சுயாதீன ஊடகங்களை அடக்குவது சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்லும் முயற்சி..! – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
தற்போதைய அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்தையும் ஊடக சுதந்திரத்தையும் நசுக்க முயற்சிக்கின்றது. நாட்டை சர்வாதிகார ஆட்சியை நோக்கி இட்டுச் செல்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சுயாதீன ஊடகங்கள் மீது அரசாங்கத்தின் அழுத்தம் தொடர்பாக, விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
ஜனநாயக நாட்டில் நான்கு முக்கிய தூண்கள் சட்டமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறை மற்றும் சுயாதீன ஊடகங்கள் ஆகும். ஆனால் தற்போது அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் பொலிஸ் அதிகாரிகளின் உரிமைகளையும் மீறுவதற்காக பொலிஸ் திணைக்களத்தைப் பயன்படுத்துகிறது.
“குடிமக்களின் உண்மையான தகவல்களை அணுகுவதற்கான உரிமையை பறிக்கும் ஒரு காவல் அரசை நிறுவ அரசாங்கம் செயல்பட்டு வருகிறது,” என அவர் தெரிவித்தார்.
ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். சுயாதீன ஊடகங்களுக்கு இடம் கொடுக்கப்பட வேண்டும், ஆனால் அரசாங்கம் அவற்றை அடக்க முயற்சிக்கிறது.
ஊடகங்கள் காரணங்கள், உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் கருத்துக்களை முன்வைத்தாலும், அரசாங்கம் அவற்றை அடக்க முயற்சிக்கிறது.
“இத்தகைய நடவடிக்கைகள், ஜனநாயக நாட்டை ஒரு காவல் அரசாக மாற்றுவதற்குச் சமம். அமைதியான பெரும்பான்மையினரின் குரலை, சுயாதீன ஊடகங்களை அடக்கக் கூடாது. ஊடக அடக்குமுறை சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்லும் படியாகும். மக்கள் சர்வாதிகார ஆட்சியையோ அல்லது காவல் அரசியையோ உருவாக்க தங்களது ஆணையை வழங்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கத்தின் காவல்துறை சுதந்திரத்தில் தலையீடு கருத்து சுதந்திரத்தை நசுக்குகிறது என்றும், ஊடகங்களுக்கு உண்மையை வெளிப்படுத்த உரிமை உண்டு, அந்த உரிமையை தடுப்பது 220 இலட்சம் குடிமக்களின் உரிமைகளை மீறும் செயலாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
(எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச)
