உள்நாடு

கணவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக மாணவர் மதிய உணவு பணத்தை மோசடி செய்த அதிபர்..!

பாடசாலை மாணவர்களின்   உணவு நிதியை மோசடி செய்து தனது கணவரின் பிறந்த நாள் விழாவை கொண்டாடிய மெதிரிகிரிய பாடசாலை அதிபருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண பிரதான செயலாளர் ரஞ்சன ஜயசிங்க தெரிவித்தார்.

தனது பாடசாலையில் ஆரம்ப பிரிவில் கல்வி பயின்று வரும்  மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் மத்திய உணவு வழங்காமல் அந்த நிதியை மோசடி செய்து 2022 டிசம்பர் 05 ஆம் திகதி தனது கணவரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்திற்கு செலவு செய்துள்ளதாக அதிபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களினால் வலய மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இது தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த தினத்தில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படமாட்டது என்பதால் வீட்டிலிருந்து உணவு கொண்டு வருமாறு மாணவர்களுக்கு தெரிவித்து  பின்னர் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியதாக கூறி போலி வவுச்சர்களைத் தயாரித்து அரசாங்க  நிதியைமோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கணவரின் பிறந்த நாள் விழாவிற்கு பால்ச்சோறு , கொக்கிஸ், கட்லேட்டுகள் மற்றும் கொண்டை கடலை வழங்கியதற்கு  இந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பெற்றோர் அளித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் போது குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான அதிபர் கல்வி நிர்வாகத் தேர்வில்  (SLEAS) தேர்ச்சி பெற்று நிர்வாக அதிகாரியாக  நியமிப்பதற்கு தகுதி பெற்றிருந்தாலும் இந்த நிதி மோசடி காரணமாக அவரது நியமனத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண பிரதான செயலாளர் ரஞ்சன ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *