உள்நாடு

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு, பலமாக முன்னோக்கி செயல்படுத்தப்படுகிறது..! -‘முழு நாடுமே ஒன்றாக’ வட மாகாண நிகழ்ச்சியில் ஜனாதிபதி மக்களுக்குத் தெரிவிப்பு

அன்று யுத்தம் காரணமாக தமது பிள்ளைகள் பற்றி பயந்து வாழ்ந்த வடக்கின் பெற்றோர்கள், இன்று போதைப்பொருள் காரணமாக அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது என்றும், எந்தப் பிரஜை, நகரம், கிராமம், ஏழை, பணக்காரன், சிங்களவர், தமிழர் என்ற வேறுபாடு இல்லாமல் பரவும் இந்த போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களை பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு பலமாக செயல்படுத்தப்படும் என்றும், அது ஒருபோதும் பின்வாங்கப்படும் ஒரு செயற்பாடாக இருக்காது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

மேலும், ஒரு சமூகமாக மக்கள் தமது பொறுப்பை நிறைவேற்றவும், அதற்காக ஒரு பாரிய பாதுகாப்பு அரணாக ஒன்றிணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று (16) பிற்பகல் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் வட மாகாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

போதைப் பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கு தீவிர பங்களிப்பை வழங்கிய வட மாகாண முப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டம் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ஒரு வேலைத்திட்டம் மாத்திரமன்றி, அதற்கு ஆளான பிள்ளைகளுக்கு புனர்வாழ்வளித்து, அவர்களுக்கு சிறந்த தொழிற்பயிற்சி வழங்கி, கிராமத்திற்கும் நாட்டிற்கும் பயன்மிக்க பிரஜைகளாக மாற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டமாகும் என்றும் தெரிவித்தார்.

நாட்டில் முதல் முறையாக, தெற்கு மற்றும் வடக்கு மக்களால் சமமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய நம்பகமான அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அதிகாரத்தை இழந்த இனவாத குழுக்கள் சிறிய, சிறிய இடங்களில் இனவாதத்தை மீண்டும் தூண்ட முயற்சித்தாலும், நாட்டில் மீண்டும் எந்த இனவாத போக்கும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்றும் வலியுறுத்தினார்.

மேலும், வட மாகாணத்தில் கிராமப்புற வீதிகளின் அபிவிருத்திக்காக கடந்த ஆண்டு 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டும் அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அந்தப் பணத்தை முறையாகப் பயன்படுத்தி மக்கள் அந்த அபிவிருத்திப் பலன்களைப் பெறுவதை உறுதி செய்ய அரசியல் வாதிகளும், அரச அதிகாரிகளும் பங்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

எமது நாடு எமது இளைஞர்கள் எமது அரச பொறிமுறையை முழுமையாக ஆக்கிரமித்துள்ள போதைப் பொருளை ஒழிப்பதற்காகவே நாம் உங்களை சந்திக்கிறோம்.நாடென்ற வகையில் எமக்கு பெருமளவு எதிர்பார்ப்புகள் உள்ளன. எமது நாட்டை உலகில் வளமான நாடாக முன்னேற்ற வேண்டும்.எமது நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும். எமது நாட்டில் பலமான பொருளாதாரத்தை ஏற்படுத்த வேண்டும். எமது நாட்டில் அமைதி , சகோதரத்துவம் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். எமது நாட்டின் பிள்ளைகளுக்கு அவை மிகவும் அவசியமான விடயங்களாகும். ஆனால் இந்த அனைத்து எதிர்பார்ப்புகளும் ஒரு சவாலின் காரணமாக சாத்தியமாக்குவதில் தடையை எதிர்கொண்டுள்ளது. அது தான் இந்தப் போதைப் பொருள் அச்சுறுத்தல்.

எந்தவொரு இடத்தையும் எந்தவொரு பிரஜையையும் எந்தவொரு நகரம் அல்லது கிராமம் என்ற பேதமின்றி இந்த அச்சுறுத்தல் பரவியுள்ளது. இந்த அச்சுறுத்தலை தோற்கடிக்க வேண்டும். எமது பெற்றோர், தமது பிள்ளைகள் குறித்து பாரிய எதிர்பார்ப்புடன் உள்ளனர். அவர்களை வளர்த்து பாரிய எதிர்பார்ப்புடன் கல்வி புகட்டுகின்றனர்.ஆனால் அவர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளும் பிள்ளைகளை அடிமையாக்கும் போதைப் பொருள் அச்சுறுத்தலினால் வீணாகிறது. வறியவர்கள், செல்வந்தர்கள் மற்றும் தமிழ்,சிங்களம், முஸ்லிம்கள் என்ற பாகுபாடின்றி இந்த அச்சுறுத்தல் பரவியுள்ளது.

இந்த போதைப் பொருளின் ஊடாக பெறப்படும் பெருந்தொகையான பணம் எமது அரச பொறிமுறையை ஆக்கிரமித்துள்ளது. சிறைச்சாலைகளுக்குள் கைதானவர்கள் இந்த வர்த்தகத்தை செய்கின்றனர். பொலிஸார் சிறந்த சேவையை செய்யும் நிலையில் ஒரு சிலர் இதில் சிக்கியுள்ளனர். சுங்கத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ,குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் என்பவற்றில் பணியாற்றும் ஒரு சில அதிகாரிகள் இதற்குள் அகப்பட்டுள்ளனர். அது மாத்திரமன்றி அரச சேவையிலுள்ள முக்கிய இடங்களில் இந்த அச்சுறுத்தலில் சிக்கியுள்ள அதிகாரிகள் உள்ளனர்.

பிள்ளைகள் இதற்கு இறையாகியிருந்தால் அரச சேவை போதைப் பொருள் வர்த்தகர்களின் இறையாக மாறியிருந்தால் நாம் நாடென்ற வகையில் எங்கு செல்கிறோம்? அதனால் கட்டாயம் இந்த அச்சுறுத்தலை தோற்கடிக்க வேண்டும்.

இந்த போதைப் பொருள் வர்த்தகத்திற்கு அரசியல் பாதுகாப்பு பிரதானமான காரணமாக இருந்தது. சில பிரதேசங்களில் உள்ள அரசியல்வாதிகள் போதைப் பொருளை அடையாளப்படுத்தி அழைக்கப்பட்டனர். ஆனால் தற்போது அரசியில் வாதிகளுக்கு ஆதரவு வழங்காத அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம்.

சில சமயங்களில் இதனை தடுப்பதற்காக உள்ள நிறுவனங்களின் பிரதானிகள் கூட இத்தகையோருடன் தொடர்பு வைத்திருந்தனர். கைது செய்யப்பட வேண்டிய நபரை விடுதலை செய்யும் வகையில் சாட்சியங்கள் தயார்படுத்தப்பட்டன. சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய நிறுவனங்களின் பிரதான கதிரைகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த வரலாறு உள்ளது.

ஒரு காலத்தில் இவ்வாறான அதிகாரிகளை பணம் கொடுத்து தம் பக்கம் திருப்பினார்கள். சில காலம் அதிகாரிகள் அவர்களுக்கு அடிபணிந்து செயற்பட்டார்கள்.இன்று அந்த நிலைமை முற்றாக மாறியுள்ளது. கைது செய்வதற்கான பொறிமுறை தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் ஆங்காங்கே சில விடயங்கள் நடப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தயவு செய்து அவர்களுடனான தொடர்பை கைவிடுமாறு அந்த அனைத்து அதிகாரிகளிடமும் கோருகிறேன்.தெரிவு செய்வதற்கு இரண்டு பாதைகள் உள்ளன. அவர்களுடனான தொடர்பை கைவிட வேண்டும் அல்லது தொழிலை விட்டு விலகிச் செல்ல வேண்டும்.

போதைப் பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலகத்தினருடன் தொடர்பு வைத்துக் கொண்டு பணிபுரிய ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். பொலிஸாரும் பாதுகாப்புப் படையும் இதனை ஒழிக்க பெரும் பங்காற்றுகின்றனர். போதைப் பொருளுடன் தொடர்புள்ள அதிகாரிகளினால் நேர்மையான அதிகாரிகளுக்கும் அவமரியாதையே ஏற்படுகிறது.

போதைப் பொருள் சுற்றிவளைப்பிற்கான பொறிமுறையை பலப்படுத்த பின்வாங்க மாட்டோம். பொலிஸ் அதிகாரிக்கு தகவல் வழங்கப் பயப்படுவதாக ஒரு காலத்தில் கூறப்பட்டது. தகவலை வழங்கிய பின்னர் யார் அந்த தகவலை வழங்கினார் என்பது போதை வியாபாரிக்கு சென்றுவிடும். இவை ஆங்காங்கே நடைபெற்ற சிறு சம்பவங்களாகும்.இது ஒட்டுமொத்த பொலிஸாருக்கும் அவமானமாகும்.எனவே அதனை மாற்ற வேண்டும்.

எமது நாட்டு பொதுமக்களும் போதைப்பொருளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும். உங்கள் பிள்ளை இந்த போதைக்கு அடிமையானால் என்ன நடக்கும். அந்தப் பிள்ளையின் முழு வாழ்க்கையும் நாசமாகும். பாரிய எதிர்பார்ப்புடனே அந்தப் பிள்ளைகளை வளர்த்திருப்பார்கள். அந்த எதிர்பார்ப்பு முழுமையாக வீழ்ச்சி அடையும்.

பொருமளவான இளைஞர்கள் இதற்கு அடிமையாகியுள்ளனர். ஏனைய பெற்றோர்களைப் போலவே அவர்கள் மீதும் பெற்றோர் அன்பு செலுத்தினார்கள். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த அச்சுறுத்தலை தோற்கடிக்க வேண்டும். இது எந்த வகையிலும் பின்வாங்கும் முன்னெடுப்பல்ல. வடக்கு இளைஞர்கள் ஒரு காலத்தில் யுத்தத்தில் சிக்கி பெரும் அழிவைச் சந்தித்தனர். பெற்றோர் தமது பிள்ளை குறித்து சந்தேகத்துடன் வாழும் நிலை ஏற்பட்டது. யுத்தம் நிறைவடைந்து குறுகிய காலத்தில் போதைப் பொருளுக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டது.

இதனை தோற்கடிப்பதில் பொலிஸாரும் பாதுகாப்புப் படையும் உறுதியாக உள்ளனர். எமக்கு மக்களின் உதவி தேவை. போதைக்கு அடிமையானவர் யார் என ஊர்மக்களுக்குத் தெரியும். ஆனால் ஊர்மக்கள் அவருடன் மோதுவதற்குப் பயப்படுகின்றனர். போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு நாம் பயப்பட வேண்டுமா?

அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் இந்த விடயத்தை ஆராய்வோம் நாடுமுழுவதும் ஒரு பாதுகாப்பு அரணாக ஒன்றாக பிணைந்து இந்த அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக திடஉறுதிக்கு வருவோமானால் இதனை தோற்கடிக்கலாம். போதைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க வேண்டும். அவர்களும் எமது பிள்ளைதான். அவர்களை மீட்டெடுக்கத் தவறியுள்ளோம். மாணவர்கள் கூட இதற்கு இறையாகியுள்ளனர்.

எமது பொறுப்பை தவறவிட்டுள்ளோம். முன்னர் சில நகரங்களில் தான் இந்த அச்சுறுத்தல் இருந்தது. தற்பொழுது சகல இடங்களிலும் பரவியுள்ளது. இதனுடன் இணைந்து குற்றச் செயல்களுடன் தொடர்புள்ள கும்பல்களும் உருவாகின. ஆயுதங்கள் அவர்களின் கைகளுக்குச் சென்றன.இந்த நிலை சில தசாப்தங்களாக வளர்ந்தன. அரச அதிகாரிகள்அவர்களுடன் கைகோர்த்திருந்தனர். போதைப் பொருள் பயன்படுத்துவோரை மாத்திரம் கைது செய்வதால் பயனில்லை.இதனை மேல் மட்டத்தில் இருந்து ஒழிக்க வேண்டும்.

இளம் வயதினர் சிறைகளில் உள்ளனர். போதைப் பொருளை ஒழிப்பது மாத்திரமன்றி அடிமையானவர்களுக்கு எதிர்காலத்தை ஏற்படுத்த வேண்டும். புனர்வாழ்வு நிலையங்களுக்கு அடிமையானவர்களை ஒப்படையுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் பிள்ளையை மீள ஒப்படைப்போம்.

உங்கள் பிள்ளை இறையாகும் வரை காத்திருக்க வேண்டாம். அச்சுறுத்தல் உங்கள் வீட்டின் கதவு வரை வந்துள்ளது. கதவை மூடிவைப்பதால் எந்தப் பயனுமில்லை. அது கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து விடும். பிள்ளையை எந்தளவு பாதுகாத்தாலும் சமூகத்தில் அந்த அச்சுறுத்தல் இருந்தால் உங்கள் முயற்சியால் பயன் ஏற்படாது. எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் இந்த போதைப் பொருளை முற்றாக ஒழிப்போம். அதற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்.

மக்கள் ஒன்றாக வாழும் நாடு தேவை. பல ஆண்டுகள் பிரிந்து சந்தேகத்துடன் வாழ்ந்ததால் என்ன பயன் கிடைத்தது.?எமது நாட்டில் ஒருபோதும் இனவாதம் ஏற்படாத ஒற்றுமையாக வாழும் நாட்டை உருவாக்க வேண்டும். இனவாதம் எந்தவொரு இடத்திலும் தலைதூக்க இடமளியோம். போயா தினத்தில் ‘சில்’ எடுப்பதற்காக சிரிமகா போதியை தாண்டி யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்கள். அங்கு இருப்பது குரோதம் தான். பல விகாரைகளை தாண்டி யாழ்ப்பாணத்திற்கு வழிபட வருகிறார்கள்.

அதே போன்று சிலர் ஒவ்வொரு போயா தினத்திலும் காணிக்காக, அன்றி விகாரைக்கு எதிராக ஒன்று திரள்கிறார்கள். அவர்களின் யாருடைய காணியாவது அங்கு உள்ளதா என ஆராயுமாறு புலனாய்வு பிரிவிற்கு அறிவித்துள்ளேன்.

அதிகாரம் இழந்த இனவாத குழுக்கள் மீண்டும் இனவாதத்தை தூண்ட முயல்கிறார்கள். எந்த இனவாதத்திற்கும் இடமளிக்க மாட்டோம். மக்கள் மோதிக்கொள்ளும் நாடன்றி நல்லிணக்கத்துடன் வாழும் நாடே எமக்குத் தேவை.

இலக்கியம்,கலை,இசை மற்றும் திரைப்படத்துறையில் புதிய நிலைமைகளை இங்கு ஏற்படுத்த வேண்டும். மற்றவர்கள் குறித்து குரோதத்துடன் பார்க்கும் நிலைமையை மாற்ற வேண்டும்.

நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை சிறிதளவேனும் மீற மாட்டேன். தெற்கில் சிங்கள அரசாங்கம் உள்ளது. வடக்கிற்கு தமிழ் அரசாங்கம் தேவை என முன்னர் கோரப்பட்டது. தெற்கில் இருக்கும் அரசாங்கம் தமது அரசாங்கமாக மக்கள் கருதவில்லை. ஒரு சிலரது குடும்பங்கள்,உறவினர்களுக்காக அமைக்கப்பட்ட அரசாங்கங்களே இருந்தன. மக்களின் அரசாங்கம் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கில் உள்ள மக்களும் தெற்கில் உள்ள மக்களும் தமக்கான அரசாங்கம் உருவாகியுள்ளதாக கருதுகின்றனர்.

2025 பல துறைகளில் வெற்றிகளை அடைந்த வருடமாகும். இந்த வருடம் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க இருக்கிறோம். அரச துறைக்கு 75 ஆயிரம் பேரை இணைக்கவும் பொலிஸிற்கு 10 ஆயிரம் பேரை இணைக்கவும் இருக்கிறோம்.

தமிழ்மொழியில் பேசும் பொலிஸார் எமக்குத் தேவை. பொலிஸிற்கு சென்று தமது மொழியில் முறையிடக் கூடியதாக இருக்க வேண்டும். இராணுவத்திற்கும் ஆட்சேர்க்க இருக்கிறோம். அவற்றுக்கு உங்கள் பிள்ளைகளை அனுப்புமாறு யாழ்ப்பாண பெற்றோர்களை கோருகிறோம். சகல மொழிகளிலும் பேசும் பொலிஸ் மற்றும் சகல மொழிகளிலும் செயலாற்றும் இராணுவமும் அவசியம்.

வறுமையை முற்றாக ஒழிக்கும் அரசாங்கமாக எமது அரசாங்கம் திகழும். வீடு, வருமானம், பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி, ஆரோக்கியமான வாழ்வு, மற்றும் உளரீதியான நிம்மதியுடன் எமது நாட்டு மக்கள் வாழும் நிலைமையை உருவாக்க வேண்டும். அதற்கு சில காலம் செல்லும்.

நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டை உறுதியாக முன்னெடுப்போம். வடமாகாண பாதைகளை நிர்மாணிக்க 5000 மில்லியன் ரூபா ஒதுக்கியிருந்தோம்.இந்த வருடமும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளுக்கு மத்தியிலும் போதைப் பொருளை ஒழிப்பது பிரதானமானது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு கொழும்பில் நாம் தொடங்கினோம். இன்று, அதன் வட மாகாண நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. போதைப்பொருள் அரக்கன் மக்களைச் சூழ்ந்துள்ள நிலையில், போதைப்பொருள் அரக்கனைச் சுற்றி வேறு அரக்கர்கள் உள்ளனர்.

வறுமையும் போதைப்பொருளும் ஒன்றோடொன்று இணைந்த இரண்டு தலைப்புகள். எனவே, வறுமை ஒழிப்பும் இந்தத் திட்டத்துடன் இணைந்திருக்க வேண்டும். அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி, Clean Sri Lanka திட்டமும், வறுமையை ஒழிப்பதற்கான சமூகசக்தி திட்டமும் அந்தத் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் அனைத்து வகையான அபிவிருத்தித் திட்டங்களையும் எதிர்க்கும் அரசியல்வாதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ளனர். அழைக்கப்பட்ட போதிலும், சில அரசியல் கட்சிகள் இன்று இந்த இடத்திற்கு வரவில்லை.

இருப்பினும், அனைத்து அரச அதிகாரிகளும் இன்று இங்கே உள்ளனர். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

வடமாகாண மகாசங்கத்தினர் மற்றும் மதத் தலைவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், கே.இளங்குமரன், சண்முகநாதன் பவானந்தராஜா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக குமார, வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே உட்பட பாதுகாப்புப் பிரிவுத் தலைவர்கள், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் எம். பிரதீபன் உள்ளிட்ட ஏராளமான அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *