அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா
நாவிதன்வெளி பிரதேச வீரத்திடல் அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தில் தரம் 1இற்கு மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று (29) வியாழக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பாடசாலையில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவர்கள் தரம் ஒன்றுக்கு புதிதாக அனுமதி பெற்ற மாணவர்களை மலர் மாலை அணிவித்து, இனிப்புக்கள் வழங்கி சிறப்பாக வரவேற்றனர்.
பாடசாலையின் அதிபர் எம்.எம்.அமிருள் ஹக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஏ.நளீர், எம்.பி.நவாஸ், ஏ.ஏ.லத்திப், ஏ.எல்.சவுதியா ஆகியோர் அதிதிகளாகவும், ஏ.சி.தஸ்தீக் மதனி, ஏ.எம்.சாலிடீன், ஏ.சி.எம்.றக்ஸான் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில், தேசிய கீதம், பாடசாலை கீதம் இடம்பெற்றதுடன் அதிபர் உரை, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றது. அத்துடன் அதிதிகளால் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு அறிவுரைகளும் இதன்போது வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் நளீர் கருத்து தெரிவிக்கையில்,
மாணவர்களின் கல்வி என்பது மிகவும் பெறுமதி வாய்ந்த ஒன்று. அதில் குடும்ப வறுமை என்பது ஒரு காரணமாக அமையக்கூடாது.
எந்தவொரு பிள்ளையினதும் கல்வி பெற்றோரின் பொருளாதாரத்தில் தங்கியிருக்கக் கூடாது. வறுமையின் காரணமாக பிள்ளைகள் கல்வியில் இருந்து புறக்கணிக்கப்படக்கூடாது.
கல்வியே அவர்களின் உயர்ந்த சொத்தாக எண்ணி கல்வியில் முன்னேற வேண்டும். இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்.
சிறுவர்கள் கல்வியை கற்று சிறந்த ஒழுக்கமுள்ள நாட்டிற்கு சேவை செய்யக்கூடிய ஒரு நல்ல பிரஜையாக உருவாக்குவது ஆசிரியர்களினதும், பெற்றோர்களினதும் முக்கிய பொறுப்பாகும்.
இவ்விடயம் தொடர்பாக நாம் கரிசனையுடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து தரம் ஒன்று மாணவர்களுக்கு அதிதிகளால் ஏடு தொடங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், பரிசுப் பொருட்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிற்சி ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவ சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்ததோடு, நிகழ்வில் கலந்து சிறப்பித்த அதிதிகளுக்கு நன்றி செலுத்தப்பட்டதுடன் ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் அதிபர் இதன்போது நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.






(ஏ.எச்.எம்.ஹாரீஸ்-மத்திய முகாம்)
