Thursday, December 25, 2025
உள்நாடு

வெறுப்பு மற்றும் குரோதமற்ற சமூகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்..! – நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மிகவும் பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் மனிதகுலத்தின் மாபெரும் பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இலங்கை கிறிஸ்தவ மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிறிஸ்துமஸ் என்பது வெறும் பண்டிகை கொண்டாட்டம் மட்டுமல்ல, பகிர்வு, தியாகம் மற்றும் மனிதகுலத்திற்கான மரியாதை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆன்மீக பயணம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பெத்லகேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் குழந்தை இயேசுவின் பிறப்பு உலகிற்கு அமைதியையும் அன்பையும் கொண்டு வரும் உன்னத நோக்கத்துடன் நடந்தது. ஏழைகள், ஆதரவற்றவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இரக்கம் காட்டுவதன் முக்கியத்துவத்தை அவரது வாழ்க்கை நமக்குக் கற்பிக்கிறது.

இலங்கை பல்வேறு மதங்கள் மற்றும் கலாசாரங்களால் வளர்க்கப்பட்ட ஒரு நாடு. நத்தார் பண்டிகை நமது கலாசார நாட்காட்டியில் ஒரு சிறப்பு மைல்கல் என்பதுடன், அது மத பேதங்களற்ற சகோதரத்துவத்தை வளர்க்கும் ஒரு காலகட்டமாகும். கிறிஸ்தவ மக்களின் இந்த மகத்தான நாளைக் கொண்டாடும்போது, ​​பிற மத சமூகத்தினரையும் அதற்கான ஒன்றிணைத்துக்கொண்டு  காட்டும் பரஸ்பர மரியாதை நமது நாட்டின் கலாசார அடையாளத்தின் வலுவான அம்சமாகும்.

இன்று நாம் வாழும் சிக்கலான சமூக சூழலில் இயேசு கிறிஸ்து போதித்த முழுமையான அகிம்சை, சகிப்புத்தன்மை மற்றும் கருணை மிகவும் முக்கியமாகும். ஒருவருக்கொருவர் உதவி ஒத்தாசை வழங்கி, வெறுப்பு மற்றும் குராேதம் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்க இந்த கிறிஸ்துமஸ் எங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும். தற்போதுள்ள பொருளாதார மற்றும் சமூக சவால்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்டாலும், சளைக்காமல்  ஒருவருக்கொருவர் பலமாக இருந்து எழுந்திருப்பது எமது பொறுப்பாகும்.‌

அதேபோன்று  இயேசு கிறிஸ்து பிரசங்கித்த தாராள மனப்பான்மையை முன்னுரிமையாகக் கொண்டு, பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களை மேம்படுத்தவும் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அன்பு மற்றும் சமாதானத்தின் செய்தியை ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு இதயத்திலும் நிரம்பிவழியும் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நத்தார் தினமாகட்டும் என வாழ்த்துகிறேன். இந்த புனிதமான நாளில், சிறந்த, அமைதியான மற்றும் அபிவிருத்தியடைந்த இலங்கைக்காக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.

உங்கள் அனைவருக்கும் அமைதியான மற்றும் மகிழ்ச்சி நிரைந்த கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!

முனீர் முளப்பர் (பா,உ)

மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *