உலகம்

இந்தியாவுக்கு எதிரான ரி20 போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்காது; பாக். பிரதமர் உறுதி

ரி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் மீளவும் அறிவித்துள்ளது.

அந்நாட்டு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் இதனை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஊடகங்களின்படி, “ரி20 உலகக் கிண்ணம் தொடர்பாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் விளையாட மாட்டோம் என்ற தெளிவான நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம்” என்று ஷெரீப் தெரிவித்துள்ளார்.

மிகவும், கவனமாக ஆலோசித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இந்த முடிவு மிகவும் பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டுகளில் அரசியல் தலையிடக்கூடாது என்பதை வலியுறுத்திய ஷெரீப், ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு முன்னர் இந்த விடயம் முழுமையாக மதிப்பிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எந்தவொரு குறிப்பிட்ட காரணத்தையும் தெரிவிக்காமல், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாது என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இந்த லீக் போட்டியானது, எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும், பாகிஸ்தான அரசாங்கத்தின் அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அந்த அறிக்கையில், குறிப்பிட்ட போட்டிகளில் மட்டும் பங்கேற்பது, போட்டியின் உணர்வையும் புனிதத்தையும் பலவீனப்படுத்தும்” என்று பதிவு செய்துள்ளது.

மேலும், பாகிஸ்தான் அரசின் இந்த முடிவானது கிரிக்கெட் விளையாட்டுக்கோ அல்லது பாகிஸ்தான் ரசிகர்களுக்கோ நல்ல செய்தி அல்ல. ஒரு குறிப்பிட்ட போட்டியில் மட்டும் பங்கேற்க மறுப்பது நியாயமில்லாதது.

இது உலக கிரிக்கெட்டையே பாதிப்புக்கு உள்ளாக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், பாகிஸ்தான் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை, கடுமையான அபராதம் மற்றும் தடைகளை விதிக்கும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நடைபெறாமல் போனால் சர்வதேச கிரிக்கெட் பேரவை சுமார் 300 மில்லியன் டொலருக்கு அதிகமான இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *