எலுவன்குளம் ஊடாகச் செல்லும் புத்தளம் – மன்னார் (B-379) வீதியை திறக்க கோரி கையொப்ப வேட்டை..!
எலுவன்குளம் ஊடாகச் செல்லும் புத்தளம் – மன்னார் (B-379) வீதியை மக்களின் பாவனைக்காக மீளத் திறக்கக் கோரி புத்தளம் மற்றும் மன்னாரில் வெள்ளிக்கிழமை (23) ஜூம்ஆ தொழுகையை அடுத்து புத்தளம் – மன்னார் பாதை திறப்புக்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற உள்ள மாபெரும் கையொப்பப் போராட்டம்
புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களை இணைக்கும் மிகக்குறுகிய மற்றும் பாரம்பரியப் பாதையான B-379 (பழைய மன்னார் வீதி) தசாப்த காலமாக முடக்கப்பட்டுள்ளதால், எமது பிரதேச மக்கள் சொல்லொணாத் துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பயணத் தூரம் அதிகரிப்பு, மேலதிக செலவுகள், கல்வி மற்றும் சுகாதார சேவைகளைப் பெறுவதில் நிலவும் தாமதங்கள் என எமது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் ஏனைய தேசியப் பூங்காக்களினூடாகப் பிரதான வீதிகள் இயங்கும் நிலையில், புத்தளம் பிரதேச வீதிக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி ஜனாதிபதிக்கு பாரிய மகஜர் ஒன்றினைச் சமர்ப்பிக்க ஏற்பாட்டு குழு தீர்மானித்துள்ளது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கையில் உங்களது கையொப்பத்தையும் இட்டு இந்த பிரதான கோரிக்கைகளை சக்திமிக்கதாக்குவதற்கு அழைக்கிறது ஏற்பாட்டு குழு
பல நூற்றாண்டுகள் பழமையானதும், 2019-கள் வரை பேருந்து போக்குவரத்து இயங்கியதுமான B-379 வீதியை உடனடியாக மீளத் திறக்க வேண்டும்.
மன்னார் மற்றும் புத்தளம் மாவட்ட மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதார மற்றும் சுகாதார உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்.
சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, ஏனைய பூங்காக்களில் (மின்னேரியா/உடவளவ) பின்பற்றப்படும் சமநிலை மேலாண்மை முறையை இங்கும் அமுல்படுத்த வேண்டும்.
”இது ஒரு வீதிக்கான போராட்டம் மட்டுமல்ல இப்பிரதேச எதிர்கால சந்ததியினரின் உரிமையையும் பொருளாதார சுதந்திரத்தையும் வென்றெடுக்கும் போராட்டம்
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
