இனவாதம் தீவிரவாதத்தைக் தோற்கடிக்கும் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும்..! -சுதந்திர தின நிகழ்வில் முனீர் முலப்பர் வேண்டுகோள்
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் என்பது அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வென்றெடுத்த ஒரு வெற்றியாகும் என சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் தெரிவித்தார்.
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பு ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற விசேட நிழகழ்வில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கொழும்பு மாநகர முதல்வர் விராய் கெலி பல்தசார், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், மற்றும் ஜாவத்தை மஸ்ஜித் தலைவர் உள்ளிட்ட அதன் பரிபாலக சபையினர், பல்வேறு இஸ்லாமிய உலமாக்கள், பிரமுகர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், பிரதேசவாசிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர் முனீர் முலப்பர்,
இம்முறை சுதந்திர தினத்தின் கருப்பொருள் “மீள கட்டியெழுப்புவோம்” என்பதாகும். கடந்த காலங்களில் நாடு பொருளாதார ரீதியாகவும், சுனாமி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களாலும் பாரிய சவால்களைச் சந்தித்துள்ளது. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின், பழைய அரசியல் கலாசாரத்தை மாற்றி, ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதார சுதந்திரத்தைப் பாதிக்கும் இனவாதம் மற்றும் தீவிரவாதத்தை மீண்டும் தலைதூக்க விடாமல் தோற்கடிக்க வேண்டும்.
நாட்டின் சுதந்திரத்திற்காகத் தங்களது இன்னுயிரையும் சுகபோகங்களையும் தியாகம் செய்த அனைத்துத் தலைவர்களையும் நாம் இந்த வேளையில் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.
நாடு உண்மையான சுதந்திரத்தை அடைய வேண்டுமாயின், நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்த பழைய அரசியல் கலாசாரத்தை மாற்றி, ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தைப் பொறுப்பேற்றது முதல் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் பழைய முறைகளைத் துறந்து, நாட்டை மீளக் கட்டியெழுப்பப் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப்பொருள் ஒழிப்பு, பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
எதிர்கால சந்ததியினரை இந்த அழிவுகளில் இருந்து விடுவிப்பது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும்.
இது சமூகச் சீர்கேடுகளுக்கு எதிரான யுத்தமாக கருதப்படுவதோடு, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அரக்கனிடமிருந்து விடுவிப்பது அரசாங்கத்தின் பிரதான கடமையாகும்.
இனவாதத்தைத் தூண்டி அதன் மூலம் அதிகாரத்தைப் பிடிக்க முயற்சிப்பவர்களால் நாட்டிற்கு உண்மையான பொருளாதார அல்லது சமூக சுதந்திரத்தைப் பெற்றுத்தர முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.



மக்களிடையே மீண்டும் மீண்டும் இனவாதத்தை விதைத்து நாட்டைச் சீரழிக்க முற்படும் சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்திய அவர், மக்களிடையே கருணை மற்றும் சகவாழ்வு இருந்தால் மட்டுமே உண்மையான அமைதியான முறையில் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என குறிப்பிட்டார்.
அனைவரும் ஒன்றிணைந்து ஒரு “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற இலக்கை அடைய உழைக்க வேண்டும் என்று பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் இதன்போது அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வை குறிக்கும் வகையில் மரம் நடும் நிகழ்வும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

