அருணா மாமாவை கெளரவித்த சீனன்கோட்டை பெண்கள்
பேருவளை பகுதியில் வசிக்கும் முஸ்லிம் பாடசாலை மாணவிகளை 25 ஆண்டுகளுக்கும் மேலாக கொழும்பு பம்பலபிட்டி முஸ்லிம் மகளிர் பாடசாலை மற்றும் இல்மா சர்வதேச பாடசாலை உட்பட ஏணைய சில பாடசாலைகளுக்கு பாதுகாப்பாக பாடசாலை பஸ் வண்டியில் ஏற்றிச் செல்லும் “சிங்கள ஓட்டுநர் மாமா” வை கௌரவிக்கும் வகையில் நேற்று (01) மாலை சீனன்கோட்டை மற்றும் அயல் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களால் ஒரு விழா சீனன்கோட்டை எகொடவத்தை விலா மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அவர் “அருணா” மாமா என்று பாடசாலை சிறார்களினால் அன்புடன் அழைக்கப்படுகிறார், இவர் பேருவளைத் தொகுதியில் உள்ள பயாகலை விகாரகந்த பகுதியைச் சேர்ந்த 57 வயதான சமன் திலகசிறி என்பவராவார்.
இந்தப் பெண் மாணவிகளை எந்த உதவியும் இல்லாமல் தங்கள் சொந்த பிள்ளைகளைப் போல அவர் ஏற்றிச் சென்று திரும்பவும் தத்தமது வீடுகளுக்கு பாதுகாப்பாக விட்டுச் செல்வதாக சிறுமிகள் இந்த கௌரவிப்பு விழாவின் போது தெரிவித்தனர்.
அவர் தினமும் அதிகாலை 4.20 மணிக்கு பேருவளையில் இருந்து தனது சேவையைத் தொடங்கி மாலை 4.30 மணியளவில் மாணவிகளை தத்தமது பெற்றோர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைத்து மாணவிகளினதும் பெற்றோர்களினதும் நம்பிக்கையை சம்பாதித்துள்ளார்.
ஆரம்ப காலத்தில் அவருடன் கொழும்புப் பாடசாலைகளுக்குச் சென்ற மாணவர்கள் திருமணமாகி குழந்தைகளை பெற்றெடுத்து அப் பிள்ளை களையும் அதே பஸ் வண்டியில் அனுப்பி உள்ளதோடு அந்த மாணவிகளும் தமது கல்வியை பூர்த்தி செய்து பின்னர் திருமணமாகி குழந்தைகளை பெற்றெடுத்து அப் பிள்ளை களையும் அதே பஸ் வண்டியில் அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அருணா மாமா அல்லது சமனுக்கு கெளரவம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்ட 25 ஆண்டுகளைப் பூர்த்திசெய்த விழாவில் நம்பகத்தன்மையுடனும் பாதுகாப்பாகவும் கொண்டு சென்ற திலகசிறியின் மனைவி டி.எச். சுஜாதா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறான ஒரு விழாவை மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் ஏற்பாடு செய்தமைக்கும் சமன் திலகசிறி நன்றி தெரிவித்தார்.
அவரின் சேவைகளை கௌரவித்து நினைவுச் சின்னம் மற்றும் பணப் பரிசும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
25 வருட காலமாக சீனன் கோட்டை , மருதானை, மற்றும் மஹகொட பகுதி பாடசாலை மாணவிகளை பாதுகாப்பாக அழைத்துச் சென்று மீண்டும் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்து இப்பகுதி மாணவிகளினதும் பெற்றோர்களினதும் அபிமானத்தைப் பெற்றுக் கொண்டதாகவும் தொடர்ந்தும் எனது பணியை மேற்கொள்வேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வானது இன்னும் ஒரு வகை யில் இன நல்லுறவை கட்டியெழுப்புவதாக வும் அமைந்துள்ளதென்றும் அவர் தனது நன்றியுறையில் குறிப்பிட்டார். இந்த விழாவினை முன்னின்று ஏற்பாடுசெய்த சீனன்கோட்டை உற்பட அயல் பகுதி மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
எமது பிள்ளைகளை மிகவும் நம்பிக்கை யுடன் ஓர் சிங்கள பஸ் சாரதியுடன் பாடசாலை களுக்கு அனுப்பினோம். 25 வருட காலமாக இவர் எவ்வித இடையூருமின்றி மிகவும் ஒழுக்கமான முறையில் கடமையாற்றினார் அதற்காகவே நாம் அனைவரும் இணைந்து அவரது பணியை கௌரவித்து இவ்வாறான ஒரு விழாவை ஏற்பாடுசெய்தோம் என்று பெற்றோர்கள் கருத்துத் தெரிவித்தனர்.






(பேருவளை பீ.எம். முக்தார்)
