உள்நாடு

ஐ.எம்.எப்.பின் சிறப்பு தூதுக்குழு புதனன்று இலங்கை வரும்.

இலங்கையை அண்மையில் தாக்கிய ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆராய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் விசேட தூதுக்குழு ஒன்று எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

இது வெறும் சாதாரண விஜயமாக மட்டுமன்றி, நாட்டின் எதிர்கால பொருளாதார சீர்திருத்தங்களை தீர்மானிக்கும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. எனவே இந்த விஜயம்  ‘உண்மை கண்டறியும் பணி’  என  சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களப் பணிப்பாளர் ஜூலி கோசாக் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியின் ஆரம்ப அறிக்கையின்படி, சுமார் 4.1 பில்லியன் டொலர் நேரடி சேதம் ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், சூறாவளியால் உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு ஏற்பட்ட சேதங்களின் அளவை விரிவாக மதிப்பீடு செய்யும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு குழு இலங்கை வருகிறது.

கள நிலவரங்களை நேரடியாக ஆராய்வதன் மூலம், இலங்கை அரசுக்குத் தேவைப்படும் மேலதிக உதவிகளைத் தீர்மானிக்கவும் முடியும். எவ்வாறாயினும் இலங்கை தற்போது பின்பற்றி வரும் நிதி வசதி திட்டத்தின் கீழ், இந்தச் சூறாவளித் தாக்கம் எத்தகைய கொள்கை மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து அரசாங்கத்துடன் இக்குழு கலந்துரையாட உள்ளது.

பேரிடர் நிவாரணத்திற்காக அரசு அதிக நிதி செலவிட வேண்டியுள்ளதால், முந்தைய நிதியியல் இலக்குகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருக்கலாம். ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி,  சர்வதேச நாணய நிதியம்  இலங்கைக்கு 206 மில்லியன் டொலர் அவசரகால நிதியை வழங்க ஒப்புதல் அளித்தது. இலங்கையின் ஐந்தாவது மீளாய்வு தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தூதுக்குழுவின் விஜயம் மிகவும் முக்கியமானதாகும்.

சர்வதேச நாணய நிதிய தூதுக்குழுவின் அறிக்கை சாதகமாக அமையும் பட்சத்தில், மார்ச் மாதத்திற்குள் சுமார் 330 மில்லியன் டொலர் பெறுமதியான அடுத்த தவணை நிதி விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. மறுபுறம் 2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி விகிதங்களில் இந்தச் சூறாவளி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாணய நிதியம் துல்லியமாக மதிப்பிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *