உலகம்

ஈரான் போராட்டம்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு

ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டொலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது. 

பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர். 

போராட்டக்காரர்களைக் கலைக்கப் பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும். பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. 

இந்நிலையில், வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

போராட்டங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அது பலனளிக்கவில்லை. ஈரான் முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது. மேலும், ஈரான் முழுவதும் இணையம் மற்றும் கையடக்க தொலைபேசி சேவைகள் முடக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *