Thursday, December 25, 2025
உலகம்

அமெரிக்க செயற்கைக் கோளை சுமந்தபடி விண்ணில் பாய்ந்த பாகுபலி..!

அமெரிக்காவின் செயற்கைக்கோளை சுமந்தபடி பாகுபலி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.6,100 கிலோ செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட் இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இந்திய விண்வெளி துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உள்நாடு, வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஏ.எஸ்.டி. தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் தொடர்பு சேவைக்கான புளூபேர்ட்- 6 செயற்கைக்கோளை இஸ்ரோ புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

விண்வெளியில் இருந்து நேரடியாக ஸ்மார்ட் போன்களுக்கே அதிவேக இணைய சேவையை வழங்குவதுதான் இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கமாகும். இதன் மூலம் செல்போன் டவர்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை பெற முடியும்.

புளூபேர்ட்- 6 செயற்கைக்கோள் 6,100 கிலோ எடை கொண்டதாகும். இந்த செயற்கைக்கோள் பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து புதன்கிழமை காலை 8.55 மணிக்கு பாகுபலி ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

இதன் மூலம் 6,100 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை முதன் முதலாக வெற்றிகரமாக விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இதுபோன்ற அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களை அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முன்னதாக பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவின. தற்போது, இவ்வளவு எடைகொண்ட செயற்கைக்கோளை முதல் முறையாக இஸ்ரோ ஏவியுள்ளது.

செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘இந்தியாவின் விண்வெளித் துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இந்திய மண்ணில் இருந்து ஏவப்பட்டதிலேயே மிகவும் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் இது. அமெரிக்காவின் புளூபேர்ட் பளிாக்-2 எனும் இந்த செயற்கைக்கோளை அதன் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் LVM3 ராக்கெட் மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.

இது இந்தியாவின் கனரக ஏவுதல் திறனை வலுப்படுத்தி உள்ளது. உலகலாவிய வணிக ஏவுதல் சந்தையில் நமது வளர்ந்து வரும் பங்கை உறுதி செய்துள்ளது. தற்சார்பு இந்தியாவை நோக்கிய நமது முயற்சியையும் இது பிரதிபலிக்கிறது. கடினமாக உழைத்து வரும் நமது விண்வெளி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள்’’ என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: இந்த ராக்கெட் ஏவப்பட்டது இந்தியாவிற்கு ஒரு புதிய மைல்கல் சாதனையாகும். இந்திய மண்ணிலிருந்து இதுவரை ஏவப்பட்ட மிகப்பெரிய செயற்கைக்கோள் இது.

இந்தப் பணியின் மூலம், இந்தியா இப்போது 34 நாடுகளைச் சேர்ந்த 434 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய பெருமையையும் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ககன்யான் திட்டத்தின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. 2017 முதல் இன்று வரை, எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஏவுதலும் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. ககன்யான் திட்டத்தின் மனித மதிப்பீட்டு நிலைக்கு நாங்கள் ஒதுக்கியுள்ள அதே ராக்கெட் இது. இந்த வெற்றி ககன்யான் திட்டத்தைத் தொடர மேலும் நம்பிக்கையை அளிக்கிறது.

சந்திரயான் 4 மற்றும் 5 அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள். வலிமை வலிமையை மட்டுமே மதிக்கிறது என்று ஒரு பழமொழி உண்டு. நாம் சந்திரயான்-3 ஐ நிறைவேற்றியபோது, ​​ஜப்பான் எங்களுடன் ஒத்துழைக்க விரும்பியது. இது ஒரு சிறிய விஷயம் அல்ல.

தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடு எங்களுடன் ஒத்துழைக்க விரும்பியது இன்று, ஒரு இந்தியனாக நான் பெருமையுடன் சொல்ல முடியும், விண்வெளிப் பயணத்தில் சாதனை படைத்த நாடுகளுடன் நாம் தோளோடு தோள்கோர்த்து நிற்பது பெருமையான விஷயம் இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க செயற்கைக் கோளை சுமந்தபடி விண்ணில் பாய்ந்த பாகுபலி

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *