சேதமடைந்த வீதி மறுசீரமைப்பிற்கு சவுதி மேலும் 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவி
டிட்வா புயலால் சேதமடைந்த வீதிகளை மறுசீரமைப்பதற்காக சவுதி மேம்பாட்டு நிதியத்திலிருந்து இலங்கை மேலதிகமாக 06 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் சவுதி மேம்பாட்டு நிதியத்தின் மூத்த அதிகாரிகள் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.
சவுதி பிரதிநிதிகள் குழுவில் மூத்த நிபுணர் முகமது அல்-மசூத், மூத்த கடன் நிபுணர் அப்துல்ரஹ்மான் எம். அல்-சோகெய்ர் மற்றும் திட்ட ஆய்வாளர் பைசல் அல்-முலித் ஆகியோர் அடங்குவர்.
அமைச்சின் செயலாளர் டொக்டர் கபில பெரேராவும் இந்த கலந்துரையாடல்களில் கலந்து கொண்டனர்.
சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய வளர்ச்சிப் பாதை, டிட்வா புயலின் தாக்கம் மற்றும் பேரழிவை எதிர்கொள்ள அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து சவுதி அதிகாரிகளுக்கு அமைச்சர் விளக்கினார்.
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அண்மைய பொருளாதார முன்னேற்றம் குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டது.
சவுதி மேம்பாட்டு நிதியம் ஏற்கனவே இலங்கை முழுவதும் வளர்ச்சித் திட்டங்களில் சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலதிகமாக டிட்வா புயலால் சேதமடைந்த வீதி உட்கட்டமைப்பை பழுதுபார்ப்பதற்கும் மறுசீரமைப்பதற்கும் குறிப்பாக 06 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளிக்கவும் சவுதி பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திட்ட செயல்படுத்தல் மற்றும் காலக்கெடு குறித்த மேலதிக விபரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
