ஒருவரை ஒருவர் மதித்து, கருணையுடன் கூடிய சமுதாயத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கட்டும்; எதிர்க்கட்சித் தலைவரின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி
பல இனங்கள், பல மதங்கள் மற்றும் பல மொழிகள் கொண்ட சமுதாயத்தின் இருப்பு உறுதிப்படுத்தப்படுவது, அந்தந்த இனங்களின் கலாசார அடையாளங்களை மதிக்க அனைவரும் காட்டும் அர்ப்பணிப்பின் அடிப்படையிலாகும். அதேபோல் அந்தந்த கலாசாரங்களின் மையக் கருத்துகளை சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதிலுமாகும் இந்து பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தைப்பொங்கல் விழா நமக்குச் சொல்லித் தரும் பாடத்தை நன்றாக அறிந்துகொண்டால், அது நமது வாழ்க்கையில் மிகப்பெரிய பயனாக இருக்கும்.
நன்றியுணர்வு பற்றி தைப்பொங்கல் விழா நமக்கு நினைவூட்டுவது, இயற்கைக்கு, உயிரினங்களுக்கு கூட நமது அன்பு, கருணை, மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்பதேயாகும். தற்போதைய உலகில் நாம் எதிர்கொண்டுள்ள இயற்கைப் பேரிடர்கள் மற்றும் மோதல்கள் அனைத்திற்கும் காரணம் இயற்கையும் மனித மனமும் கடுமையாக சிதைந்திருப்பதேயாகும். தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டியதும் புரிந்துகொள்ள வேண்டியதும், அந்த விழாவின் பல்வேறு நிகழ்வுகளில் கொண்டாடப்படும் கலாசார அம்சங்களின் ஆழமான பொருளேயாகும்.
இந்தத் தருணத்தில் நமது பொறுப்பு, அந்த தூரநோக்கையும் தத்துவத்தையும் சமுதாயத்திற்கு வழங்குவதற்கான வழிகளை முடிந்த அளவு விரிவுபடுத்துவதாகும். பாடசாலைகள், அறநெறி பாடசாலைகள், விகாரைகள், கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் ஆகியவை அடிப்படையில் அந்தந்த மதத்தினருக்கு உரிய கலாசார மற்றும் மத நிகழ்வுகள் பற்றிய முறையான அறிவை வழங்க தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் ஒருவரையொருவர் மதித்து, கருணையுடன் கூடிய சமுதாயத்தை உருவாக்க நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.
தைப்பொங்கல் விழாவின் உண்மையான பொருளைப் புரிந்துகொண்டு, இந்த கலாசார விழாவைக் கொண்டாட அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும் என்று மனதாரப் பிரார்த்திக்கிறேன்.
சஜித் பிரேமதாச
இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
