கல்முனையின் நூற்றாண்டு பழமைவாய்ந்த விவசாயிகளின் வீதி இந்த அரசாங்கத்தின் ஆட்சியிலாவது புனரமைக்கப்படுமா?
கல்முனையின் பிரதான வீதியில் நகர மண்டபத்திற்கு முன்னால் மேற்குப்புறமாக அமைந்துள்ள ஸம் ஸம் ஹாஜியார் வீதி நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்ததும் விவசாயத்திற்காக விவசாயிகள் பயன்படுத்தி வந்த வீதியுமாகும்.
கல்முனையின் பிரதான வீதியிலிருந்து
இந்த வீதியானது வயலோடு இணைந்து சாய்ந்தமருது, மாளிகைக்காடு, மற்றும் காரைதீவு ஊடாக மாவடிப்பள்ளியின் பிரதான வீதியுடன் இணைகிறது.
இவ்வீதியினூடாக ஆரம்ப காலத்திலிருந்து விவசாயிகள் மாட்டுவண்டி மற்றும் உழவு இயந்திரம் போன்றவற்றை ஓட்டிச் சென்று, தங்களது பல்வேறு விவசாய நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்து கொண்டனர்.
காலப்போக்கில் இவ்வீதியால் விவசாயிகள் மாத்திரமன்றி, வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களும் தங்களுடைய பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.
இவ்வீதியால் விவசாயிகள் வயலுக்குச் செல்வதற்கும், விவசாயப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கும், விலங்குகளை வளர்ப்பவர்கள் விலங்குகளைக் கொண்டு செல்வதற்கும், நன்னீர் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதற்கும் அதிகமாகப் பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
நூற்றாண்டு காலமாக இவ்வாறு நாட்டின் மிக முக்கியமான பொருளாதார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி வந்த இவ்வீதியானது பல தசாப்தங்களாக கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. காலத்துக்குக் காலம் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் மாறி மாறி அரசியல்வாதிகள் உருவாகிய காலத்திலும் கல்முனை மாநகர சபையின் முதுகெலும்பான இவ் வீதியை அந்த ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. இது தொடர்பாக மக்களும் சமூக நலன் பேணுபவர்களும் விவசாயிகளும் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்தது வந்த போதிலும் இவ்வீதி புனரமைக்கப்பவில்லை.
கல்முனை மாநகரின் இவ்வீதி தொடர்பாக பல்வேறு கோணத்தில் செய்திகள் பிரசூரிக்கப்பட இருந்த போதும் அதை குறித்த சிலர் தடுத்து விட்டனர். ஆனால், தற்போது உள்ள ஆட்சியிலாவது இவ்வீதியானது புனரமைக்கப்படுமா? என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
கல்முனை மாநகர சபையினை அலங்கரித்த அரசியல்வாதிகளும் சரி அதிகாரிகளும் சரி இதையெல்லாம் கவனத்திற் கொள்ளாது, தேவையற்ற விடயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதும் அதிக வருமானம் கிடைக்கக்கூடிய கொந்தராத்துகளை எடுப்பதும் போன்ற செயற்பாடுகளிலேயே ஈடுபட்டனர். கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலைக்கு நோயாளிகளைக் கொண்டு செல்லும்போது ஏற்படும் வாகன நெரிசல் இடர்பாடுகளையும் இவ்விதியைப் புனரமைப்பதன் மூலம் தவிர்த்துக்கொள்ளலாம்.
சிறந்த வடிகால் அமைப்பு உருவாக்கக்கூடிய விவசாயிகளின் இந்த வீதியை, நூற்றாண்டு பழமை வாய்ந்த இவ்வீதியை, சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கவனத்தில் எடுத்து, புனரமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
அரசியல்வாதிகள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விடயத்தை கவனத்தில் எடுத்து, பொதுமக்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்களா?


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
