Thursday, December 25, 2025
உள்நாடு

சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம்..! -நத்தார் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அழைப்பு

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று (25) கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக, மிகவும் வேதனையான இயற்கை பேரழிவை எதிர்கொண்ட பிறகு உறுதியுடன் மீண்டுவரும் சந்தர்ப்பத்திலேயே இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடுகிறோம் என்பது அனைவரும் அறிந்த விடயம். அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பகிர்வு மற்றும் தியாகம் ஆகியவையே நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சகோதர உணர்வுடன் ஆதரவு வழங்குதல் மற்றும் மனிதகுலத்தின் விடுதலைக்கான அர்ப்பணிப்பு என்பன இவற்றில் முதன்மையானதாகும்.

கிறிஸ்தவம் உட்பட அனைத்து மதங்களின் போதனையான, இக்கட்டான காலங்களில் அயல் வீட்டாரை கைவிடாமல் சகோதரத்துவத்துடன் அரவணைக்கும் உன்னதமான மனிதப் பண்பையும், அசைக்க முடியாத உறுதியையும் கடந்த அனர்த்த நிலைமையில் இந்நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

அமைதி, நல்லிணக்கம், தியாகம் மற்றும் இரக்க குணம் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க அழைப்பு விடுக்கும் புனித நத்தாரின் அர்த்தத்தை உண்மையில் புரிந்துகொண்டதனாலேயே, ஒருபோதும் பயணிக்க எதிர்பார்க்காத வீதிகளில் கூட தமது சகோதர மக்களுக்காக அத்தியாவசியப் பொருட்களை மக்கள் சுமந்து சென்றார்கள் என்று நான் நம்புகிறேன்.

இருள் நீங்க வேண்டுமானால், ஒளியின் பிரகாசம் பரவ வேண்டும். பெத்லகேமில் ஒரு ஏழை தொழுவத்தில் பிறந்து, கல்வாரி மலைப் பகுதியில் மனித சமூகத்தை பாவத்திலிருந்து மீட்க சிலுவையில் தன்னை அர்ப்பணித்த இயேசு, மிகுந்த உறுதியுடனும், நம்பிக்கையுடனும், ஞானத்துடனும் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் என்று கிறிஸ்தவம் கூறுகிறது.

யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், இரக்கம் மற்றும் கருணை ஆகியவற்றால் நிறைந்த இனிய நத்தார் பண்டிகையாக அமைய வேண்டும் என்று அனைவரையும் வாழ்த்துகிறேன்.

அநுர குமார திசாநாயக்க

ஜனாதிபதி – இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *