கட்டுரை

தரம் 6 மாணவர்களுக்காக அச்சிடப்பட்ட ஆங்கில மொழி பாடப் புத்தகத்தில் குழந்தைகளுக்குப் பொருத்தமற்ற வலைத்தள தகவல்கள்..! :ஒரு தொழில்நுட்ப விளக்கம்.

இந்த வாரம் இலங்கையில் கல்வி சம்பந்தப்பட்ட பேசு பொருளாக இருப்பது புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் தரம் 6 மாணவர்களுக்காக அச்சிடப்பட்ட ஆங்கில மொழி பாடப் புத்தகத்தில் குழந்தைகளுக்குப் பொருத்தமற்ற வலைத்தள தகவல்களைச் சேர்த்த விடயம்! இது குறித்து அரசாங்கம் மிக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் என்ன நடந்திருக்கிறது என்ற விடயத்துக்கு வர முன் சில பொதுவான விடயங்களை நாம் சற்று கவனிப்போம்.

முதலாவதாக, நாம் எல்லோரும் அவதிப்படும் ஒரு விடயம் தான், எமக்குத் தேவையான ஒரு தகவலை அல்லது வீடியோவை இணைய தளங்களில் தேடும் போது அல்லது பார்த்துக்கொண்டிருக்கும் போது மாணவர்களுக்கு பொருத்தமற்ற அல்லது அசிங்கமான விளம்பரங்கள், கருத்துக்கள் (Comments), திடீர் சாளரங்கள் (Pop-ups ), வயதுவந்தோர் உள்ளடக்கம் (Adult Content) போன்றன எதிர்பாராத விதமாக தோன்றுவது! அல்லது நாம் அடுத்ததாக என்ன பார்க்க வேண்டும் என்று பொருத்தமற்ற வீடியோவை, வலைப்பக்கத்தை அல்லது உள்ளடக்கமொன்றை(Content) எங்களுக்கு பரிந்துரைப்பது (Next Recommendation)!

இரண்டாவதாக, இன்று நல்லதாக இருக்கும் ஒரு இணையத்தளம் நாளை மோசமானதாக மாறக்கூடும். அவர்களது வருமானம், தேவைக்கேற்ப உள்ளடக்கங்கள் மாற்றப்படலாம். இன்று பாதுகாப்பானதாக இருக்கும் பக்கம் நாளை பாதுகாப்பற்றதாக மாறக்கூடும். எனவே வெளி இணையத் தளங்கள் எப்போதும் சரியாகத் தான் இருக்கும் என நம்ப முடியாது. அதே போல் இன்று பிரசித்தி அடைந்துள்ள ஒரு இணைய தளம் நாளை இன்னொருவருக்கு விற்கப்படலாம். அதனை வாங்கியவர் அதனது உள்ளடக்கங்களை மாற்றக்கூடும். அல்லது அந்த இணைய தளம் முடக்கப்படலாம். இதனை எங்களுக்கோ அரசாங்கத்துக்கோ கட்டுப்படுத்த முடியாது.!

மூன்றாவதாக, கல்வி அமைச்சின் கட்டுப்படுத்தப்பட்ட இணையதளம் பற்றி பார்ப்போம். அதன் பக்க உள்ளடக்கங்கள் கல்வித் தேவைக்கு ஏற்ப நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டிருக்கும். பக்க உள்ளடக்கங்கள் தேவைக்கும் காலத்திற்கும் ஏற்ப அமைச்சினால் மாற்றப்படலாம். அதே போல் தேவையற்ற pop-ups, விளம்பரங்கள், வீடியோக்கள், படங்கள், பரிந்துரைப்புக்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் முற்று முழுதாக மூடப்பட்டிருக்கும். எனவே இது அமைச்சுக்கும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பாதுகாப்பானதாக அமைய பெற்றிருக்கும்.

இனி விடயத்துக்கு வருவோம். தரம் 6 மாணவர்களுக்காக அச்சிடப்பட்ட ஆங்கில மொழி பாடத் தொகுதியில் வெளி இணையத்தள முகவரி அச்சிடப்பட்டு இந்த இணைய முகவரி மாணவர்களை, ஆசிரியர்களை வயதுவந்தோர் உள்ளடக்கம்(Adult Content) உடைய பக்கமொன்றுக்கு எடுத்துச் சென்றதாவே குற்றம் சாட்டப்படுகிறது. இதுவரை இவ்வாறான ஒரு பக்கம் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளது. அதே போல் மிகவும் பழமையான வீடியோக்கள், தகவல்கள் மற்றும் கூகிள் மூலம் மொழி பெயர்க்கப்பட்ட விடயங்கள் இருப்பதாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சேதம் ஏற்கனவே நடந்து முடிந்துள்ள நிலையில் கோடிக் கணக்கில் செலவு செய்யப்பட்டு அச்சிடப்பட்டுள்ள இந்தப் புத்தகங்களை மாற்றவும் முடியாத நிலை!

என்ன தீர்வு? பாடப்புத்தகங்களில் பதிவிடப்பட்டும் URL, QR Code போன்ற இணைய இணைப்புகள் தனியார் அல்லது வெளி இணையதளங்களுக்கு (External URL) இட்டுச் செல்வதற்குப் பதிலாக கல்வி அமைச்சின் அனுமதி பெற்ற இணையப் பக்கம்(Redirection Gateway) மூலம் குழந்தைகளுக்கு பாதுகாப்பான உள்ளடக்கத்துக்கு மட்டுமே செல்ல வேண்டும். இவ்வாறு செய்யப்பட்டால் புத்தகங்களை மீள அச்சிடுவதற்குப் பதிலாக தேவையான இணைய பக்கத்தை அல்லது உள்ளடக்கத்தை மாத்திரம் மறுமுகவரியிடப்பட்டு (Redirect) இலகுவாக மாற்றிக் கொள்ள முடியும். இது மாணவர்களைப் பாதுகாக்கிறது, பெற்றோர் நம்பிக்கையை உருவாக்குகிறது, புத்தகங்களை மீள மீள அச்சடிக்காமல் அரசாங்கப் பணத்தைச் சேமிக்கிறது, டிஜிட்டல் கற்றலைப் பாதுகாப்பாக செயற்படுத்துகிறது, சர்வதேச நடைமுறைகளுடன் பொருந்துகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, யார் யார் எந்தப் பக்கங்களுக்குள் நுழைந்திருக்கிறார்கள், எந்த உள்ளடக்கங்கள் அதிகமாக பார்க்கப்படுகின்றன போன்ற பகுப்பாய்வுகளை அரசாங்கம் பெற்றுக்கொள்ள இது வழி வகுக்கின்றது.

அது சரி, இவ்வாறான ஒரு சிறு விடயத்தை அமைச்சு எவ்வாறு தவற விட்டது என்பது இந்த வாரத்தின் கேள்வி யாக இருந்து கொண்டிருக்கிறது.

(ஹரீஸ் ஸாலிஹ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *