மீண்டும் சொதப்பிய இலங்கையின் மத்திய வரிசை துடுப்பாட்டம்; இலகுவாய் வென்றது இங்கிலாந்து
இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 11 ஓட்டங்களால் வெற்றிப்பெற்று தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.
சுற்றுலா இங்கிலாந்து அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 ரி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் முடிவுற்ற ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2:1 என கைப்பற்றியிருந்தது.
இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டி நேற்று (30) பல்லேகலயில் இரவுப் போட்டியாக இடம்பெற்றது. இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
மாலை 06.30 மணிக்கு நாணயச் சுழற்சி மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. பின்னர் போட்டியின் நாணய சுழற்சி 8.25 மணிக்கு இடம்பெற்றதுடன், போட்டி 8.45 மணிக்கு ஆரம்பமானது.
எனவே போட்டி 17 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 133 ஓட்டங்களை பெற்றது.
ஒரு கட்டத்தில் 8 ஓவர்களுக்கு 85 ஓட்டங்களைப் பெற்று ஒரு விக்கெட்டை இழந்து வலுவான நிலையிலிருந்த இலங்கை அணி 16.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தமை குறிப்பிடத்தக்கது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 37 ஓட்டங்களையும், பெத்தும் நிஷங்க 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் சாம் கரன் ஹெட்ரிக் சாதனை படைத்து மூன்று விக்கெட்டுக்களையும், ஆதில் ரஷீத் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதன்படி 134 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 15 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை மீண்டும் குறுக்கிட்டது.
இதன்படி டக்வத் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 12 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் பில் சோல்ட் 46 ஓட்டங்களையும், டொம் பெண்டன் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் இஷான் மாலிங்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்படி 3 போட்டிகள் கொண்ட இந்த ரி20 தொடரில் இங்கிலாந்து அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளதுடன், 2ஆவது போட்டி நாளை (1) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)
