விளையாட்டு

3 நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் இந்திய – பாகிஸ்தான் போட்டி இடம்பெறும்

இந்திய அணியுடன் விளையாடும் வகையில் பாகிஸ்தான் அணியை சமாதானப்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் லாகூரில் பேச்சுவார்த்தை நடத்தியபோது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 3 நிபந்தனைகளை விதித்துள்ளது. 

எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவிருக்கும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் அணி அறிவித்திருந்தது. இதற்கு அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அனுமதி மறுத்துள்ளதே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 

இந்தப் போட்டியைப் புறக்கணிப்பதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் 1,300 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) வரை இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த காலங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு தாங்கள் ஆதரவு அளித்ததைச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், இந்தப் புறக்கணிப்பால் தங்களுக்கு ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தான் இந்தப் போட்டியைப் புறக்கணிப்பதால் இந்தியாவுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும். இது பாகிஸ்தான் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பைப் பெரிதும் பாதிக்கும். இத்தகைய பின்விளைவுகளால், பாகிஸ்தான் தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. 

அதன்படி, பாகிஸ்தான் அணியை சமாதானப்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் லாகூரில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஐசிசி நடத்திய பேச்சுவார்த்தையின் போது 15 ஆம் திகதி இந்தியா உடன் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 3 நிபந்தனைகளை விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி, போட்டியில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைக்கும் பங்கை அதிகரித்து தர நிபந்தனை விதித்துள்ளதாகவும், அதேபோல், இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் இரு தரப்பு கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மூன்றாவது நிபந்தனையாக போட்டி நடந்தால் இரு நாட்டு வீரர்களும் கை குலுக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *