தேசிய ரீதியில் நடைபெறும் 3வது அல்குர்ஆன் மனனப் போட்டி; நாளை இறுதிச்சுற்றும், நாளை மறுதினம் பரிசளிப்பு விழாவும்
புனித அல்குர்ஆனுக்கு சவூதி அரேபியா அளித்து வரும் சேவைகள் உலகளாவிய அளவில் அளப்பரியவை. அல்குர்ஆன் கல்வி, மனனம் மற்றும் அதன் போதனைகளை இளம் தலைமுறையினரிடையே வேரூன்றச் செய்வதில் சவூதி அரேபியா தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் முயற்சிகள் இஸ்லாமிய உலகிற்கே ஒரு முன்மாதிரியாகத் திகழ்கின்றன. அந்த உன்னதச் சேவைகளின் ஒரு பகுதியாக, உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் பெரும் நிதியுதவியுடன் அல்குர்ஆன் மனனப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இலங்கையிலும் இளம் தலைமுறையினரிடையே அல்குர்ஆன் மனனத் திறனை ஊக்குவிக்கும் உயரிய நோக்குடன், இலங்கைக்கான சவூதி அரேபியா தூதரகம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்தும் 3வது மாபெரும் தேசிய அல்குர்ஆன் மனனப் போட்டி தற்போது அதன் இறுதிப் பகுதியை அடைந்துள்ளது.
இந்தப் போட்டியின் இறுதிச்சுற்று நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (11) ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதுடன்,
வெற்றியாளர்களை கௌரவிக்கும் பரிசளிப்பு விழா நாளை மறுதினம் திங்கட்கிழமை (12) ஆம் திகதி கொழும்பு ITC ஹோட்டலில் மிகப் பிரம்மாண்டமாக இடம்பெறவுள்ளது.
இலங்கையின் முக்கிய மாவட்டங்களான கொழும்பு, கண்டி, குருநாகல் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நடைபெற்ற முதற்கட்ட தெரிவுப் போட்டிகளில், நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் நான்கு பிரிவுகளில் பங்கேற்றனர். இவர்களில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி தெரிவு செய்யப்பட்ட இளம் ஹாபிழ்களே இவ்விறுதிச் சுற்றில் தங்களது மனனத் திறனை வெளிப்படுத்தவுள்ளனர்.
இந்தப் போட்டியானது சவூதி அரேபிய இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சின் முழுமையான நிதியுதவியுடன் நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாட்டுப் பணிகளை இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
இந்த உன்னத நிகழ்வை
இலங்கைக்கான சவூதி அரேபியாவின் கௌரவத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி
மற்றும்
சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதரகத்தின் மார்க்க விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி அஷ்ஷேக் பத்ர் பின் நாஸிர் அல் அனஸீ
ஆகியோர் நேரடியாகக் கண்காணித்து வழிநடத்தி வருகின்றனர்.
புனித அல்குர்ஆனை பாதுகாத்து, அதன் போதனைகளை உலகம் முழுவதும் பரப்புவதில் தன்னிகரற்ற பங்களிப்பை வழங்கி வரும் இரு புனித பள்ளிவாசல்களின் காவலர், சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அவர்களுக்கும்,
அதேபோன்று அல்குர்ஆன் சேவைகளையும் இஸ்லாமியப் பணிகளையும் உலகளாவிய ரீதியில் விரிவுபடுத்தி வரும் இளவரசர் முகம்மத் பின் சல்மான் அவர்களுக்கும்,
இத்தகைய உன்னத முயற்சிகளை இலங்கையில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வரும் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களுக்கும், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பது காலத்தின் தேவை ஆகும்.
இலங்கை – சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான சமய மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய பாலமாக இந்த அல்குர்ஆன் மனனப் போட்டி அமையவுள்ளது.
புனித அல்குர்ஆனை நெஞ்சங்களில் ஏந்தியுள்ள இளம் ஹாபிழ்களை கௌரவிக்கும் இந்த விழா, ஆன்மீக எழுச்சியையும் சமூக ஒற்றுமையையும் வளர்க்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக திகழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.



(எஸ். சினீஸ் கான்)
