உள்நாடு

அனர்த்தத்தின் போது மக்களுக்கு வரலாற்றில் மிக அதிகஇழப்பீட்டை நாங்கள் வழங்குகிறோம்; பாராளுமன்றில் ஜனாதிபதி

மக்களுக்கு உதவி கிடைக்கவில்லை என்றால், இன்னும் இரண்டு மாதங்களில் வீடு வீடாகச் செல்லுங்கள், இப்போதைக்கு அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்திற்கு செல்லுங்கள்

  • எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

➢ மக்களின் வாழ்க்கையை மீண்டும்கட்டியெழுப்புவதற்காகவே 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது – அதன்படி, 700 பில்லிய்ன் ரூபாவுக்கும் அதிகமான தொகை அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

➢ அனர்த்தத்தின்போது மக்களுக்கு வரலாற்றில் மிக அதிகஇழப்பீட்டை நாங்கள் வழங்குகிறோம் – அரசாங்கத்தால்பராமரிக்கப்படும் கடுமையான நிதி ஒழுக்கம் இந்தகடினமான நேரத்தை எதிர்கொள்ள எங்களுக்கு தைரியத்தை அளித்தது.

➢ கூடுதலாக ஒதுக்கப்படும் 500 பில்லியன் நமது கடன் எல்லையை அதிகரிக்காமல் பயன்படுத்தப்படும்.

➢ கூடுதலாக 500 பில்லியன் ரூபாய் சந்தைக்கு வரும்போது பணவீக்கம் மற்றும் மாற்று விகிதத்தில் ஏற்படும் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

➢ பொருளாதாரத்தின் நன்மைகள் மக்களுக்கே திரும்பிச்செல்ல வேண்டும்.

➢ ஆபத்தான பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றி, பாதுகாப்பான பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்வதே எமது கொள்கை

அண்மைய வரலாற்றில் நாங்கள் முன்வைத்த பாரிய தொகை குறைநிரப்பு பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட விவாதத்திற்குப் பிறகு, 05 ஆம் திகதி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட ஆவணத்தை இந்த பாராளுமன்றத்தில் நிறைவேற்றினோம். ஆனால் மிகக் குறுகிய காலத்தில், மீண்டும் 500 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்பட்டுள்ள பேரழிவிலிருந்து இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும், நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் இதுபோன்ற குறைநிரப்பு பிரேரணை அவசியம் என்பதை இந்த பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும்

இந்த 500 பில்லியன் காரணமாக ஏப்ரல் மாதத்திற்குள் பொருளாதாரம் சரிந்துவிடும் என்று ஒரு கருத்தாடல் நடக்கின்றது.

இவ்வளவு பாரிய தொகை குறைநிரப்பு பிரேரணையை முன்வைப்பதன் மூலம் பொருளாதாரம் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் என்ற சிலரின் கூற்றுகள் குறித்து நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நாங்கள் நிதி ஒழுக்கத்துடனும், குறிக்கோளுடனும் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட அரசாங்கம். 2025 ஆம் ஆண்டை எடுத்துக்கொண்டால், இந்த ஆண்டு பொருளாதாரத் துறையில் பல முக்கியமான சாதனைகளை நாம் அடைந்துள்ளோம். உங்களுக்குத் தெரியும், நீண்ட காலமாக, திறைசேரிக் கணக்கு வங்கி மேலதிகப் பற்றுடனே இருந்தது. சில நேரங்களில் இந்த வங்கி மேலதிகப் பற்றுகளுக்கு 33%, 36% வட்டி செலுத்தப்பட்டது. 2018 ஆம் ஆண்டில், வங்கி மேலதிகப் பற்று180 பில்லியனாக இருந்தது. 2019 இல், அது 274 பில்லியனாக இருந்தது. 2020 இல், இது 575 பில்லியனாகவும், 2021 இல், அது 821 பில்லியனாகவும் இருந்தது. அதாவது அரசாங்கத்தின் வங்கிக் கணக்கில் 821 பில்லியன் மேலதிகப் பற்று இருந்தது. ஆனால் 2025 நவம்பர் மாதத்திற்குள், நமது அரசாங்கத்தின் திறைசேரிக் கணக்கின் நேர்மறை மதிப்பு 1202 பில்லியனாக இருந்த்து. இது கடந்த காலங்களுடன்

ஒப்பிடும்போது 02 டிரில்லியன் அதிகமாகும். இது நமது நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான ஒரு புள்ளியாகும்.

அத்தகைய நிதி கையிருப்பு இல்லாமல், இன்று இந்த 500 பில்லியனை ஒதுக்க முடியாது. எனவே, இந்த 500 பில்லியனை நிறைவு செய்ய வேறு பல உத்திகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இரண்டாவதாக, நமது வருமானத்தை எடுத்துக் கொண்டால், 2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையின் மிக உயர்ந்த அரச வருமானமாக 15.9% 2025 ஆம் ஆண்டில் ஈட்டியுள்ளது. மூன்றாவதாக, 1977 ஆண்டுக்குப் பின்னர் மிகக் குறைந்த வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையாக 4.5 வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை நாம் பதிவு செய்துள்ளோம். மேலும், வரவுசெலவுத்திட்ட இலக்குகளைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு இந்த நாட்டின் வரலாற்றில் வருமான இலக்குகளை மீறிய ஆண்டாக உள்ளது என்பதை நாம் அறிவோம்.

இந்த ஆண்டு, நாங்கள் 4960 பில்லியன்களை எதிர்பார்த்தோம், 2025 டிசம்பர் 15, க்குள், நாங்கள் 5125 பில்லியன்களை வருமானமாக ஈட்டியுள்ளோம். கடன் எல்லை அதிகரிக்காமல் வைத்திருக்கவும் முடிந்தது. 2026 வரவுசெலவுத்திட்டத்தை நாங்கள் முன்வைத்தபோது, 3800 பில்லியன் கடன் எல்லையை எதிர்பார்க்கிறோம் என்று கூறினோம், ஆனால் வரவுசெலவுத்திட்டம் மூலம் மேலும் 60 பில்லியன்களைக் குறைத்து 3740 பில்லியன் கடன் எல்லையை பேணுகிறோம்.

எங்கள் கடன் எல்லை அதிகரிக்காமல் இந்த மேலதிக 500 பில்லியனை நாங்கள் பயன்படுத்துகிறோம். அது மிகவும் முக்கியமானது. எனவே, நீண்ட காலத்திற்குப் பிறகு, வரவுசெலவுத்திட்டத்தில் எதிர்பார்க்கப்படும் கடன் எல்லைகளுக்குள் இருக்க முடிந்துள்ளது.

மேலும், 1950 இற்குப் பின்னர், எங்கள் முதன்மைக் கணக்கில் 06 முறை மட்டுமே மேலதிகம் ஏற்பட்டுள்ளது. 74 ஆண்டுகளில், முதன்மைக் கணக்கில் 06 முறை மேலதிகம் ஏற்பட்டுள்ளது, மேலும் அந்த 06 முறையும் 1% க்கும் குறைவாகவே உள்ளன. ஆனால் வரலாற்றில் முதல்முறையாக, இந்த ஆண்டு எங்கள் முதன்மைக் கணக்கு மேலதிக 3.8% ஆக பதிவாகியுள்ளது.

இலங்கையின் வரலாற்றில் வெளிநாட்டில் இருந்து மிக அதிகமான பணம் அனுப்புதல் இந்த ஆண்டு பெறப்படுகிறது. சுற்றுலா வருமானம் 2018 ஆம் ஆண்டில் சுமார் 3.8 பில்லியனாக இருந்தது. அதை விட அதிகமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எமது பொருட்கள்

மற்றும் சேவை ஏற்றுமதிகளிலிருந்து கிட்டத்தட்ட 18 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கிறோம். இந்த தரவுகளிலிருந்து, மிகவும் வலுவான நிதி முகாமைத்துவம் மற்றும் இலக்கு சார்ந்த பணிகளின் விளைவாக இந்த வெற்றியை நாங்கள் அடைந்துள்ளோம்.

ஆனால் பெரிய அதிர்ச்சிகளைத் தாங்கும் பொருளாதாரம் நம்மிடம் இருக்கவில்லை. ஒரு சிறிய அல்லது தவறான முடிவு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளாதாரமே நம்மிடம் இருந்தது. எனவே, கடந்த 14-15 மாதங்களாக, நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்து, எந்தத் தவறும் செய்யாமல் மிக நுட்பமான அம்சங்களைக் கூட ஆய்வு செய்து, பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மைக்குக் கொண்டு வந்துள்ளோம். யாரும் அதை மறுக்க முடியாது, ஆனால் அவ்வாறான பொருளாதார ஸ்திரத்தன்மையில்தான் நாம் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளோம். நாம்

இவ்வளவு பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வலுவான நிலையில் இல்லாவிட்டால், இதை எதிர்கொள்ள முடியாது. இப்போது நாம் அடைந்துள்ள பொருளாதார ஸ்திரத்தன்மைதான் இதை எதிர்கொள்ளும் தைரியத்தையும் நம்பிக்கையையும் நமக்கு அளித்துள்ளது.

ஆனால், இத்தகைய பாதிப்பை தாங்கும் அளவுக்கு இந்தப் பொருளாதாரம் வளரவில்லை என்பது நமக்குத் தெரியும். வீழ்ச்சி அடைந்த நாட்டை படிப்படியாக மீண்டும் கட்டியெழுப்பும்போது, நமது பொருளாதாரத்திற்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பாதிப்பைத் தணிக்கத் தேவையான மிக நுட்பமான தலையீட்டை வழங்குவதன் மூலம் இந்தப் பொருளாதாரத்தை நிர்வகிக்க வேண்டும்.

ஆனால் ஒரு பொருளாதாரம் என்பது ஒரு கஞ்சனைப் போல எல்லாவற்றையும் குவித்து செல்வத்தைக் குவிப்பது அல்ல. ஒரு பொருளாதாரம் என்பது அதிலிருந்து ஏதேனும் நன்மை கிடைக்குமானால், அந்த நன்மை மக்களுக்குத் திரும்ப செல்ல வேண்டும் என்பதாகும்.

இல்லையெனில், திறைசேரியில் டிரில்லியன் கணக்கான மிகுதி இருப்பதாகச் சொல்வதில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எனவே, பொருளாதாரத்தில் நாம் அடையும் ஒரு சிறிய வெற்றி என்றாலும், அந்த வெற்றி மக்களுக்கு செல்ல வேண்டும்.

எனவே, இந்த அனர்த்த சூழ்நிலையில், மக்களுக்கு உதவி வழங்க நம்மிடம் இருந்த 1.2 டிரில்லியன் கையிருப்புக்களை நாம் பயன்படுத்த வேண்டும். அதை நாம் கைவிட மாட்டோம். அதிகாரத்தில் இருப்பவர்கள் பெரிய கரண்டிகளில் பகிர்ந்து கொண்ட வரலாறு நம் நாட்டில் உள்ளது. வீடுகள் எரிக்கப்பட்ட பிறகு எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இழப்பீடு வழங்கிய முறை நியாயமானதா? இந்த நாட்டில் எப்போதும் தாம் பெரிய பங்கைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு முன்னுதாரணமும் உள்ளது. அவர்கள் சிறிய கரண்டிகளில் மக்களுக்கு விநியோகிக்கிறார்கள். அரசாங்கத்திற்கு பணத்தை பெரிய கரண்டிகளால் விநியோகிக்க, நாம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைக்கவில்லை. மக்களுக்கு நியாயமான நன்மைகளை வழங்குவதே எங்கள் நோக்கம். எனவே, இந்த பிரச்சினைகளில் இருந்து வெளியே வர மக்களுக்கு நியாயமான உதவிகளை வழங்க நாங்கள் தலையிட்டுள்ளோம்.

இந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்கவும், நிலையான வாழ்க்கையை நடத்தவும் தேவையான ஆதரவை எவ்வாறு வழங்குவது என்பதே எங்கள் கொள்கை அணுகுமுறை. அதற்காக தான், நாங்கள் ரூ. 500 பில்லியன்களை எதிர்பார்க்கிறோம். அதன்படி, மொத்த ஒதுக்கீடுகளாக 700 பில்லியன் ரூபாய்க்கு மேல் ஒதுக்கியுள்ளோம். இது குறித்த மதிப்பீட்டைக் கொண்ட அறிக்கையை உலக வங்கி வரும் திங்கட்கிழமை எங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலிருந்து சேதத்தின் மொத்த அளவைக் காணலாம்.

ஆனால் இங்கே நாங்கள் கவனம் செலுத்தும் சில விடயங்கள் உள்ளன. கூடுதலாக 500 பில்லியன் சந்தைக்கு வரும்போது பணவீக்கத்தில் ஏற்படும் தாக்கத்தை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். அதன்படி, பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியில் செயல்திறனைக் கொண்டுவர வேண்டும். பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியில் வளர்ச்சியை அடைவதற்கு இந்தப் பணத்தில் கணிசமான தொகையை நாம் செலவிட வேண்டும்.

மேலும், 500 பில்லியன்கள் சந்தைக்கு வரும்போது, டொலர்களுக்கான தேவை ஓரளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, நாம் எதிர்பார்த்த டொலர் வருமானத்தை விட கூடுதல் டொலர் வருமானத்தை ஈட்ட வேண்டும். இல்லையெனில், மாற்று விகிதத்தில் தாக்கம் ஏற்படும். அதைத் தடுக்க, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 200 மில்லியன் டொலர் உடனடி உதவியை எதிர்பார்க்கிறோம். சர்வதேச நாணய நிதியத்தின் சபை இன்று கூடுகிறது. எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இதற்காக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து ஆதரவை நாங்கள் கோரியுள்ளோம். எனவே, 2026 திட்டத்தில் உள்ள தொகையை விட குறைந்தது 500 மில்லியன் டொலர்களை நாம் கூடுதலாக திரட்ட வேண்டும்.

எனவே, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும், மாற்று விகிதத்தில் ஏற்படும் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். இந்தப் பணத்தை ஒதுக்குவதற்கான திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். அதன்படி, நாங்கள் வழங்கும் நிவாரணப் பொதியின் முழு விடயத்தையும் நான் முன்வைக்கிறேன்.

அவசர அனர்த்த சூழ்நிலை முடிந்த பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்ய ரூ. 25,000 வழங்குதல். இந்த உதவித்தொகையை பெற்றுக்கொள்ளும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் இங்கு ஒரு சிக்கல் இருப்பதை நான் அறிவேன். இது கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகளால் தீர்மானிக்கப்படுகிறது. அரசியல்வாதி இதை விநியோகிப்பவர் அல்லது தீர்மானிப்பவர் அல்ல, ஆனால் யாராவது அநீதியாக நடத்தப்பட்டிருந்தால், தகுதியான ஒருவர் அதைப் பெறவில்லை என்றால், அரசியல் அதிகாரம் அதைப் பரிசீலிக்கும். அதுதான் சரியான வழி. இல்லையெனில், அவர்கள் அரசியல் குழுக்களிடமிருந்து கையொப்பங்களைப் பெறுதல் போன்ற பொய்களைப் பரப்புகிறார்கள்.

நாம் தெளிவான அரச பொறிமுறை மூலம் ஒரு முறையான கட்டமைப்பை தயாரித்துள்ளோம். பல வேறுபாடுகள் இருப்பதால், இந்தத் தெரிவில் சிறிது தாமதம் ஏற்படுவது இயல்பானது. இது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இந்த உதவித்தொகை எந்தப் பிரிவினையும் இல்லாமல் வழங்கப்படுகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தொகையின்படி, கிட்டத்தட்ட 65% வழங்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில், 90% மற்றும் 100% வழங்கப்பட்ட இடங்கள் உள்ளன.

மேலும் நாங்கள் கூடுதலாக 50,000 ரூபாயை வழங்குகிறோம். வீடு சேதமடைந்திருந்தால், தளபாடங்கள் சேதமடைந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சமையலறை உபகரணங்களைப் பெறுவதற்கு அந்த உதவித் தொகையை நாங்கள் வழங்குகிறோம். எந்த அரசாங்கமும் இந்த வழியில் செயல்படவில்லை. நாங்கள் இதை கொள்கை அடிப்படையில் வழங்குகிறோம்.

தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, 6228 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. பகுதியளவு சேதமடைந்துள்ள NBRO அனுமதி வழங்காத 4543 வீடுகள் உள்ளன. சேதமடையாத ஆனால் NBRO அனுமதி வழங்காத 6877 வீடுகள் உள்ளன. அதாவது மொத்தம் 17,648 வீடுகள். நாம் முதலாவதாக இந்த 17,648 பேருக்கு ஜனவரி மாதம் முதல் 03 மாதங்கள் வரை ரூ. 50,000 உதவித்தொகை வழங்குவோம்.

பாதுகாப்பு முகாமில் வசிப்பது எவ்வளவு கடினமானது என்பதை நாங்கள் அறிவோம். எனவே, அவர்கள் மிக விரைவில் அந்த இடங்களிலிருந்து அகற்றப்பட்டு, வீட்டிற்குச் செல்ல நான் முன்னர் குறிப்பிட்ட 03 வகைகளின்படி ரூ. 25,000 வீட்டு வாடகை வழங்குவதே எங்கள் எதிர்பார்ப்பு. அவர்களின் உறவினர்கள் வீட்டில் இருந்தால், அவர்களுக்கு ரூ. 25,000 வழங்குவோம்.

மிக விரைவாக பயிர்ச்செய்கையை மீண்டும் தொடங்கவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். நீர்ப்பாசனத் திணைக்களம், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களத்திற்குச் சொந்தமான ஏராளமான நீர்த்தேக்கங்கள் சேதமடைந்தன. நாங்கள் மாவட்ட ரீதியாக சென்று அவற்றை விரைவில் மீட்டெடுப்பதன் அவசியத்தையும், இந்த பெரும்போகத்தின் தொடக்கத்திற்குத் தேவையான நீரை வழங்குவது பற்றியும் கலந்துராயாடினோம். பயிர்ச்செய்கைக்குத் தேவையான நிவாரணங்களையும் நாங்கள் வழங்குவோம்.

அதன்படி, நெல், சோளம், முந்திரி மற்றும் தானியங்களை பயிரிட்டிருந்தால், ஹெக்டேருக்கு 150,000 ரூபாய் உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ளோம். சேதத்தின் அளவு குறைவாக

இருந்தாலும், அவர்கள் மீண்டும் சுயமாக நிற்க நாம் தைரியம் வழங்க வேண்டும். ஒரு நபர் தங்கள் பயிர் நிலத்தை இழக்கும்போது ஏற்படும் வலியை நாம் அறிவோம். ஒரு சாதாரண விவசாயி விவசாயம் செய்யும்போது, தினமும் காலையில் வயலுக்குச் சென்று அறுவடையைப் பார்க்கிறார். மகிழ்ச்சி அடைகிறார். இதுபோன்ற பயிர் சேதத்தால் ஏற்படும் மன அழுத்தத்தை நாங்கள் அறிவோம். அடுத்த வாரத்திற்குள் உர மானியம் பெற்ற ஒவ்வொரு விவசாயியின் வங்கிக் கணக்குகளுக்கும் குறித்த பணத்தை வைப்பிலிட கமநல சேவைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

அதேபோன்று, மிளகாய், வெங்காயம், பப்பாளி மற்றும் வாழை மரங்களை பயிரிட்டவர்களை காய்கறி பிரிவில் சேர்த்து, அவர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.200,000 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்றுமதி விவசாயத் தரப்பிலிருந்து பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. அதன்படி, மிளகு, ஏலக்காய் மற்றும் கோபி தோட்டங்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து தரவுகளையும் நாங்கள் வழங்கியுள்ளோம். அந்தத் தரவுகளின் அடிப்படையில், ஒரு மிளகுச் செடிக்கு ரூ. 250 செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் புதிய செடிகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. கால்நடை வளர்ப்பு பிரச்சினை நாங்கள் எதிர்கொண்ட அடுத்த பாரிய பிரச்சினையாகும்.

நெல் வயலுக்கு ஒரு ஹெக்டேர் என்று ஒரு அளவீடு உள்ளது. காய்கறி பயிர்ச்செய்கைக்கு ஒரு ஏக்கர் என்று ஒரு அளவீடு உள்ளது. ஆனால் கால்நடை வளர்ப்புக்கு அத்தகைய அளவீடு இல்லை. எத்தனை விலங்குகள் உள்ளன? ஏராளமான விலங்கு வகைகள் உள்ளன. அது ஒரே வகை விலங்காக இருந்தாலும், பெரிய மற்றும் சிறிய அளவிலான விலங்குகள் உள்ளன. எனவே நிறைய பன்முகத்தன்மை உள்ளது. மேலும் நாம் கால்நடை அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யப்படாத கால்நடை வளர்ப்பு பற்றி நாம் தனியாக சிந்திக்க வேண்டும். முதல் கட்டமாக, பதிவு செய்யப்பட்டவற்றுக்கான திட்டங்களை நாங்கள் தயாரித்துள்ளோம்.

ஒரு கலப்பின மாடு தொலைந்தால், இரண்டு இலட்சம் ரூபாய் உதவி வழங்கப்படும். அதிகபட்சம் 10 மாடுகளுக்கு 20 இலட்சம் ரூபாய் உதவி வழங்கப்படும். கலப்பினமற்ற ஒவ்வொரு உள்ளூர் மாட்டுக்கும் 50,000 ரூபாய் உதவி வழங்கப்படும்.

அதிகபட்சமாக 20 மாடுகளுக்கு 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்படும். கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு விவசாயியின் முக்கிய நோக்கமும் கால்நடை அலுவலகத்தில் பதிவு செய்வதாக இருக்க வேண்டும். அவர்கள் குறைந்தபட்சம் ஒவ்வொரு 6

மாதங்களுக்கு ஒரு முறையேனும் தங்களிடம் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையை தெரிவிக்க வேண்டும். பதிவு செய்யப்படாத பண்ணைக்கு கால்நடை சேவைகள் வழங்கப்பட்டால், கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

இனிமேல், சேவைகளை இலவசமாக வழங்க முடியாது. பதிவு செய்யப்படாத விவசாயிகள் மாகாணத்திலிருந்து மாகாணத்திற்கு விலங்குகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, பதிவு அவசியம். இருப்பினும், பன்றிகள், ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் ஆகிய மூன்று வகையான விலங்குகளில் ஒன்று காணாமல் போனால் ரூ. 20,000, வீதம் அதிகபட்சம் 20விலங்குகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கால்நடை வளர்ப்பை மீண்டும் கட்டியெழுப்ப இதுபோன்ற திட்டங்களை நாங்கள் தயாரித்துள்ளோம்.

அடுத்து, கோழி வளர்ப்பில் பல வேறுபாடுகள் உள்ளன. இறந்த ஒரு லேயர் கோழிக்கும் ரூ. 500 வீதம் 2,000 கோழி வரை உதவி வழங்கப்படும். அதன்போது, 2,000 கோழிகள் இழந்தால், ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு பிராய்லர் கோழிக்கும் ரூ. 250 வீதம் , அதிகபட்சம் 4,000 கோழிகள் வரை உதவி வழங்கப்படும். விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் கோழிகளை வழங்கிய வீட்டுக் கோழி பண்ணைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அவர்களுக்கு ரூ. 10,000 உதவி வழங்க முடிவு செய்துள்ளோம். மாகாண சபையிடமிருந்தும் நீங்கள் இலவசமாக குஞ்சுகளைப் பெறலாம்.

மீன்பிடித் தொழிலில் பல சிக்கல்கள் உள்ளன. கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்கள் படகுகளுக்கு காப்புறுதி செய்யாமல் தொழிலில் ஈடுபட முடியாது. அவர்களின் படகுகளுக்கு காப்புறுதி இருந்தால் மட்டுமே மீன்வள அமைச்சு மீன்பிடி அனுமதி பத்திரங்களை வழங்கும். கடலில் மீன் பிடிக்கும் அனைவருக்கும் காப்புறுதி உள்ளது. காப்புறுதியில் இருந்து இழப்பீடு பெற்றாலும், புதிய படகு வாங்க காப்புறுதித் தொகை போதுமானதாக இல்லை. காப்புறுதியில் இருந்து கிடைக்கும் பணத்தை சினோர் நிறுவனத்திற்கு வழங்கவும், சினோர் நிறுவனம் மூலம் ஒரு புதிய படகை வழங்க நாம் தீர்மானித்துள்ளோம் .

வலை உட்பட உபகரணங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கான வவுச்சரை நாங்கள் வழங்குகிறோம். அந்த வவுச்சரை சினோர் நிறுவனத்திடம் கொடுத்த பிறகு, நீங்கள் வலை உட்பட உபகரணங்களைப் பெறலாம். மீன்பிடித் தொழிலை மீண்டும் மேம்படுத்த வேண்டும். மேலும், சினோர் நிறுவனம் சிறிது சேதமடைந்த படகுகளை இலவசமாக பழுதுபார்த்து தரும்.

மேலும், நன்னீர் மீன்பிடித் தொழிலில் பயன்படுத்தப்படும் ஒரு படகுக்கு ரூ. 100,000 தொகையும், மீன்பிடி சங்கம் மூலம் ஒரு வலைக்கு ரூ. 15,000 வீதம், அதிகபட்சம் ஐந்து வலைகளுக்கு 75,000 ரூபாய் வழங்கப்படும். சில குளங்களில் உள்ள மீன் குஞ்சுகளில் சுமார் 35% நீரில் மூழ்கிவிட்டன. சில குளங்களில் அனைத்து மீன் குஞ்சுகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சேதமடைந்த நீர்த்தேக்கங்களுக்கு மீன்வள அமைச்சு இரண்டு சந்தர்ப்பங்களில் மீன் குஞ்சுகளை வழங்கும்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து ரூ.10,000 மற்றும் திறைசேரியிலிருந்து ரூ.15,000 வழங்கப்படும். புதிய பாடசாலை தவணை

தொடங்குவதற்கு முன்பு பாடசாலை மாணவர்களுக்கு இந்த உதவித்தொகையை வழங்க நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

அனர்த்தத்தால் சேதமடைந்த வர்த்தகங்களை கைத்தொழில் அமைச்சில் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது, அதன்படி, தனியுரிமை நிறுவனங்கள், சிறு வணிகங்கள் மற்றும் நுண் நிறுவனங்கள் என்று 9,600 வர்த்தகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தத் தொழில்களை மீண்டும் மீட்டெடுக்க இந்த 9,600 வணிகங்களுக்கும் தலா ரூ. 200,000 வழங்க முடிவு செய்துள்ளோம்.

வர்த்தகக் கட்டிடங்களுக்கும் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. பகுதியளவு சேதமடைந்த வர்த்தக இடத்திற்கு ஆரம்பத் தொகையாக ரூ. 05 இலட்சம் வழங்கப்படும். அது போதாது என்றால், மதிப்பீடு செய்யப்பட்டு அதிகபட்சமாக ரூ. 50 இலட்சம் வழங்கப்படும். அவர்களுக்கு ஏற்பட்ட சேதம் ரூ. 500,000 க்கு மேல் இருந்தால், ரூ. 500,000 உதவியைப் பெற்று மதிப்பிட முடியாது. அடுத்து, கைத்தொழில் அமைச்சில் பதிவு செய்யாத, பிரதேச செயலகங்களிலிருந்து வர்த்தக உரிமங்களைப் பெற்ற ஏராளமான சிறு வணிகர்கள் உள்ளனர். ஆனால் தரவு இன்னும் சேகரிக்கப்படவில்லை. எனவே, தரவுகளைச் சேகரிக்காமல் இன்னும் ஒரு முடிவை எடுக்க முடியாது.

ஆனால் கடையில் உள்ள அனைத்து பொருட்களும் அழிக்கப்பட்டால், வணிகத்தை மீண்டும் தொடங்க அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும். அதற்கான தரவு இல்லாததால், மாவட்ட செயலாளர்கள் மூலம் பிரதேசத்தில் உள்ள வர்த்தக இடங்கள் குறித்த அறிக்கையைப் பெற்று, உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இறால் வளர்ப்பு போன்ற விலையுயர்ந்த பெரிய அளவிலான வணிகங்களுக்கு சலுகை கடன்களை வழங்க முடிவு செய்துள்ளோம். சிறு அளவிலான வணிகங்களுக்கு ரூ. 2.5 இலட்சம் முதல் 10 இலட்சம் வரையும் பாரிய அளவிலான வணிகங்களுக்கு அதிகபட்சம் ரூ. 250 இலட்சம் வரை கடன்கள் வழங்கப்படும். அரசாங்கம் கடன்களுக்கு வட்டி வசூலிப்பதில்லை.

நாங்கள் வங்கிகளுக்கு பணம் வழங்குகிறோம், மேலும் வங்கிகள் மூலம் கடன் திட்டங்களை செயல்படுத்துகிறோம். கடன் திட்டங்களை செயல்படுத்துவதில் சில நிர்வாக செலவுகள் உள்ளன. அந்த செலவை ஈடுகட்ட வங்கி ஒரு சிறிய வட்டியை வசூலிக்கிறது. கடனைப் பெற்ற பிறகு, ஆறு மாதங்களுக்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே எங்கள் நோக்கம். அவர்களின் வாழ்க்கையை நாங்கள் கைவிட முடியாது. அனுமதி அற்ற நிர்மாணங்களை அகற்றுவதே எங்கள் நோக்கம்.

இந்த உதவியை வழங்குவதற்கு நமக்கு ஒரு காலக்கெடு தேவை. இது இன்று நிறைவேற்றப்பட்டாலும், திங்கட்கிழமை பணத்தைப் பற்றி கேட்க வேண்டாம். இந்த செயல்முறைகள் பிரதேச செயலகங்களில் நடைபெறுகின்றன. உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்க வழிகள் உள்ளன. உண்மையில், இதையெல்லாம் மக்களுக்கு வழங்க, எதிர்க்கட்சியின் ஆதரவும் தேவை. மக்கள் உதவி பெறவில்லை என்றால், இன்னும் இரண்டு மாதங்களுக்கு வீடு வீடாகச் செல்லுங்கள். இப்போதே அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்திற்குச் செல்லுங்கள்.

நாங்கள் இதை படிப்படியாகத் தொடங்குகிறோம். முன்னர் குறிப்பிட்டபடி, மண்சரிவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 17,648 குடும்பங்களுக்கு இந்த 50 இலட்சம் ரூபாய் உதவித்தொகையை வழங்குகிறோம். அவர்கள் அனைவரும் ஆபத்தான இடங்களிலிருந்து அகற்றப்படுவார்கள். 2027 ஆம் ஆண்டுக்குள், அதிக ஆபத்தான இடங்களில் எந்த குடும்பமும் வசிக்க முடியாத வகையில் சட்டங்கள் இயற்றப்படும். மேலும், வீடுகள் முழுமையாக சேதமடைந்தால், குருநாகல் போன்ற பகுதிகளில் குடியேற பொருத்தமான காணி உள்ளவர்களுக்கு 50இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.

வீடுகள் கட்டுவதற்காக அரச நிலங்களை கையகப்படுத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம். இந்த மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப ரூ. 500பில்லியன் குறைநிரப்பு பிரேரணயை நாங்கள் முன்வைத்துள்ளோம். இயற்கை பேரழிவுகளைத் தடுக்க முடியாது என்றாலும், இதுபோன்ற இயற்கை பேரழிவுகளால் ஏற்படக்கூடிய சேதங்களைத் தடுக்க ஒரு நீண்டகால திட்டம் தேவை. மத்திய மலைநாட்டை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு நீண்டகால திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும். எனவே, பல முறையான நடவடிக்கைகள் மூலம் நாங்கள் இதில் பிரவேசித்துள்ளோம்.

சேதமடைந்த வீதிக் கட்டமைப்பு, மின்சார கட்டமைப்பு மற்றும் நீர் வழங்கல் கட்டமைப்பை சீர்செய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம். மின்சார கட்டமைப்பை மீட்டெடுக்கும் போது ஒரு தொழிலாளி இறந்தார். அடுத்த இலக்கு அனைத்து பாடசாலைகளையும் திறப்பது. ஒரு அரசாங்கமாக எங்கள் பொறுப்பை நாங்கள் நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்வதில் எங்களுக்கு திருப்தி இருக்கிறது. இந்த நாட்டை மீட்டெடுக்கும் பொறுப்பை நாங்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் நிறைவேற்றுகிறோம். நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *