உள்நாடு

சவுதி அரேபியாவின் ஏற்பாட்டில் இலங்கையில் மூன்றாவது தடவையாகவும் அல் குர்ஆன் மனனப்போட்டி பரிசளிப்பு விழா..!

சவுதி அரேபியாவின் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சின் ஊடாக இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி இலங்கையின் முஸ்லிம் சமய, கலாசார அமைச்சின் மூலம் ஏற்பாடு செய்து மூன்றாவது வருடமாக நடத்திய தேசிய அல் குர்ஆன் மனனப் போட்டியின் பரிசளிப்பு வைபவம் நாளை 12 ஆம் திகதி (12.01.2026) கொழும்பு ஐ.டி.சி ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது.

சவுதி இலங்கைக்கான தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி தலைமையில் நடைபெறும் இவ்வைபவத்தில் சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சின் விஷேட பிரதிநிதிகளாக கலந்து கொள்ளவுள்ளதோடு இலங்கை புத்தசாசன மத விவகார அமைச்சர் சுனில் ஹந்துனிம பிரதமஅதிதியாகக் கலந்து கொள்கிறார். அத்தோடு இந்நாட்டு அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வௌிநாட்டுத் தூதுவர்கள், புத்திஜீவிகள், உலமாக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவிருக்கின்றனர்.

சவுதி அரேபிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கொழும்பிலுள்ள சவுதி தூதரகமும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களமும் இணைந்து இலங்கையின் ஹாபிழ் ஹாபிழாக்களுக்காக (அல் குர்ஆனை மனனம் செய்தவர்கள்)தேசிய அல் குர்ஆன் மனனப் போட்டி நடத்தப்படுகிறது. இதன் நிமித்தம் பல சுற்றுத் தெரிவு நடத்தப்பட்டு இறுதி வெற்றியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கே இப்பரிசளிப்பு இடம்பெறுகிறது. இப்பேட்டியின் ஊடாக 24 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு அவர்களுக்கென சுமார் ஒன்றரை கோடி ருபாவுக்கும் மேற்ப்பட்ட பெறுமதியான பணப்பரிசில்கள் வழங்கப்படவிருக்கிறது.

சவுதிக்கும் இலங்கைக்குமிடையில் நீண்ட கால நட்புறவு நிலவிவருகிறது. இதன் பயனாக இவ்வாறானதொரு பாரிய போட்டியை நடத்தி பரிசளிப்பது மகிழ்ச்சியான விடயமாகும். இதன் ஊடாக அல் குர்ஆனின் சிறப்புக்களை முஸ்லிம்கள் மத்தியில் கொண்டு செல்லவும் அல் குர்ஆன் போதிக்கின்ற மத நல்லிணக்கம், நடுநிலைப் பேணல் போன்ற விடயங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் வழிவகை செய்யப்படுகிறது.

ஆரம்ப காலம் முதல் சவுதி அல் குர்ஆனுக்கும் அஸ்ஸுன்னாவுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வரும் நாடாகும். இதனை அனைவரும் அறிவர். அந்த வகையில் சவுதி அரேபியாவுக்குள்ளேயும் உலக நாடுகளிலும் அல் குர்ஆன் மனனப்போட்டிகள் தொடர்ந்தும் நடாத்தப்பட்டு வருகின்றன. இதன் நிமித்தம் வருடாவருடம் பல மில்லியன் ரியால்கள் ஏற்பாடுகள் மற்றும் பரிசில்களுக்காக செலவிடப்படுகிறது.

அந்த வகையில் முன்னாள் மன்னர் மறைந்த அப்துல் அஸீஸ் மற்றும் தற்போதைய மன்னரும் இரு புனிதப் பள்ளிவாசல்களின் பாதுகாவலருமான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் ஆகியோரின் பெயரில் பெருந்தொகைப் பணப் பரிசில்களுடன் தேசிய, பிராந்திய, சர்வதேச அல் குர்ஆன் மனனப் போட்டிகளை சவுதி அரேபியா தொடர்ந்தும் நடத்தி வருகிறது.

அண்மையில் கூட புனித மக்காவில் பிரமாண்ட ஏற்பாடுகளுடன் சர்வதேச அல் குர்ஆன் மனனப் போட்டியொன்று நடத்தப்பட்டது. அதில் உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஹாபிழ்கள், ஹாபிழாக்கள் கலந்து கொண்டு இலட்சக்கணக்கான ரியாழ்கள் பெறுமதியான பரிசில்களை வெற்றி பெற்றனர். தற்போதும் மன்னரும் இரு புனிதப் பள்ளிவாசல்களின் பாதுகாவலருமான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸின் பெயரில் மாபெரும் அல் குர்ஆன் போட்டியொன்று சவுதியில் சுமார் 60 கோடி ருபா பணப்பரிசில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இத்தகைய அல் குர்ஆன் மனனப் போட்டிகள் உலகின் பல நாடுகளிலும் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் மற்றும் இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் மற்றும் சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார மற்றும் தஃவா வழிகாட்டல் அமைச்சர் கலாநிதி அஷ்ஷைக் அப்துல் லதீப் பின் அப்துல் அஸீஸ் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இது உலகளாவிய முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும் அந்தந்த நாடுகளின் தலைவர்களாலும் வெகுவாகப் பாராட்டப்படுகிறது.

அந்த வகையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம் நவாஸ், உதவிப் பணிப்பாளர், மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களினதும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின், மாவட்ட, பிரதேச மட்டத்தில் உள்ள கலாசார உத்தியோகத்தர்களின் பூரண பங்களிப்புகளுடனும் கண்ணியத்துக்குரிய தாயிஈ மௌலவிகளின் பூரண பங்களிப்புகளுடனும் பல கட்டங்களாக இப்போட்டிக்கான தெரிவுகள் இடம்பெற்றது. அவர்களில் ஆண் ஹாபிழ்களும் பெண் ஹாபிழ்களும் அடங்கியுள்ளனர். அவர்களுக்கு பல இலட்ச ரூபாய் பணப்பரிசில்களாக வழங்கி வைக்கப்பட உள்ளன. அத்தோடு சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை தூதரகம் மேற்கொண்டுள்ளது.

தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி தலைமையில் கொழும்பு ஐ.டி.சி ஹோட்டலில் நடைபெறவிருக்கும் இப்பரிசளிப்பு விழாவில் புத்தசாசன மற்றும் மத விவகார கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி பிரதம அதிதியாகவும் துணைத்தூதுவர் யாசர் அல் ஹாஸிமி, சவுதியின் இந்தியப் பிராந்தியத்தின் இஸ்லாமிய விவகாரப் பொறுப்பாளர் அஷ்ஷைக் பத்ர் நாசிர் அல் அனஸி, சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் விசேட விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர். அத்தோடு இந்நாட்டு அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள், முஸ்லிம் சமய, கலாசார திணைக்கள பணிப்பாளர், நிறுவன தலைவர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் இவ்விழாவில் பங்குபற்ற உள்ளனர்.

அந்த வகையில் இலங்கை வரலாற்றில் சவுதி அரேபிய ஏற்பாட்டிலான முதலாவது அல் குர்ஆன் மனனப் போட்டி கடந்த 2023ல் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி தலைமையிலும், சவுதி அரேபியாவின் இந்தியப் பிராந்தியத்தின் இஸ்லாமிய விவகாரப் பொறுப்பாளர் அஷ்ஷைக் பத்ர் நாசிர் அல் அனஸியின் நேரடி கண்காணிப்பிலும் அந்நாட்டின் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சினூடாக நடத்தப்பட்டது. அப்போட்டியின் பரிசளிப்பு விழாவுக்கு சவுதி அரேபிய இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சினது உயர் அதிகாரிகள் பலரும் இலங்கைக்கு வருகை தந்து கலந்து சிறப்பித்தனர். அவ்விழா இலங்கையில் பாரிய பாராட்டைப் பெற்றது.

கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலில் நடாத்தப்பட்ட இப்பரிசளிப்பு விழாவில் இரண்டரை இலட்சம் ரியால்கள் (அப்போதைய இலங்கை நாணயப்படி இரண்டு கோடி 25 இலட்சம் ரூபாய்) பணப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. அதே போன்று அதே பரிசுத் தொகையில் இரண்டாவது தடவையாகவும் மாபெரும் போட்டியை நடாத்தியது. அப்போட்டியில் கலந்து கொண்ட கண்பார்வையற்ற சில ஹாபிழாக்கள் பரிசுத் தொகைக்கு மேலதிகமாக விஷேடமாக அவர்களது பெற்றோர்களுடன் இலவச உம்ராவுக்கும் அனுப்பப்பட்டார்கள்.

குறிப்பாக ஹாபிழ்கள் உலகில் எங்கிருந்தாலும் அவர்களை அதிஉச்ச அளவில் கௌரவிப்பது சவுதி அரேபியாவின் மன்னர் உள்ளிட்ட அனைவரதும் பாரம்பரியமாகும். அதனை அடிப்படையாகக் கொண்டு தான் காத்தான்குடியைச் சேர்ந்த கண்பார்வையை இழந்த முக்பில் ஸினான் எனும் ஹாபிழ் உட்பட பல ஹாபிழ்களை தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி தூதரகத்திற்கே அழைத்து கௌரவித்து குடும்பத்தினருடன் உம்ரா கடமையை நிறைவேற்றவும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

அந்த வகையில் சவுதி அரேபியா இலங்கையில் மூன்றாவது தடவையாகவும் இன்று அல் குர்ஆன் மனனப் போட்டியை ஏற்பாடு செய்து நடத்துகிறது. அதற்கான ஏற்பாடுகள் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இப்போட்டியில் பங்குபற்றுவதற்கான தெரிவும் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளும் சவுதி அரேபிய தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பூரண ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அஷ்ஷைக் எம்.எச்.ஷைஹுத்தீன் மதனி (BA Hones)
பணிப்பாளர், அல் ஹிக்மா நிறுவனம், கொழும்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *