உள்நாடு

சாய்ந்தமருதில் பிரதேச மட்ட மற்றும் மாவட்ட கலை இலக்கிய விழா – 2025

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும், சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்திய பிரதேச மட்ட மற்றும் மாவட்ட இலக்கிய விழா சாய்ந்தமருது பிரதேச பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச
செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில், அதிதிகளாக அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். றிம்ஸான், உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிகா, கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, நிருவாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்ஸான், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ். நளீர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.சி. முஹம்மட், கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.எம். தௌபீக், பிரதேச கலாசார அதிகார சபையின் செயலாளர் கே.எம்.ஏ.அஸீஸ், பொருளாளர் அஸ்வான் சக்காப் மௌலானா, ஓய்வுபெற்ற அதிபர் கலாபூஷணம் ஏ. பீர்முகம்மது, சாய்ந்தமருது மழ்ஹருஸ்ஸம்ஸ் வித்தியாலய அதிபர் றிப்கா அன்ஸார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச். சபிகாவின் நெறிப்படுத்தலில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளின் உரை, கலை கலாசார நிகழ்வுகள், பிரதேச மட்ட நிகழ்வுகளில் வெற்றி பெற்றோருக்கான கௌரவிப்பு நிகழ்வுகள், எனப் பல நிகழ்வுகளும் இடம் பெற்றன.

பாலர், சிறுவர், கனிஷ்ட, சிரேஷ்ட, அதி சிரேஷ்ட மற்றும் திறந்த பிரிவுகளில் சுமார் 48 பேர் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான கௌரவம் இதன்போது வழங்கப்பட்டது.

இவர்களில் சாய்ந்தமருதில் உள்ள இலக்கியத்தில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் மற்றும் கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் எனப் பல பிரிவினரும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கலை நிகழ்வுகளில் பங்குபற்றிய 20 மாணவர்கள் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டதோடு, கலை மன்றங்களுக்கான காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் இம்முறை 03 பேருக்கு “கலைஞர் சுவதம்” விருது வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *