மலையக மக்களின் நிலப் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்
மலையக மக்களின் நிலப் பிரச்சினை தொடர்பாக மக்களை அறிவூட்டுவதற்கும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் நோக்கமாகக் கொண்டு பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட மட்ட கலந்துரையாடல்களின் இரண்டாவது கலந்துரையாடல் அண்மையில் களுத்துறை மாவட்டம், மத்துகமையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.
மலையக மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளில் மிக முக்கியமானது நிலப் பிரச்சினையாகும். இதுவரை ஆட்சிக்கு வந்த எந்த அரசும் இந்த மக்களின் நிலப் பிரச்சினைக்கு நிலையான தீர்வை வழங்கவில்லை. தற்போதைய அரசும் இதற்கான தெளிவான மற்றும் செயல்திறன் கொண்ட திட்டமொன்றை முன்வைத்துள்ளதாக தெரியவில்லை.
இதனை மையமாக கொண்டு இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், மலையக மக்களின் நில மற்றும் வீட்டு உரிமைகள் குறித்த மக்களின் கருத்துகள் ஆழமாக விவாதிக்கப்பட்ட அதேவேளை களுத்துறை மாவட்டத்தில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் நிலப் பிரச்சினைகள் குறித்தும், எதிர்காலத்தில் மாவட்ட மற்றும் தேசிய மட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் மத்துகமை மற்றும் பாலிந்தனுவர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் தலைவிகள் பங்கேற்றனர். கலந்துரையாடலின் முடிவில், அடுத்த இரண்டு மாதங்களுக்கான செயல் திட்டமும் தயாரிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலை பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் (VOPP) நிறைவேற்று இயக்குநர் அன்டனி ஜேசுதாஸன், திட்ட ஒருங்கிணைப்பாளர் லவீனா ஹசந்தி, தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ராஜன் மற்றும் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே. யோகசுஜி ஆகியோர் வழிநடத்தினர்.




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
