முஸ்லிம்கள் என்பதற்காக காணிகளுக்கான ஆவணங்களை வழங்க மறுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலத்தில் காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சூழ்நிலையில் யுத்தம் நிறைவடைந்து 2009ம் காலப்பகுதியில் புனானை அணைக்கட்டு, பொத்தானை கிராமத்தில் மீள் குடியேறி வாழ்ந்து வருகின்றார்கள்.
இவ்வாறு குறித்த கிராம சேவகர் பிரிவில் புனானை அணைக்கட்டு, பொத்தானையில் மீள்குடியேறிய முஸ்லிம் குடும்பங்களை தவிர்த்து ஏனையவர்களுக்கு காணிகளுக்கான ஆவணங்களை கிரான் பிரதேச செயலகம் வழங்கி உள்ளது.
கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புனானை மேற்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட மைலந்தன, புனானை முள்ளிவட்டவான், புனானை அணைக்கட்டு, பொத்தானை போன்ற கிராமங்களுக்கு இறுதியாக அலுவலக ஆவணங்களின் பிரகாரம் சென்ற 2014ம் ஆண்டு காலப்பகுதியில் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இவ்வாறு பதில் அமைந்திருந்தது.
ஆனால் முஸ்லிம்கள் கிரான் பிரதேச செயலகத்தில் தங்களுக்கான அனுமதி பத்திரங்களை கோரிய போது கிரான் பிரதேச செயலகம் குறித்த காணிகள் மகாவலி காணி என்று பதிலளித்துள்ளது. ஆனால் 2014ம் பொத்தானை குடியிருப்பு முஸ்லிம் எவரும் உள்வாங்கப்படவில்லை. முஸ்லிம்களை தவிர்த்து எவ்வாறு மற்றவர்களுக்கு அனுமதிப்பத்திரத்தை பிரதேச செயலகம் வழங்கியது? என்ற நியாயமான கேள்வியை கேட்க வேண்டியுள்ளது.
புனானை அணைக்கட்டு, பொத்தானையில் மீள்குடியேறிய முஸ்லிம்கள் காணிக்கச்சேரி 2011,2012,2017,2023 ஆகிய ஆண்டுகளில் காணிக்கச்சேரிகளுக்கு விண்ணப்பங்களை விண்ணப்பித்துள்ளனர். ஆனால் விண்ணப்பிப்பதும் பின்னர் மகாவலி காணி என்று காரணம் சொல்லி காணிகளுக்கான ஆவணங்களை வழங்க மறுத்து நிராகரிப்பதும் கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தின் தொடர்கதையாக போய்விட்டது. இவ்வாறு இழுத்தடிப்பு செய்து பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்களை கிரான் பிரதேச செயலகம் அலக்களிப்புச் செய்கிறது.
மகாவலி 13 வலயம் வெலிக்கந்தையை தொடர்பு கொண்டு இது தொடர்பாக இப்பிரதேச மக்கள் கேட்ட போது எங்களின் நிருவாகத்தில் மட்டக்களப்பு மாவட்டம் சட்டபூர்வமாக உள்வாங்கப்படவில்லை. ஆகையால் புனானை அணைக்கட்டு, பொத்தானை காணிகளுக்கான காணி ஆவணங்கள் வழங்கப்படாத நிலைமை உள்ளதாக மகாவலி 13 வலயத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே, காணி அமைச்சும், காணி அமைச்சரும் இவ்விடயத்தில் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட இம்மக்களின் காணிகளுக்கான ஆவணங்களை வழங்க முடியுமா? என என கௌரவ சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்ற அமர்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் பாராளுமன்றில் வாய் மூல கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண கடந்த ஆட்சி காலத்தில் இன ரீதியான நடவடிக்கைகள் நடந்திருக்கலாம் அதனை வேறாக பேசுவோம். எமது ஆட்சியில் இன ரீதியான செயற்பாடுகள் இடம்பெறாது பாராளுமன்ற உறுப்பினரால் கூறப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட கிரான் பிரதேசத்தில் மகாவலி காணிகளை பரிசீலித்து பொது மக்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலலெப்பை அவர்களிடம் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் பிரதி அமைச்சர் கூறினார்.
(கே எ ஹமீட்)
