நிலக்கரி விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணையொன்றை நடத்துங்கள்!
நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (2026.01.20) எழுப்பிய கேள்வி.
நாட்டின் மின்சார உற்பத்தியில், மிக முக்கிய மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றான நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்திற்கு, நிலக்கரி கொள்வனவின் பெறுகைச் செயல்முறையின் தோல்வி மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாது முடிவெடுத்தல் தொடர்பாக தற்சமயம் நாடு முழுவதும் மக்களின் கூடிய கவனம் திரும்பியுள்ளன.
- நிலக்கரி தொடர்பான பிரச்சினைக்குரிய பெறுகைக் கோரல் எந்த வழிமுறையில் விடுக்கப்பட்டுள்ளது? இந்த பிரச்சினைக்குரிய விலைமனு தொழில்நுட்பப் பிழையாக அன்றி, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொது நிதியை ஆபத்தில் ஆழ்த்திய ஒரு நிர்வாகத் தோல்வி என்பதனை அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா?
- விலைமனு கோரலுக்கான காலக்கெடு 21 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எந்த அனுமதியின் கீழ் இது வழங்கப்பட்டுள்ளது? அந்த அறிக்கைகளை சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா?
- இதற்கு முன்னர் நிலக்கரி விலைமனு கோரல் அழைக்கப்படத் தேவையான தொழில்நுட்ப/நிதி தகுதிகள் என்ன? இந்த முறை அரசாங்கம் இந்த நிபந்தனைகளை மாற்றுவதற்கு, தளர்த்துவதற்கு அல்லது நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்ததா? ஆமெனில், இதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் யார்?
- இந்த பெறுகைக்கு சமர்ப்பிக்கப்பட்ட மொத்த ஏலங்களின் எண்ணிக்கை யாவை? பெறுகை குறித்த முழு ஏல மதிப்பீட்டு அறிக்கையையும் இச்சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா?
- அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு நுரைச்சோலை போன்ற பாரிய அளவிலான நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கு முன்னைய விநியோக அனுபவம் காணப்படுகின்றனவா? இல்லையென்றால், இத்தகைய நிறுவனத்திற்கு நாட்டின் முதன்மை மின்சார உற்பத்திக்கான பொறுப்பு ஏன் வழங்கப்பட்டது?
- இந்த விலைமனுவின் பிரகாரம், நிலக்கரியின் நிகர விலை NCV (Net Calorific Value) பெறுமதி 5900 kcal/kg ஆக காணப்பட வேண்டும் என்பது உண்மையா? லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலக்கரி NCV மதிப்பை பூர்த்தி செய்யவில்லை என்று செய்திகள் வந்துள்ளனவா? பரிசோதனை அறிக்கைகள் பெறப்படுவதற்கு முன்னதாக நிலக்கரி பொய்லர்களுக்குள் போடப்பட்டனவா? இதற்கு அனுமதி வழங்கியது யார் ? எந்த சட்ட அடிப்படையில் இது வழங்கப்பட்டது?
- நிலக்கரி மாதிரிகள் இந்தியாவிற்கோ அல்லது வேறு எந்த நாட்டிற்கோ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளனவா? அது எப்போது? இந்த பரிசோதனை அறிக்கைகள் இன்றளவில் கிடைக்கப்பெற்றுள்ளனவா? அவற்றை இந்த சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா? அந்த அறிக்கைகள் இதுவரை தாமதமாவதற்கான காரணங்கள் என்ன?
- தரமற்ற நிலக்கரி காரணமாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு பொய்லரில் நிலக்கரி வெப்பமாதல் 107 MT இருந்து 120 MT வரை அதிகரித்து காணப்படுகின்றன என்பதை அமைச்சர் ஏற்றுக்கொள்கிறாரா? இதன் பிரகாரம், அரசாங்கத்திற்கு ரூ.10 பில்லியனுக்கும் அதிகமான தொகை நட்டம் ஏற்படுகின்றது என்பதை அமைச்சர் மறுக்கிறாரா? இதற்கான காரணங்கள் என்ன
- இந்த மேலதிக நிலக்கரி வெப்பமாக்கல் காரணமாக ஆண்டு முழுவதும் தேவைப்படும் நிலக்கரி இருப்பு முன்கூட்டியே தீர்ந்துவிடும் அபாயம் உள்ளது என்பதை அமைச்சர் ஏற்றுக்கொள்கிறாரா? தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்துவதால் பொய்லர்களுக்கு ஏற்படும் சேதம், செயல்திறன் குறைந்து போதல், மற்றும் நிலையத்தின் நிலைபேறு காலம் குறைந்து போதல் தொடர்பான ஆபத்து மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளனவா?
இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விலைமனு கோரல் நடைமுறை குறித்து விசாரணையொன்று முன்னெடுக்க வேண்டும். துறைசார் மேற்பார்வைக் குழுவின் ஊடாக இது தொடர்பில் கேள்விகள் கேட்கப்பட்டபோது இதில் தவறுகள் ஏற்பட்டுள்ளதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக தடயவியல் கணக்காய்வை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு யோசனை முன்வைத்தார்.
