Uncategorized

முஸ்லிம்களின் 300 வருட பூர்வீகத்தை கபளீகரம் செய்யும் முயற்சியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம்

“காரமுனை எனும் கிராமானது பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்த ஒரு பிரதேசம். இப்பிரதேசத்திலேயே இஸ்லாமிய சகோதரர்கள் வாழ்ந்ததாக ஹிஸ்புல்லாஹ் எம்.பி நேற்றைய தினம் சான்றுகள் அளிக்கப்பட்டதென்று பாராளுமன்றத்திலே சொன்னார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வகையில் அரச அதிகாரிகளைப் பழிசுமத்துவது மிகவும் பிழையான விடயம். நான் சில அரசு அதிகாரிகளிடம் பேசிய பொழுது சில கோரளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேசத்தில் இருந்த சிலர் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.

அவர்கள் மாற்றுக்காணிகளை வைத்துக்கொண்டு மீண்டும் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளைக்கேட்பது நியாயமில்லை என அதிகாரிகள் சொல்கிறாரகள்.

அந்த வகையில், காரமுனை என்பது தமிழர்களுக்குச் சொந்தமான ஒரு பிரதேசம். இது மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடந்த 09.01.2026 அன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை.

இதனைக்கேள்விப்பட்டு கோறளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 211ஜி மாங்கேணி தெற்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள காரமுனை கிராமத்தில் வாழும் மக்களும் மாவட்டத்தில் இன ஐக்கியத்திற்காகப்பாடுபடுவோரும் மிகுந்த வேதனையுற்றுள்ளனர்.

அத்துடன், சாணக்கியனின் உண்மைக்குப் புறம்பான இப்பகிரங்க உரைக்குப்பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்கள் அச்சமும் பீதியுமடைந்துள்ளனர்.

காரணம், அரசியல்வாதிகளின் இவ்வாறான உண்மைக்குப்புறம்பான, முஸ்லிம் மீதுள்ள வெறுப்பின் காரணமாகத்தான் இம்மாவட்டத்தில் காலத்துக்குக் காலம் இன வன்முறைகள் உருவாக்கப்பட்டு வந்துள்ளன என்ற கசப்பான அனுபவங்களாகும்.

உண்மையில், இந்த காரமுனைக்கிராமம் சுமார் 300 வருடகால தொன்மையான, பூர்வீக வரலாற்றைக் கொண்டமைந்தது என்பதற்கான சகல சான்றுகளும் உள்ளன.

அக்கிராமம் முற்று முழுதாக முஸ்லிம்களாலேயே உருவாக்கப்பட்டது என்பதும் அங்கு முஸ்லிம்களே வாழ்ந்தார்கள் என்பதும் சான்று பகரக்கூடிய விடயங்களாகும்.

காரமுனை மீராஸாஹிபு ஸாஹுல் ஹமீத் வலிய்யுல்லாஹ் ஸியாறம்.
மீராஸாஹிபு ஸாஹுல் ஹமீத் வலிய்யுல்லாஹ் எனப்படும் இம்மகானின் அமைவிடம் காரமுனையை ஒட்டியதாக பாலத்திற்கருகில் 3 அமைந்திருக்கிறது.

இந்த மகான் ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன் தீன்மார்க்கப்பணியில் தம்மை அர்ப்பணித்து இலங்கை வந்ததாகவும் காரமுனையை ஆன்மீகப்பணிக்குப் பொருத்தமானதாகக்கருதியதனால் இவ்விடத்தில் சிறு குடிசை அமைத்து வாழ்ந்து வந்ததாகவும் சரித்திரமுள்ளது.

இவ்வலிய்யுல்லாஹ்வின் அமைவிடத்தின் நான்கு முனைகளிலும் 400 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த நான்கு புளிய மரங்கள் அமைந்திருக்கின்றன.

இம்மகானின் நீதி, நேர்மையான வாழ்க்கை
முறையினால் கவரப்பட்ட மாற்று மதத்தினர்கள் பலர் இவர்கள் மூலம் புனித இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்டதாகவும் வரலாற்றில் காண முடிகிறது.

இவ்வலிய்யுல்லாஹ் அவர்களின் அமைவிடத்தைச் சுற்றியுள்ள காடுகளை வெட்டி வயல்கள் அமைத்து அவற்றுக்கு கபுறடி வரவைகள் எனப்பெயர் சூட்டி அழைத்து வந்துள்ளனர்.

இவ்வயல்களில் நெற்செய்கையின் மூலம் விற்றுக் கிடைக்கும் பணத்தினை கந்தூரி செலவுகளுக்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். வருடாவருடம் கந்தூரி நிகழ்வுகள் இடம்பெற்று அன்னதானம் வழங்கப்படுவது நடைமுறையில் இருந்து வந்துள்ளது.

எல்ரீரீஈ ஆயுததாரிகளால் சிதைவுபடுத்தப்பட்ட இவ்வலிய்யுல்லாஹ் அவர்களின் அமைவிடமும், அதன் அருகிலுள்ள பள்ளிவாயலும் இன்னும் சீர்செய்யப்படாமல் அப்படியே காணப்படுகிறது.

காரமுனைக்கிராமத்தில் பள்ளிவாசல், மையவாடி என்பன உள்ளன.

வயலும் வயல் சார்ந்த வனப்பையும் கொண்ட அப்பகுதியில் 1952ம் ஆண்டு முதற்கொண்டு அங்கு முஸ்லிம்கள் நிரந்தரமாகக்குடியேறி வசித்து வந்துள்ளார்கள்.

யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மீண்டும் தங்களால் பராமரிக்கப்பட்ட காணியில் தமது சொந்த முயற்சியில் மீள்குடியேறி இப்பொழுதும் அங்கு 107 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

21 குடும்பங்களுக்கு காரமுனைக்கிராமத்தில் வாக்காளர் பதிவுகளும் உள்ளன.

அங்கு முஸ்லிம்களின் பராமரிப்பில் சுமார் 900 ஏக்கர் வயல் நிலங்களும், சுமார் 200 ஏக்கர் குடிநிலக் காணிகளும் சுமார் 300 ஏக்கர் அளவில் மேட்டு நில சேனைப்பயிர்ச்செய்கைக் காணிகளும் உள்ளன.

மீன்பிடி, கால்நடை வளர்ப்பு, விவசாயம், மேட்டுநிலப் பயிர்ச்செய்கை என்பவற்றிலும் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு தமது வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்கின்றனர்.

அங்கு தமது சொந்த முயற்சியில் குடியேறிய மக்களுக்கு வாகரைப்பிரதேச செயலகத்தினாலோ அல்லது அரச கூட்டுத்தாபனத்திணைக்களங்களினாலோ எந்தவிதமான உதவி, ஒத்தாசைகளும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

குறைந்தபட்சம் ஒரு மலசலகூடமேனும் அமைத்துக் கொடுப்பதற்கான உதவிகளைக்கூட அப்பகுதியிலுள்ள அரச நிருவாகிகள் செய்து தரவில்லை என கிராம மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

அதேவேளை, காரமுனை முஸ்லிம்களை அங்கிருந்து விரட்டியடிப்பதற்கான முயற்சிகள் அதிகாரிகள் மட்டத்திலும் அரசியலவாதிகள் மட்டத்திலும் மிக மிக சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக மக்கள் வேதனைப்படுகின்றனர்.

தாங்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அரசாங்கத்தரப்பிலிருந்து தங்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை உதவிகளையும் அதிகாரிகள் இன ரீதியாகத் திட்டமிட்டுப் பாரபட்சம் காட்டுவதாக மக்கள் வேதனைப்படுகின்றனர்.

இருந்தும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்டின் தலையீட்டாலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கின் முயற்சியாலும் காரமுனைக் கிராமத்திற்கு கடந்த 02.09.2016 அன்று மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டது.

இதுவொன்றே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அங்கு அம்மக்களுக்குக் கிடைத்த சேவையாகும்.
2011, 2017ம் ஆண்டு மற்றும் அதன் பின்னர் காணியற்றவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பப்படிவங்கள் அப்போதிருந்த கிராம சேவை உத்தியோகத்தர் மூலம் வழங்கப்பட்டன. காரமுனை கிராம முஸ்லிம் மக்களும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.

ஆனால், விண்ணப்பித்த காரமுனைக்கிராம முஸ்லிம்களுக்கு இதுவரை காணிக்கச்சேரி எதுவும் நடத்தப்படவில்லை.

இது தொடர்பில் அக்காலப்பகுதியில் வாகரை பிரதேச செயலகத்தில் கடமையிலிருந்த பிரதேச செயலாளர் உட்பட ஏனைய அரச அதிகாரிகளிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டும் காணிக்கச்சேரி நடத்துவதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இவ்விடயம் குறித்து காரமுனைக்கிராமத்தின் முக்கியஸ்தரும் சமூக சேவையாளருமான எம்.ஐ.எம். நவாஸ் மௌலவி, பிரதேச செயலாளரிடம் 07.10.2025 அன்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார்.

அவரின் கோரிக்கைக்கமைவாக பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபனால் பதிலளிக்கப்பட்டுள்ளது.
அப்பதிலில், வாகரைப்பிரதேச செயலகப்பிரிவில் எந்தவொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் காணிக் கச்சேரிகள் நடத்தப்படாமல் விடப்படவில்லை என்றும், 9 காணிக்கச்சேரிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதன் மூலம் 3,450 காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான தகவல்கள் அலுவலகத்தில் பேணப்படவில்லை என்றும், காரமுனைக்கு காணிக்கச்சேரி நடத்தவதற்கான அனுமதி கிடைக்கப்பெறவில்லை என்றும் பிரதேச செயலாளர் அமலினி குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, 1956ம் ஆண்டு விவசாய நிலங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பங்களுக்கு உறுதி வழங்க நடவடிக்கை எடுப்பதாகக்கூறி 1983ம் ஆண்டு வாகரைப் பிரதேச செயலகத்தினால் பொதுமக்களிடமிருந்த அவ்வொப்பங்கள் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், அவற்றை பெற்றுக்கொண்டதற்கான பற்றுச்சீட்டும் வழங்கப்பட்டுள்ளது.

இது முஸ்லிம்களிடம் இருக்கும் ஆதாரங்களைப் பறித்தெடுக்கும் ஒரு மறைமுக தந்திரமாகும் என பாதிக்கப்பட்டோர் கருதுகின்றனர்.

பனம்பலான ஆணைக்குழுவின் சிபார்சுக்கமைய, 2000.07.13ம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைவாக 2002.05.24ம் திகதி காரமுனை 211ஜி-2 எனும் 104 சதுர கிலோமீற்றர் பரப்பளவு (25,688 ஏக்கர்) கொண்ட கிராம அலுவலர் பிரிவு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவின் நிருவாகத்திற்கு 2002ம் ஆண்டே சட்டப்படி கையளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இன்று வரை ஒப்படைக்கப்படவில்லை. அதனை மாவட்ட நிருவாகம் தடுத்தே வந்திருக்கிறது. காரமுனை மக்களும் அருகிலுள்ள கேணிநகர், ஆலங்குளம், வட்டவான், நாவலடி ஆகிய கிராமங்களில் வாழும் பொதுமக்கள் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்து தமக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பிருந்தும் அவர்கள் சுமார் 40 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்து வாகரையில் அமைந்துள்ள கோறளைப்பற்று வடக்கு, பிரதேச செயலகத்தில் தமக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

தமது பிரதேச செயலக நிருவாகக்கருமங்களுக்காக சுமார் 03 கிலோ மீற்றர் தூரமுடைய கோறளைப்பற்று மத்தி, பிரதேச செயலகத்திற்குச்செல்ல முடியாது, சுமார் 40 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள வாகரைப்பிரதேச செயலகத்துக்குச்சென்று சேவைகளைப் பெற வேண்டியிருப்பது மிகுந்த கஷ்டத்தையும், அதிக செலவீனத்தையும், மனவுளைச்சலையும் நேர விரயத்தையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

காரமுனை கிராம முஸ்லிம்கள் கடந்த வெள்ளியன்று அங்கு நடந்த ஜும்ஆத்தொழுகையின் பின்னர் ஒன்றுகூடி தாம் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக புறக்கணிக்கப்படுவதாக தமது ஆதங்கங்களை வெளியிட்டனர்.

தமது சொந்த முயற்சியில் அங்கு மீளக்குடியேறியுள்ள மக்களுக்கு அரச நிருவாக அதிகாரிகள் ஆதரவும் உதவி ஒத்தாசையும் வழங்கப்படாது புறக்கணிப்பது ஒரு புறமிருக்க, வேண்டுமென்றே தங்களை விரட்டியடிப்பதற்கான நேரடி மறைமுகத்திட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இக்கிராமத்திற்கான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் எதனையும் அதிகாரிகள் செய்து தரவில்லை. மீள் குடியமர்வுக்கான உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை. இப்பிரதேச செயலகத்தின் ஏனைய தமிழ் மக்கள் வாழும் கிராமங்களுக்கு போதுமான உட்கட்டமைப்பு வசதிகள், வீட்டுத்திட்டங்கள், குடிநீர், மின்சாரம், மலசல கூடங்கள், கிணறுகள், வீதிப்புனரமைப்பு போன்ற அத்தனை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆயினும், காரமுனை முஸ்லிம்களுக்கு ஒரு வீடு, ஒரு மலசலகூடம், ஒரு கிணறு கூட கட்டித்தரப்படவில்லை. குறைந்தபட்சம் இல்கிராம மக்களுக்குச்சேவை செய்ய கிராம அலுவலர் கூட வருவதில்லை. நாங்கள் 40 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்து வாகரையிலுள்ள பிரதேச செயலகத்திற்குச்சென்றால் எங்களை காரமுனை கிராம முஸ்லிம்கள் என்று அறிந்ததும் அங்குள்ள அலுவலர்களால் நாங்கள் விரட்டப்படுகிறோம்.

இவையனைத்தையும் திட்டமிட்ட இன ரீதியான புறக்கணிப்பாகவே நாங்கள் பார்க்கின்றோம்” என்கின்றனர் காரமுனை முஸ்லிம் மக்கள்.

தாங்கள் தொடர்ச்சியாக இன ரீதியான புறக்கணிப்புக்கு உள்ளாக்கட்டு வருவது குறித்து காரமுனைக்கிராம முஸ்லிம்கள் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண ஆளுநர், மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட இன்னும் பல தரப்பினருக்கும் அறிவித்து வந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் எதிர்கொண்டு வரும் வாழ்விடத்துக்கான காணியில்லாப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சட்ட நடவடிக்கைகள் உடனடியாகத்துவங்கப்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரம் காரமுனை கிராமம் பற்றிப்பேசும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் 1990க்கு பிறகு பிறந்தவர். அவருக்கு காரமுனையின் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், உண்மையான தகவல்களைப் பெற்று நாட்டின் உயர் சபையில் பேசியிருக்கலாம்.

மாறாக, இவ்வாறான உண்மைக்குப் புறம்பான தகவல்களை உயர் சபையில் உரத்துப்பேசுவதனால் வரலாற்றையும் பூர்வீகத்தையும் மூடி மறைத்து விட முடியாது.

தற்போது தமிழ் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் காட்டும் மும்முரம் காரமுனை எனும் முஸ்லிம் பூர்வீகத்தை இல்லாதொழித்து தனித்தமிழர் பிரதேசமாக அதனை மாற்ற எடுக்கும் முயற்சியாகும்.

இதற்கு தற்போதைய அரசு சரியான தீர்வை வழங்க வேண்டும். அதே நேரம், ஒட்டுமொத்த அரசுசார் மற்றும் எதிர்க்கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

மக்களின் இன்னல்களுக்கும் நீண்ட நாள் போராட்டத்தைற்கும் அரசு செவிசாய்க்குமா?

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *