உள்நாடு

“தஜ்தீத்” எனும் தலைப்பில் ஜம்இய்யாவினால் நடத்தப்பட்ட ஒரு சிறந்த முன்மாதிரிமிக்க முஸ்லிம் சமுதாயத்தை நோக்கிய பயணத்திற்கான விசேட நிகழ்வு

2026 ஜனவரி 10ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் ‘தஜ்தீத்’ எனும் தலைப்பில்’ ஒரு சிறந்த முன்மாதிரி முஸ்லிம் சமுதாயத்தை நோக்கிய புதிய பயணம்’ எனும் கருப்பொருளிலான விசேட நிகழ்வொன்று தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் தெஹிவளை முஹியத்தீன் ஜுமுஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.

ஒரு முன்மாதிரியான முஸ்லிம் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான ஜம்இய்யாவின் முன்னெடுப்புகளை, முயற்சிகளை சமூக மட்டத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் துறைசார்ந்தவர்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களையும் இப்பயணித்தில் உள்வாங்கி செயற்படும் நோக்கில் இந்நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக அஷ்-ஷைக் எஸ்.எம். ஷிப்லீ அவர்களால் அல்-குர்ஆன் பாராயணம் செய்யப்பட்டது.

அதனை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஜம்இய்யாவின் அழைப்பையேற்று வருகை தந்திருந்த ஆலிம்கள், சமூக முக்கியஸ்தர்கள் மற்றும் துறைசார்ந்தவர்களை வரவேற்கும் முகமாக ஜம்இய்யாவின் உப பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப் அவர்கள் வரவேற்புரையினை நிகழ்த்தினார்.

வரவேற்புரையினை தொடர்ந்து, ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் வஹியுடனான உறவு, சமூகத்திற்கான பணியில் ஆலிம்களுடன் கைகோர்த்து செயற்படல், எப்போதும் சிறந்த தொடர்புகளை பேணுதல் ஆகிய விடயங்களை முன்னிருத்தி பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து, ஜம்இய்யாவின் உப தலைவர்கள் ஒவ்வொருவரும் தமக்குக் கீழ்வரும் உப பிரிவுகளின் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் குறித்து விளக்கங்களை வழங்கியதுடன் அவற்றின் குறை நிறைகளையும் சபையில் தெளிவுபடுத்தினர்.

அந்த வகையில், அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவு மற்றும் இளைஞர் விவகாரப் பிரிவு ஆகியவற்றின் தவிசாளராக இருக்கும் உப தலைவர் அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் ஹாலிக் அவர்கள் அப்பிரிவுகள் தொடர்பான விளக்கங்களை வழங்கினார்.

தஃவா பிரிவு, ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு மற்றும் ஆலிம்கள் விவகாரப் பிரிவு ஆகியவற்றின் தவிசாளராகவுள்ள உப தலைவர் அஷ்-ஷைக் எச். உமர்தீன் அவர்கள் அப்பிரிவுகள் குறித்து விளக்கமளித்தார்.

அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவு மற்றும் கல்வி விவகாரப் பிரிவு ஆகியவற்றின் தவிசாளரான உப தலைவர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா அவர்கள் குறித்த பிரிவுகள் தொடர்பில் தெளிவுகளை வழங்கினார்.

பிறைக் குழு, ஊடகப் பிரிவு மற்றும் கிளைகள் விவகாரப் பிரிவு ஆகியவற்றின் தவிசாளரான உப தலைவர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் அவர்கள் அப்பிரிவுகள் குறித்து தெளிவுகளை வழங்கினார்.

சமூக சேவைப் பிரிவின் தவிசாளராகவுள்ள உப தலைவர் அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி அவர்கள், அப்பிரிவு குறித்து தெளிவுகளை வழங்கினார்.

உப தலைவர்களின் உரைகளை அடுத்து, ஜம்இய்யாவின் பொருளாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான் அவர்கள் ஜம்இய்யாவின் நிதி விவகாரம் மற்றும் வரவு செலவுகள் குறித்து மிகத் தெளிவான முறையில் தரவுகளை முன்வைத்து விளக்கினார்.

அதனை அடுத்து, ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் தீனை பாதுகாப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தியதுடன் இந்நாட்டில் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள வரப்பிரசாதங்கள் மற்றும் அவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

அத்தோடு இஸ்லாமிய நிதி முறைமை, ஹலால் முறைமை போன்ற விடயங்களினால் நாட்டுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட நலவுகள் குறித்து தலைவர் அவர்கள் தெளிவுபடுத்தியதுடன் சந்தேகங்களை உரிய விதத்தில் கேட்டுத் தெளிவு பெறவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தலைவரது உரையினை தொடர்ந்து உப பிரிவுகளின் தலைவர்களுக்கும் நிகழ்விற்கு வருகை தந்த துறைசார்ந்தவர்களுக்கும் இடையிலான குழுக் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இதில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் ஆலோசனைகளும் பெறப்பட்டன.

குழுக் கலந்துரையாடலை தொடர்ந்து ஜம்இய்யாவின் பொது முகாமையாளர் எஸ். ஜவாஹிர் சாலி அவர்கள் ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தின் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவாக விளக்கங்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, UWT நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஜம்இய்யாவினால் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ஜுஸ்உ அம்ம பிரதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

இறுதியாக, ஜம்இய்யாவின் உப பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம் அவர்கள் நன்றியுரையினை வழங்கினார். அவர் தனது உரையில் அழைப்பினை ஏற்று வருகை தந்திருந்த ஆலிம்கள், கல்விமான்கள், தனவந்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் துறைசார் முக்கியஸ்தர்களுக்கும், இந்நிகழ்ச்சியினை நேர்த்தியாக தொகுத்து வழங்கிய ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் செயலாளரும் கொழும்பு மாவட்ட ஜம்இய்யாவின் தலைவருமான அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் அவர்களுக்கும், நிகழ்வுக்கான அத்தனை பங்களிப்புகளையும் செய்துதவிய கொழும்பு மாவட்ட ஜம்இய்யா மற்றும் தெஹிவளை முஹியத்தீன் ஜுமுஆ பள்ளிவாயல் நிர்வாகம் ஆகியவற்றிற்கும் ஜம்இய்யா சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *