உள்நாடு

மதரசா மாணவர்களின் சுதந்திர தின விழா

78வது சுதந்திர தின நிகழ்வுகள் நாடு முழுவதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இன்றைய தினம் மத்திய முகாம் பிரதேசத்திலும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மத்திய முகாம் சாளம்பைக்கேணி பிரதேசத்தில் உள்ள மதரசதுல் முஹம்மதிய்யா மற்றும் நூறாணியா மதரசா ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக நாவிதன்வெளி பிரதேச சபை முன்னால் தவிசாளர் ஏ.கே அப்துல் சமட் கலந்து சிறப்பித்தார்.

இன்றைய நிகழ்வில் மதரசா மாணவர்களின் பொல்லடி கலை நிகழ்வுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசிய கொடி ஏற்றிவைக்கப்பட்டு, தேசியக் கீதமும் இசைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாட்டில் உயிர் நீத்த அனைவருக்காகவும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் இலங்கையை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.நளீர் சிறப்புரையாற்றியதோடு மதரசா மாணவர்களுக்கு பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஏ.நளீர், எம்.பி.நவாஸ் மற்றும் மத்திய முகாம் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் எம்.எஸ்.எம்.வசீர், மத்திய முகாம் விகாராதிபதி, வர்த்தக சங்கத்தினர் உட்பட இன்னும் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(ஏ.எச்.எம்.ஹாரீஸ் – மத்திய முகாம் செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *