உள்நாடு

சாய்ந்தமருது அல்- கமறூன் வித்தியாலய அதிபராக எம்.எச்.நுஸ்ரத் பேகம் கடமையேற்பு

சாய்ந்தமருது கமு/கமு/ அல்-கமறூன் வித்தியாலயத்தின் பொறுப்பு அதிபராக எம்.எச். நுஸ்ரத் பேகம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் 12 வருடங்களும் 8 மாதங்களும் 13 நாட்களும் ஆரம்பக் கல்வி ஆசிரியராக, உதவி அதிபராக, பிரதி அதிபராக, அதிபராக பல வகிபாகங்களை வகித்த திருமதி எம்.எச்.நுஸ்ரத் பேகம் தற்போது அல்- கமறூன் வித்தியாலய பொறுப்பு அதிபராகக் கடமையேற்றார்.

அவரை அல்ஹிலால் கல்வி சமூகம் வாழ்த்தி, பாராட்டி வழி அனுப்பியதோடு, அல்- கமறூன் சமூகம் அவரை வாழ்த்தி வரவேற்றதும் குறிப்பிடத்தக்கது.

கல்முனைக்குடியைச் சேர்ந்த ஷாஜகானி ஹுசையின் தம்பதிகளுக்கு மூன்றாவது புதல்வியாகப் பிறந்த எம்.எச். நுஸ்ரத் பேகம், தனது ஆரம்பக்கல்வி தொடக்கம் 13ஆம் தரம் வரை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கலைப் பிரிவில் கற்று அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரிக்கு 2000 ஆம் ஆண்டில் உள்வாங்கப்பட்டார். அங்கு பயிற்சி பெற்று ஆரம்பக் கல்வி டிப்ளோமா ஆசிரியராக பயிற்சி பெற்று, 2003 ஆம் ஆண்டு மே மாதம் 05ஆம் திகதி முதல் நியமனத்தை ஆரம்பக்கல்வி ஆசிரியராக கல்முனைக்குடி அல்மிஸ்பா வித்தியாலயத்தில் கடமையை ஏற்றுக் கொண்டார். அங்கு 2013 ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி வரை கடமையாற்றினார். அங்கு கடமையாற்றிய காலத்தில் 2012 ஆம் ஆண்டு சிறந்த ஆசிரியருக்கான குரு பிரதீபா விருதினையும் பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் 2013 ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி வரை அல்-மிஸ்பா வித்தியாலயத்தில் கடமையாற்றி, 2013 ஏப்ரல் 18 ஆம் திகதி சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்திற்கு இடமாற்றப்பட்டார். அங்கு ஆரம்பக் கல்வி ஆசிரியராக கடமையாற்றிய போது, அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, 2016 ஆம் ஆண்டு மே மாதம் 09 திகதி மூன்றாம் தர அதிபராக நியமனம் பெற்று, அல்ஹிலால் வித்தியாலயத்தில் உதவிய அதிபராகக் கடமையாற்றினார்.

அங்கிருக்கும் காலத்திலே 2022 மே மாதம் 09ஆம் திகதி இரண்டாம் தர அதிபராகப் பதவி உயர்வு பெற்றார்.

இவர் கல்விமானிப் பட்டத்தை 2014 இல் பூர்த்தி செய்தவர். அத்தோடு, தேசிய கல்வி நிறுவகத்தில் பாடசாலை மட்ட முகாமைத்துவம் என்னும் (DSM) கற்கை
நெறியையும் 2021 ஆம் ஆண்டில் நிறைவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *