உறுதியுடனும், ஒற்றுமையுடனும் சவால்களை வென்று “வளமான நாடு – அழகான வாழ்க்கையை” கட்டியெழுப்புவோம்; ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி
உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது.
வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக் கடவுளுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கை அன்னைக்கும், நன்றி உணர்வை எடுத்தியம்பும் கொண்டாட்டமாக தைப்பொங்கல் தினம் அமைகின்றது. செழிப்பு மற்றும் நன்றியுணர்வை அடையாளப்படுத்தும் தைப்பொங்கல் பண்டிகை, சிறந்த விளைச்சலுக்கு நன்றி பாராட்டும் ஒரு நிகழ்வு மாத்திரமன்றி, எதிர்காலத்தில் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதற்கான அழைப்பாகவும் அமைகிறது.
அண்மையில் நாம் சந்தித்த மிகப் பாரிய இயற்கைப் அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஒரு தேசமாக மீண்டெழும் நம்பிக்கையுடனும் அயராத முயற்சி மற்றும் உறுதியுடனும், இதுவரை இல்லாத அளவிலான பாரிய புனரமைப்பு செயற்பாட்டில் நாம் ஒன்றாக கைகோர்த்துள்ளோம். அந்த வேலைத்திட்டத்துடன் மென்மேலும் வலுவாக கைகோர்க்க முன்வருமாறு சுபீட்சமான எதிர்பார்ப்புடன் இந்தத் தைப்பொங்கல் திருநாளில், நான் அனைவரிடமும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், இயற்கையுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய அவசியம் முன்னெப்போதையும் விட அதிகமாக உணரப்படும் இந்த நேரத்தில், இயற்கையுடன் ஆழமாக இணைக்கப்பட்ட தைப் பொங்கல் பண்டிகை, நமது வாழ்க்கைக்கும் சமூகத்திற்கும் உயர்வான அர்த்தத்தைச் சேர்க்கிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். எந்தவொரு இருளுக்கும் பிறகு ஒளி பிறக்கும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். உறுதியுடனும் ஒற்றுமையுடனும் சவால்களை வென்று ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்புவதற்கான பயணத்திற்கு இவ்வருட தைப் பொங்கல் பண்டிகை சிறந்த ஆசிர்வாதமாக அமைய பிரார்த்திக்கிறேன்.
இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான தைப்பொங்கல் தின வாழ்த்துகள்.
அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2026 ஜனவரி 15 ஆம் திகதி
