கற்பிட்டி கண்டக்குளி கடற்பரப்பில் 108,480 மருந்து மாத்திரைகளை கைப்பற்றிய கடற்படை
கற்பிட்டி கண்டக்குளி கடல் பகுதியில் திங்கட்கிழமை (12) இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு லட்சத்து எட்டாயிரத்து நானூற்று எண்பது (108,480) மருந்து மாத்திரைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயாவின் கண்டக்குளி கடற்படைப் பிரிவினால் கண்டக்குளி கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் கைவிடப்பட்ட இரண்டு (02) படகுகள் பரிசோதிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட ஒரு லட்சத்து எட்டாயிரத்து நானூற்று எண்பது (108,480) மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகவும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மருந்து மாத்திரைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டில், கடற்படையால் நடத்தப்பட்ட நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பதினாறு லட்சத்து எண்பத்து மூவாயிரத்து எழுநூற்று இருபத்தி இரண்டு (1,683,722) மருந்து மாத்திரைகளை கடற்படை கைப்பற்றி, மேலும் சட்ட நடவடிக்கைக்காக அனுப்பியுள்ளது.
கடல் வழியாக கடத்தல் உள்ளிட்ட இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதில் கடற்படை தொடர்ந்து பங்களிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
