அஸ்வெசும பயனாளர்கள் கவனத்திற்கு-தகவல் புதுப்பிப்பு அவகாசம் 31ஆம் திகதியுடன் நிறைவு.!!!
அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் முதலாம் கட்டத்துடன் தொடர்புடைய தகவல்களை உறுதிப்படுத்தி புதுப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதற்கான தகவல் புதுப்பிப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் முதலாம் கட்டத்திற்காக விண்ணப்பித்து, தற்போது கொடுப்பனவுகளைப் பெறுவோர், இதுவரை கொடுப்பனவு கிடைக்காதோர் என அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது தனிப்பட்ட தகவல்களை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் eservices.wbb.gov.lk என்ற இணையதளத்திற்கு சென்று தாமாகவே இணையவழி மூலம் (Online)
தகவல்களைப் புதுப்பிக்க முடியும்.
மேலும், தகவல் புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்தை தங்களது கிராம உத்தியோகத்தர் அல்லது பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரிடமிருந்து பெற்றுக் கொண்டு, அதனை முறையாக பூர்த்தி செய்து, பிரதேச செயலகத்தின் நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் ஒப்படைப்பதன் மூலமும் தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
