மு.கா உறுப்பினரின் பதவி இரத்து
கட்சியின் ஒழுக்க விதிமுறைகளை கடுமையாக மீறியதன் காரணமாக கொழும்பு மாநகர சபை உறுப்பினரான ஸோஹரா புஹாரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் எம். நிசாம் காரியப்பர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொழும்பு மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு–செலவுத் திட்டத்துக்கு, எதிர்க்கட்சியாக உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெளிவாக எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்திருந்த நிலையில், அதனை மீறி ஸோஹரா புஹாரி அந்த வரவு–செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை, கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு முரணானதாகும்.
இதனையடுத்து, கடந்த 2025 டிசம்பர் 31ஆம் திகதி, கட்சி ஒழுக்கத்தை கடுமையாக மீறியதாகக் குறிப்பிட்டு, அவரின் கட்சி உறுப்பினர் பதவி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதுடன் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு வாரத்திற்குள் சத்தியகடதாசி வாக்குமூலமாக விளக்கம் அளிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எவ்வித விளக்கமும் அல்லது சத்தியக்கடதாசியும் சமர்ப்பிக்கப்படாததன் காரணமாக, குற்றச்சாட்டுகளை அவர் மறைமுகமாக ஏற்றுக்கொண்டதாகக் கருதி, கட்சி ஒழுக்க நடைமுறைகளின்படி, அவரின் கட்சி உறுப்பினர் பதவியை முழுமையாக இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம், கட்சி தலைவர் ரவூப் ஹக்கீமின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டதுடன் இது இறுதியானதும் மாற்றமற்றதுமான தீர்மானமாகும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

