உலகம்

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் மற்றும் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த இரண்டு பேர் கைது

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் மற்றும் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இந்திய பாஸ்போர்ட் மூலம் ஐக்கிய அரபு நாடு செல்ல முகமது அல் அமீன்(31) என்பவர் முயன்றார். அப்போது வெளிநாட்டவர் பதிவு மண்டல அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது போலி என தெரியவந்தது.

அதேபோல் பிரியதர்ஷினி சத்தியசிவம்(26) என்ற பெண் இந்திய பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்றார். அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது, அது போலியானது என தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதன்படி, போலீசார் விசாரணை நடத்திய போது, பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த முகமது அல் அமீன் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததும், பிறகு இந்திய ஆவணங்களான ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையில் அல்அமின் மண்டல் என்ற பெயரில் இந்திய பாஸ்போர்ட் போலியாக பெற்று ஐக்கிய அரபு நாட்டிற்கு செல்ல முயன்றது தெரியவந்தது.

அதேபோல் பிரியதர்ஷினி சத்தியசிவத்திடம் விசாரணை நடத்திய போது, இலங்கையை சேர்ந்த அவர், கடந்த 2024ம் ஆண்டு சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்தவர், திருச்சியை சேர்ந்த ரவி என்பவரை திருமணம் செய்து கொண்டு, திருச்சியில் குடியேறியதும், அதன் பிறகு இந்திய ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெற்று அதன் மூலம் இலங்கை செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களின் போலி பாஸ்போர்ட்கள், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *