Monday, March 23, 2026
Latest:
உள்நாடு

முஸ்லிம் தேசபக்தர்களை மாவீரர்களாக அங்கீகரிக்க வேண்டும்; கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கலிலூர் ரஹ்மான்

இலங்கை தனது 78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், ஏகாதிபத்திய ஆட்சிகளுக்கு எதிராகப் போராடியதற்காக “துரோகிகள்” என அழைக்கப்பட்ட முஸ்லிம் தேசபக்தர்களை அதிகாரப்பூர்வமாக மாவீரர்களாக அங்கீகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினருமான கலிலூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும், திருகோணமலைப் பிரதேசத்தில் சேகு தீதி, பீர் முஹம்மது மௌலவி, சலாம் உடையார், மட்டக்களப்புப் பகுதியில் மீரா ஹுசைன் காரியப்பர், ஹுசைன் லெப்பை, உதுமா லெப்பை மற்றும் அம்பாறைப் பிரதேசத்தில் அபுபக்கர் ஈஸா, அனிஸ் லெப்பை ஆகியோர் ஏகாதிபத்திய ஆட்சிகளுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதேபோன்று ஊவா–வெல்லஸ்ஸ கிளர்ச்சியில் பங்கேற்ற சிங்கள தேசபற்றாளர்களும் அக்காலத்தில் துரோகிகள் என அழைக்கப்பட்டதாகவும், பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அவர்கள் மாவீரர்களாக அங்கீகரிக்கப்பட்டதாகவும் கலிலூர் ரஹ்மான் நினைவூட்டினார்.

ஆனால், முஸ்லிம் தேசபக்தர்களுக்கு இதுவரை அதேபோன்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், அக்கால அரசாங்கங்களில் இருந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளால் இந்த விடயம் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

போர்த்துகீசியர், டச்சுக்காரர் மற்றும் பிரித்தானியர் ஆகிய ஏகாதிபத்திய சக்திகள் இலங்கையின் அரசியல் பிளவுகளை பயன்படுத்தி நாட்டின் இறையாண்மையை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், அந்நேரத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களின் மத, அரசியல் மற்றும் சிவில் நடவடிக்கைகளில் வெளிநாட்டு தலையீடுகள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த சூழ்நிலைக்கு எதிராக தேசப்பற்றுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒருங்கிணைந்து போராடியதாகவும், முஸ்லிம் சமூகத்தில் சித்தி லெப்பை, வாப்பிச்சி மரிக்கார், ஒராபி பாஷா, மாப்பிள்ளை லெப்பை அலீம், அப்துல்லா பின் அல் பாதிப் அல் யெமன், ஐ.எல்.எம். அப்துல் அஜீஸ் உள்ளிட்ட மத மற்றும் சிவில் தலைவர்கள் முக்கிய பங்காற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் தளத்தில் டாக்டர் டி.பி. ஜெயா, சர் ராசிக் ஃபரிட், டாக்டர் பதியுதீன் மஹ்மூத், சர் மகன் மாக்கார், என்.எச்.எம். அப்துல் காதர், டாக்டர் எம்.சி.எம்.கலீல், ஏ.எம்.ஏ.அஜீஸ் ஆகியோர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், “முஸ்லிம் தேசம்”, “ஞான தீபம்”, “முஸ்லிம் பாதுகாவலன்”, “இஸ்லாம் மித்திரன்” உள்ளிட்ட பத்திரிகைகள் முஸ்லிம் சமூகத்தில் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய உலக புவிசார் அரசியல் சூழலில் மத மற்றும் அரசியல் அடிப்படையிலான ஒற்றுமை அவசியம் என்றும், எதிர்வரும் 2026 குடியரசு தினத்திற்கு முன்னர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், மேற்கூறிய முஸ்லிம் தேசபக்தர்களை மாவீரர்களாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கலிலூர் ரஹ்மான் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *