147 வது வருட புனித ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ் பராயன மஜ்லிஸின் தமாம் வைபவம் 20ம் திகதி
வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை மாளிகாசேனை பைத்துல் முபாரக் வதாருல் முஸ்தபா புஹாரி தக்கியாவில் 147 வது வருட புனித ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ் பராயன மஜ்லிஸின் தமாம் வைபவம் 20ம் திகதி (20.01.2026)செவ்வாய்க் கிழமை காலை நடைபெறும்.
காதிரிய்யத்துன் நபவிய்யா தரீக்காவின் ஆண்மீகத் தலைவர் அல்-ஆலிமுல் பாழில் அஷ்ஷெய்கு காமில் நாயகம் சங்கைக்குரிய அஹமத் ஆலிம் பின் அஷ்ஷெய்க் முஹம்மத் ஆலிம் – காதிரிய்யதுன் நபவி அவர்கள் தலைமை வகிப்பார்.
மேற்படி மஜ்லிஸ் கடந்த 2025.12.17ம் திகதி அதிகாலை ஆரம்பமானதோடு வெள்ளிக் கிழமை தவிர தொடர்ந்து 29 நாட்கள் ஹதீஸ் பராயனம் மற்றும் விளக்கவுரை இடம்பெற்று வருகிறது. புனித புகாரி மஜ்லிஸின் 10ம் தினமும் 16ம் தினமும் முக்கிய தினங்களாகும். தினமும் நடைபெறும் இப் புனித மஜ்லிஸில் ஆயிரக் கணக்கானோர் பங்குபற்றி வருகின்றமை விசேட அம்சமாகும். அத்தோடு 2026 ஜனவரி 20ம் திகதி தமாம் பெரிய கந்தூரி மஜ்லிஸுடன் நிறைவுபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தமாம் மஜ்லிஸில் சாதாத்மார்கள், உலமாக்கல், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், புத்திஜீவிகள், காதிரிய்யதுன் நபவிய்யா தரீக்காவின் முரீதீன்கள், மற்றும் ஏனைய தரீக்காக்களின் இஃவான்கள் நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த முஸ்லிம்கள் பங்குபற்றுவர்.
2026 ஜனவரி மாதம் 20ம் திகதி நடைபெறும் புனித புஹாரி மஜ்லிஸ் தமாம் வைபவத்தை முன்னிட்டு வழமைபோல் இலங்கை ரயில்வே திணைக்களம் ஜனவரி 19ம் திகதியும், 20 ம் திகதியும் கொழும்பு – அளுத்கமை, காலி – அளுத்கமை இடையில் விஷேட ரயில் சேவைகளை நடாத்தும். மேற்படி இரு தினங்களிலும் கரையோர ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படும் சகல கடுகதி ரயில் வண்டிகளும் பேருவளை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தோடு மத்திய போக்குவரத்துச் சபை விஷேட பஸ் சேவைகளையும் நடாத்தவுள்ளது. பேருவளை பொலிஸார் பாதுகாப்பு ஏற்பாடுளை மேற்கொள்வர்.
(பேருவளை பீ.எம். முக்தார்)
