தரப்பு சந்திப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இந்தப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகத் தெரியவருகிறது.
தமது அரசாங்கத்தின் ஆலோசனையின் பேரில் போட்டியைப் புறக்கணிக்கப்போவதாகப் பாகிஸ்தான் அறிவித்த போதிலும், இந்த நீண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானுக்குப் பெரிய அளவில் பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அறியமுடிகிறது.
இருப்பினும், இந்தியாவில் விளையாட மறுத்ததன் காரணமாகத் தொடரிலிருந்து மாற்றீடு செய்யப்பட்ட பங்களாதேஷின் மீது மென்மையான போக்கை கடைபிடிக்க ICC ஒப்புக்கொண்டுள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு எந்தவித தடைகளும் விதிக்கப்படாது என ICC கூறியுள்ள நிலையில், பெப்ரவரி 15ஆம் திகதி இந்தியாவுடனான போட்டியில் விளையாடுமாறு பாகிஸ்தானிடம் BCB கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று பாகிஸ்தான் பிரதமர் முஹம்மது ஷெபாஸ் ஷெரீப்புடன் தொலைபேசி வாயிலாக உரையாடியதுடன், கொழும்பில் இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டியில் விளையாடுமாறு பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் பயங்கரவாதம் கடுமையாகப் பாதித்திருந்த காலப்பகுதியில், இலங்கை கிரிக்கெட்டிற்கு பாகிஸ்தான் வழங்கிய ஆதரவை இலங்கை ஜனாதிபதி பெருமையுடன் நினைவு கூர்ந்ததாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
பாகிஸ்தான் எதனையும் விட இலங்கையுடனான தனது நீண்டகால உறவிற்கு முன்னுரிமை அளித்ததாகவும், பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்ந்து இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை ஜனாதிபதியின் இந்த உணர்வுகளை வரவேற்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், கடினமான காலங்களில் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடியது உட்பட இலங்கை பாகிஸ்தானுக்கு முழுமையான ஆதரவை வழங்கியதை ஏற்றுக்கொண்டார்.
இலங்கை கிரிக்கெட் சபை அண்மைய பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்யாமல் மேற்கொண்டமை, பாகிஸ்தான் தேசத்திற்கும் குறிப்பாக அங்குள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கும் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான தீர்மானமாகும் என ஷெபாஸ் ஷெரீப் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண தொடரில் பாகிஸ்தான் – இந்தியா இடையிலான போட்டியில் விளையாடுவது குறித்த இறுதித் தீர்மானம், கலந்தாலோசனைகளின் பின்னர் எடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர், இலங்கை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
