மூன்றாவது மாபெரும் தேசிய அல்குர்ஆன் மனனப் போட்டி பரிசளிப்பு விழாவுக்கு ஹிஸ்புல்லாஹ் எம்.பி வாழ்த்து
புனித அல்குர்ஆனுக்காக சவூதி அரேபியா மேற்கொண்டு வரும் சேவைகள் உலகளாவிய அளவில் அளப்பரியவையாகும். அல்குர்ஆன் கல்வி மற்றும் மனனத்தை இளம் தலைமுறையினரிடையே வலுப்படுத்துவதில் சவூதி அரேபியா தொடர்ச்சியாக ஆற்றி வரும் பங்களிப்புகள் இஸ்லாமிய உலகிற்கே ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றன.
அந்த உயரிய சேவையின் ஒரு பகுதியாக, இலங்கைக்கான சவூதி அரேபியா தூதரகம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து நடத்தும் மூன்றாவது மாபெரும் தேசிய அல்குர்ஆன் மனனப் போட்டியின் பரிசளிப்பு விழா இன்று நடைபெறுகின்றமை பெருமைக்குரியதாகும்.
இவ்விழா சிறப்பாக அமைய இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இன்று (12) அவர் வெளியிட்ட விஷேட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறுப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கைக்கான சவூதி அரேபியா தூதுவர் மாண்புமிகு காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள், இலங்கை மக்களுக்காகவும் இஸ்லாமிய சமுதாயத்தின் ஆன்மிக மற்றும் கல்வி மேம்பாட்டிற்காகவும் ஆற்றிவரும் அர்ப்பணிப்புமிக்க சேவைகள் பாராட்டத்தக்கவையாகும் என்றும், இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் அவரது முயற்சிகள் தொடர்ந்தும் வெற்றியடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
(எஸ். சினீஸ் கான்)
