உலகம்

பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது வன்முறை

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியிலிருந்து நீக்கிய இளைஞர் அமைப்பின் முக்கியத் தலைவர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, பங்களாதேஷில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

கடந்த வாரம் டாக்காவில் உள்ள ஒரு மசூதியை விட்டு வெளியேறும்போது முகமூடி அணிந்த தாக்குதல்காரர்களால் ஷெரீப் உஸ்மான் ஹாதி சுடப்பட்டார், சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

2024 ஆம் ஆண்டு எழுச்சிக்குப் பிறகு முதல் தேர்தலுக்கான திகதியை பங்களாதேஷ் அதிகாரிகள் அறிவித்த ஒரு நாள் கழித்து துப்பாக்கிச் சூடு நடந்தது. குறித்த தேர்தலில் ஹாதி ஒரு சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார்.

வியாழக்கிழமையன்று அவரது உயிரிழப்பு குறித்த செய்தி வெளியானதும், நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் தலைநகரில் உள்ள ஒரு சதுக்கத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், போராட்டக்காரர்கள் பங்களாதேஷின் முக்கிய செய்தித்தாள்களான தி டெய்லி ஸ்டார் மற்றும் புரோதோம் அலி ஆகியவற்றின் அலுவலகங்களைச் சேதப்படுத்தினர், மேலும் ஒரு கட்டிடம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு இராணுவம் அனுப்பப்பட்டது, அதே நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த பத்திரிகையாளர்களை மீட்டனர். 32 வயதான ஹாதி, இன்கிலாப் மஞ்சா என்ற மாணவர் போராட்டக் குழுவின் மூத்த தலைவராகவும், அண்டை நாடான இந்தியாவின் மீது வெளிப்படையான விமர்சகராகவும் இருந்தார்.

இந்தியாவில்தான் தற்போது ஹசீனா அரசியல் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார். பங்களாதேஷின் அரசியல் கட்சிகள் ஹாதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன, மேலும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துமாறு இடைக்கால அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.

காபந்து அரசாங்கத்தின் தலைவரும் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், ஹாதியின் உயிரிழப்பை நாட்டுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று குறிப்பிட்டுள்ளார். அச்சுறுத்தல், பயங்கரவாதம் அல்லது இரத்தக் களரியின் மூலம் நாட்டின் ஜனநாயகப் பயணத்தை நிறுத்திவிட முடியாது என்றும் யூனுஸ் கூறியுள்ளார்.

இதனிடையே, இடைக்கால அரசாங்கம் கடந்த சனிக்கிழமையன்று ஒரு நாள் தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது. ஹாதி சுடப்பட்ட சிறிது நேரத்திலேயே, இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்றும், இந்த சதிகாரர்களின் நோக்கம் தேர்தலை சீர்குலைப்பதே என்றும் யூனுஸ் கூறியிருந்தார்.

விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பல பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஒகஸ்ட் 5 ஆம் திகதி, பல வாரங்களாக மாணவர்களின் தலைமையில் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து, ஹசீனா இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.

இதன் மூலம், 15 ஆண்டுகளாக நீடித்த, மேலும் மேலும் சர்வாதிகாரமாகி வந்த ஆட்சிக்கு ஒரு முடிவு ஏற்பட்டது. 

நவம்பர் மாதம், போராட்டக்காரர்களுக்கு எதிராக கொடூர நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதித்த குற்றத்திற்காக அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பங்களாதேஷ் முழுக்க வெடித்த மாணவர்கள் போராட்டத்தில் 1400 பேர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *