விளையாட்டு

உலக கிண்ண ரி20; இந்திய- பாகிஸ்தான் போட்டி நடக்காவிட்டால் 4500 கோடி இழப்பு

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலேயே இந்தியா – பாகிஸ்தான் ஆட்டங்கள் தான் அதிக வருமானங்களை தருவதாக தெரிவிக்கப்படுகின்றன. 

T20 உலகக் கிண்ண போட்டியில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி தான் உச்சபட்ச எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. 

இந்த ஆட்டத்தின் மதிப்பு மட்டும் சுமார் 4,500 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) என கணிக்கப்பட்டுள்ளது. இதில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம், விளம்பர வருவாய், டிக்கெட் விற்பனை, இதர வர்த்தக நடவடிக்கைகள், அதிகாரபூர்வ பெட்டிங் ஆகியவையும் அடங்கும். 

ஒருவேளை இந்த போட்டி ரத்தானால் முதலில் பாதிக்கப்படுவது ஒளிபரப்பு நிறுவனம் தான். இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது 10 வினாடிக்கு 25 லட்சம் ரூபா (இந்திய மதிப்பில்) முதல் 40 லட்சம் ரூபா வரை (இந்திய மதிப்பில்) விளம்பர கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. எனவே இந்த ஆட்டம் நடக்காவிட்டால் விளம்பர வருவாயில் மட்டும் ரூபா 250 முதல் ரூபா 300 கோடி (இந்திய மதிப்பில்) வரை இழப்பு ஏற்படும். அதை ஈடுகட்ட ஐ.சி.சி.யிடம் ஒளிபரப்பு நிறுவனம் நிச்சயம் இழப்பீடு கோரும். 

ஐ.சி.சி,.க்கு வரும் வருவாயில் பெரும் பகுதி இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் மூலம் கிடைக்கிறது. இந்த வருவாய் குறைந்தால், ஐ.சி.சி. உறுப்பு நாடுகளுக்கு பிரித்து வழங்கும் நிதியின் அளவும் கணிசமாக குறைந்து விடும். இதனால் ஐ.சி.சி. நிதியை மட்டுமே நம்பி இருக்கும் சிறிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். 

மேலும் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களுக்கு தலா 200 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) வரை இழப்பு ஏற்படக்கூடும். இந்திய கிரிக்கெட் வாரியம் பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பதால் இந்த இழப்பை சமாளித்து விடும். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடங்கும் அபாயம் உள்ளது. 

அத்துடன் ஐ.சி.சி.யின் மொத்த வருவாயில் பாகிஸ்தானுக்கு ஏறக்குறைய 5.75 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. இது ஆண்டுக்கு ரூபா 315 கோடியாகும் (இந்திய மதிப்பில்). ஒப்பந்த விதியை மீறி உலகக் கிண்ண போட்டியை புறக்கணித்தால், ஐ.சி.சி. இந்த நிதியை நிறுத்தி வைப்பதோடு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *