உள்நாடு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 36 ஊடகவியலாளர்களுக்கு மீடியா போரத்தினால் நிவாரண உதவி

‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து, ஊடக சமூகத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில், நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட 36 ஊடகவியலாளர்களுக்கான விரிவான நிவாரணத் திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் பூர்த்தி செய்துள்ளது.

அனர்த்தத்தின் பாரதூரமான விளைவுகளை கருத்திற் கொண்டு அங்கத்தவர்களுக்கு மாத்திரமன்றி சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் அனைவரையும் உதவிகள் சென்றடையும் வகையில் இத்திட்டம் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

கொழும்பு, கண்டி, புத்தளம், கம்பஹா, பதுளை, கேகாலை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அனர்த்தத்தினால் வாழ்வாதாரம் மற்றும் உடைமைகளை இழந்த ஊடகவியலாளர்களுக்கே இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

இதற்கமைய துப்புரவு சாதனங்கள், உலருணவுப் பொதிகள் மற்றும் அத்தியாவசிய வீட்டுப் பாவனைப் பொருட்கள், சமையலறை உபகரணங்கள் மற்றும் நிதி உதவிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிவாரணப் பணிக்கு கட்டார் சரிட்டியின் (Qatar Charity) இலங்கை அலுவலகம், ஜே.ஜே. பவுண்டேசன் தலைவர் முஹம்மத் ஹனீப் மற்றும் தொழிலதிபர் பீர்கான் றிஸ்வி ஆகியோர் பங்களிப்புகளை வழங்கியிருந்தனர்.

இதேவேளை பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதிகள் கொழும்பு, கண்டி, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஊடகவியலாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக விஜயம் செய்து அவர்களுடன் கலந்துரையாடினர்.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் தமது தொழில்சார் உபகரணங்களை இழந்த இரண்டு ஊடகவியலாளர்களுக்கு, கொழும்பு மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனத்துடன் இணைந்து ஊடக உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியையும் போரம் முன்னெடுத்துள்ளது.

“அனர்த்த பாதிப்புகளுக்கு மத்தியிலும் பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதில் ஊடகவியலாளர்கள் முதன்மையானவர்களாகச் செயற்படுகிறார்கள்.

அதேவேளை அவர்களும் பல்வேறுபட்ட இழப்புகளை எதிர்கொள்கிறார்கள். அந்த வகையில் இந்த நெருக்கடியான சூழலில் நிவாரண உதவிகளுக்கு அப்பால் அவர்களது வீடுகளுக்கு நேரில் விஜயம் செய்து ஆறுதல் கூறியதன் மூலம் ஊடகவியலாளர்களுக்கிடையிலான சகோதரத்துவ பிணைப்பை மேலும் வலுப்படுத்த முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது”என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் எம்.பி.எம். பைறூஸ் தெரிவித்தார்.

இந்தப் பணியை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் பங்களித்த நிறுவனங்கள், தனவந்தர்கள் மற்றும் அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களுக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.

இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால், அனர்த்த காலங்களில் ஊடகவியலாளர் சமூகத்தின் நலனை உறுதிப்படுத்துவதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *