பள்ளிவாசல் சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை..! -பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்
பள்ளிவாசல் சொத்துகள் சிலரது பரம்பரைச் சொத்துகளாக மாறுவதைத் தடுக்க வேண்டும் என பிரதி அமைச்சர் அஷ்ஷேக் முனீர் முளப்பர் தெரிவித்தார்.
மல்வானை ரக்ஸபான ஜூம்ஆ பள்ளிவாசலில் புனித மிஃராஜ் தினத்தை முன்னிட்டு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனை கூறினார்.
மிஃராஜ் பயணம் நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய ஆறுதல் பயணம் என அவர் குறிப்பிட்டார்.
கடினமான சூழ்நிலைகளில் பொறுமையும் தொழுகையும் அவசியம் என்றும், சமூக ஒற்றுமை முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பள்ளிவாசல் நிர்வாகங்களில் போட்டிகள் காரணமாக சொத்துகள் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், குறைந்த வாடகைக்கு கடைகள் வழங்கப்படுவதால் பள்ளிவாசல்களின் வருமானம் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஒரு கடை 35,000 ரூபா வாடகையில் இருந்து 190,000 ரூபாவாக உயர்த்த முடிந்த சம்பவத்தையும் அவர் எடுத்துக்காட்டினார்.
இந்த முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனைத்து பள்ளிவாசல் சொத்து விபரங்கள் மற்றும் வாடகை ஒப்பந்தங்களைத் திரட்டி வருவதாகவும், அவற்றை பள்ளிவாசல்களின் மேம்பாட்டிற்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஜம்இய்யதுல் உலமா கொழும்பு கிளை பிரதி தலைவர் அஷ்ஷேக் அப்துல்லாஹ் பாயிஸ் விசேட உரை நிகழ்த்தினார்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) முஸ்லிம் சேவையில் நேரடியாக ஒலிபரப்பப்பட்டதுடன், இறுதியில் பிரதி அமைச்சர் மற்றும் பணிப்பாளருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.
