உள்நாடு

மிக விமர்சையாக நடைபெற்ற மருதானை பிரிமியர் லீக் – 2026 வெற்றிக் கிண்ண அறிமுகம் மற்றும் பிரமுகர்கள் கௌரவிப்பு..!

பேருவளை மருதானை பிரிமியர் லீக் – 2026 கிரிக்கட் வெற்றிக் கிண்ணத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கிரிகட் சுற்றுப் போட்டியின் வெற்றிக்கிண்ண அறிமுக நிகழ்வும், மருதானைப் பகுதியைச் சேர்ந்த வைத்தியர்கள், பொறியியலாளர்கள் , சட்டத்தரணிகள், கல்விமான்கள், சாதனையாளர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் 21ம் திகதி புதன் கிழமை (21.01.2026) மாலை பேருவளை காலி வீதியிலுள்ள “ஸிமிச்” வரவேற்பு மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

களுத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மத்துகமை மற்றும் தொடங்கொடை பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான ஆர்.ஏ. சன்ஜீவ ரணசிங்க, பேருவளை நகரபிதா மபாஸிம் அஸாஹிர் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

பேருவளை முன்னால் நகர பிதா மஸாஹிம் முஹம்மத், தே.ம.ச. களுத்துறை மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அரூஸ் அஸாத், பேருவளை அப்ரார் கல்வி நிலைய தலைவர் கலாநிதி அல்ஹாஜ் அஸ்வர் அஸாஹிம், ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.டப்.எம். அஜ்வாத், மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசல் நிர்வாக சபை செயலாளர் டாக்டர் மர்ஜான் ஹூஸைன், நீர் பாசன திணைக்கள ஓய்வு பெற்ற உதவிப் பொறியியலாளர் ஏ.ஜீ.எம். ராஜி, நகர சபை உறுப்பினர் முஹம்மத் ஹிஷாம் உட்பட பாடசாலை அதிபர்கள், கல்விமான்கள், உலமாக்கள், சமூக நல அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள் பொது மக்கள் என பெருமளவிலானோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பேருவளை மருதானை பிரிமியர் லீக் – 2026 தலைவர் ரிபான் நவாய்ஸ் உப தலைவர்களான இர்பான் ஹமீத் மற்றும் இல்மாஸ் இல்மான்,செயலாளர் தில்ஷாத் அன்வர்,பொருளாளர்கள் ரிஸ்மின் தாவூத் மற்றும் பெனனோஸ் பாயிஸ் ஆகியோரின் வழிகாட்டலுடனும் உறுப்பினர்களின் பூரண ஒத்துழைப்போடும் இந்த நிகழ்வு மிக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.

சவுதி அரேபிய தூதரகத்தினால் நடாத்தப்பட்ட கிராஅத் போட்டியில் தேசிய மட்டத்தில் 2ம் இடத்தைப் பெற்ற மருதானை வத்திமிராஜபுரயைச் சேர்ந்த செல்வன் காலித் சீராஸின் இனிய கிறாஅத்துடன் ஆரம்பமான நிகழ்வில் அல்-ஹூமைஸரா தேசிய பாடசாலை ஆசிரியர் ருஸ்தி ஹாரிஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
முன்னால் நகர சபை உறுப்பினரும், எவர்க்ரீன் ஆங்கில பாடசாலை முகாமைத்துவத் தலைவருமான தில்ஷாத் அன்வர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.

கண்டி லோயல் மகளிர் கல்லூரி முகாமைத்துவ தலைவர் பாஸிர் முஹிதீன் விசேட சொற்பொழிவாற்றினார்.

நிகழ்வு இறுதியில் ஹிமாத் ஹிஷாம் நன்றியுரை நிகழ்த்தினார்.

இச்சுற்றுப் போட்டி எதிர்வரும் 27ம் திகதி பேருவளை மாளிகாஹேன ஸேம் ரிபாய் ஹாஜியார் மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) விளையாட்டரங்கில் மின் ஒளியில் நடாத்தப்படவுள்ளது.

பேருவளை மருதானைப் பகுதியைச் சேர்ந்த 32 கிரிக்கட் அணிகள் இந்த மாபெரும் சுற்றுப் போட்டியில் பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது. அணிக்கு 11 பேர் கொண்ட இச்சுற்றுப் போட்டி ஐந்து ஓவர்களைக் கொண்டதாகும்.

இறுதிப் போட்டி பெப்ரவரி மாதம் 01ம் திகதி நடைபெறவுள்ளதோடு பல முக்கிய அதிதிகள் பரிசளிப்பு நிகழ்வில் பங்குபற்றுவர். இதற்கான ஏற்பாடுகளை பிரிமியர் லீக் 2026 குழு மேற்கொண்டு வருகிறது.

(பேருவளை பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *