கிரிக்கெட் போட்டி நிர்ணயம்; இடைக்கால தடை விதித்து ஐசிசி
அமெரிக்காவின் கிரிக்கெட் வீரர் ஆரோன் ஜோன்ஸ் மீது, கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் (CWI) மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஆகியவற்றின் ஊழல் தடுப்பு விதிமுறைகளை ஐந்து முறை மீறியதாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனை ICC புதன்கிழமை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், அவர் உடனடியாக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் 2023–24 ஆம் ஆண்டில் நடைபெற்ற Bim10 போட்டியின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை. அந்த போட்டி CWI-யின் ஊழல் தடுப்பு விதிகளின் கீழ் வருகிறது. இதற்கு கூடுதலாக, ICC விதிமுறைகளின் கீழ் வரும் சர்வதேச போட்டிகளுடன் தொடர்புடைய மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளும் உள்ளன.
ICC ஆண்கள் T20 உலகக் கோப்பை போட்டிக்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, சமீபத்தில் அமெரிக்க அணியுடன் கொழும்பில் தங்கியிருந்த ஆரோன் ஜோன்ஸ், ஒழுங்காற்று விசாரணை முடிவடையும் வரை அணியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில், போட்டிகளை நிர்ணயிக்க முயற்சித்தல் அல்லது தவறான முறையில் போட்டிகளின் முடிவுகளை பாதிக்க முயற்சித்தல், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட அணுகப்பட்ட தகவல்களை அறிவிக்கத் தவறுதல், விசாரணை அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்தல், மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் விசாரணையைத் தடுக்கும் செயல்களில் ஈடுபட்டல் ஆகியவை அடங்கும்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க, ஜனவரி 28 முதல் 14 நாட்கள் அவகாசம் ஆரோன் ஜோன்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒழுங்காற்று நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால், இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்க முடியாது என ICC தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் விரிவான விசாரணையின் ஒரு பகுதியாகும். இதன் தொடர்ச்சியாக, பிற நபர்கள் மீதும் கூடுதல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
