உள்நாடு

அன்று விமர்சனங்களை முன்வைத்த எமது எண்ணக்கருக்களை இன்று அரசின் தேசியக் கொள்கையாக பாராளுமன்றத்திலேயே வெளியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

கடந்த காலங்களில், செல்வந்தர்களை தொடர்பு கொண்டு வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளை மேம்படுத்த முடியும் என திட்ட யோசனைகளை முன்வைத்து நடைமுறைப்படுத்தி வந்த சமயம், ​தேர்தல் காலத்தில் இதனை கேலிக்கு எடுத்த தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இன்று இந்த திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் கூறிய விடயங்களைப் பார்த்து இவர்கள் கேலி செய்தாலும், கருத்துக்களை விமர்சித்த அரசாங்கம், அன்று விமர்சனங்களை முன்வைத்த எமது எண்ணக்கருக்களை இன்று அரசின் தேசியக் கொள்கையாக பாராளுமன்றத்திலேயே வெளியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், உண்மை வெல்லும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டம், அரநாயக்க பிரதேச மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ் அரநாயக்க பிரதேச வைத்தியசாலைக்கு ரூபா. 29 இலட்சம் மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்கள் நேற்று (20) நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு Patient Monitor 5 ம், Infusion Pump 1 ம், Syringe Pump 1 ம் இவ்வாறு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

இடம்பெயர்ந்துள்ள மற்றும் வீடற்றிருக்கும் சகல மக்களுக்கும் பாதுகாப்பான காணிகளில் வீடுகளைக் கட்டுவதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பற்ற இடத்தில் குடியேறியவர்கள் பாதுகாப்பின்மை காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆகையால், பாதுகாப்பான இடத்தில், காணியில் நல்ல வீடுகளை கட்டி, தங்கள் வீட்டிலிருந்தே வாழ்க்கையை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். இவை அனைத்தும் ஒன்றிணைந்த அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும். கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் மக்களின் வாழ்க்கை உள்ளிட்ட ஒரு ஒன்றிணைந்த வேலைத்திட்டம் ஊடாக இவை ஒருசேர நடக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

🟩 இனியேனும் கேலி செய்வதை நிறுத்திவிட்டு செயலில் வேலையைக் காட்டுங்கள்.

யாரும் டித்வா சூறாவளியை கேலிக்கையான ஓர் விடயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த கேலிக்கையான பார்வைகளால் தான், சுனாமியிலிருந்து கூட எம்மால் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியாது போனது. இன்றும் கூட டாப்ளர் ரேடார் அமைப்புகளை நிறுவிக் கொள்ள முடியாம் தானே போயுள்ளன. டித்வா புயல் போன்ற இயற்கை பேரழிவுகளை நாம் தொடர்ந்து சந்திக்க இதுவே காரணமாகிறது. இவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக கூடாது. உயிரிழப்புகள் தொடர்பில் நாம் ஒருபோதும் மகிழ்ச்சியடையப்போவதில்லை.

🟩 அரச அதிகாரிகளை அசௌகரியங்களுக்கு உட்படுத்தாமல், ஒரே கொள்கையில் இருந்து செயற்படுங்கள்.

நமது நாட்டில் சூறாவளிக்குப் பிந்தைய இடர்
முகாமைத்துவ செயல்பாட்டில் குழப்பம் இருப்பது கவலையான விடயமாகும். கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை ஆபத்தானவை என்று அறிவிக்கும்போது, ​​அரசாங்கமானது மக்களை இடைத்தங்கல் முகாம்களுக்கு கொண்டு வந்து, பின்னர் அந்த ஆபத்தான பகுதிகளுக்கே திருப்பி அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளைச் செய்து வருகின்றன. இவை அபத்தமான விடயங்களாகும். அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்கு மக்களை அனுப்புவதன் மூலம் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். உயிரிழப்புகளுக்கு இனியும் இடமளிக்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 மக்களின் கோபத்தை தூண்டிவிடும் கருத்துக்களை வெளிப்படுத்தாதீர்கள்.

மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் முகமாக ரூ. 500 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீடுக்கு ஆதரவு வழங்கினோம். எனவே இந்த நிவாரணங்களை உடனடியாக மக்களுக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிவாரணங்களை வழங்கும் நடவடிக்களைகள் சரியான முறையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும். தயவுசெய்து முரண்பாடான அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்த்து, அரச அதிகாரிகளை சிக்கலில் சிக்க வைக்காமல் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுங்கள். அவ்வாறே மக்கள் மத்தியில் கோபத்தை தூண்டிவிடும் கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் என்றும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 நாட்டுக்கு நல்லது நடந்தால், நாமும் எமது ஆதரவைத் தருவோம்.

நிவாரணத் திட்டமாக ஐக்கிய மக்கள் வைத்தியசாலைகளுக்கு இவ்வாறு உதவிகளைச் செய்து வருகின்றது. இந்தப் பேரழிவை நாட்டிற்கு சௌபாக்கியத்தைக் கொண்டுவர பயன்படுத்த வேண்டும் என்றே நான் தொடர்ச்சியாக கூறி வருகிறேன். சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்டி, உலகின் அனுதாபங்களைப் பெறுவதன் மூலம், நாடு முன்பு இருந்ததை விட குறிப்பிட்ட அபிவிருத்தியை எட்டும். அரசாங்கம் இதனை நடத்தாமல் இருக்க முயற்சிக்கிறதா என்று தனக்குத் தெரியாது. நாட்டுக்காக நாம் சரியானதை சரியான நேரத்தில் செய்ய வேண்டும். இந்த நன்கொடையாளர் மாநாட்டை நடத்தும் பட்சத்தில், கட்சி வேறுபாடுகள் இல்லாமல் முழுமையான ஆதரவைத் தருவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *