சர்வதேச அரபு மொழி தினம் இன்று; அரபு மொழியை மேம்படுத்தி பரவலாக்குவதில்அளப்பரிய பங்களிப்புக்களை நல்கும் சவுதி அரேபியா
சர்வதேச அரபு மொழி தினத்தை (18.12.2025) முன்னிட்டு இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் மற்றும் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத், மற்றும் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி ஆகியோருக்கும் உலக முஸ்லிம்களுக்கும் அரேபியர்களுக்கும் இலங்கை அல் ஹிக்மா நிறுவனம் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

சர்வதேச அரபு மொழி தினம் வருடாவருடம் டிசம்பர் 18 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. அத்தினத்தை சவுதி அரேபியா மிக விமர்சையாகக் கொண்டாடுகிறது. அந்த வகையில் இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் மற்றும் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் ஆகியோரின் விஷேட வேண்டுகோளுக்கிணங்க இலங்கையில் உள்ள சவுதி அரேபிய தூதரகமும் இலங்கையில் வருடாவருடம் அரபு மொழி தின வைபவத்தை ஏற்பாடு செய்து நடத்துகிறது. அவ்வைபவங்களில் அரபி மொழியின் முக்கியத்துவம் மக்களுக்கு தௌிவுபடுத்துவதோடு அரபு எழுத்தணி கண்காட்சியும் நடாத்துகிறது.

உலகில் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றாக விளங்கும் அரபி மொழிக்கு உலகில் பல நாடுகளில் குறிப்பாக அரபி நாடுகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும் இது அல் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மொழியாக விளங்குகிறது. அதனால் உலகம் இருக்கும் வரையும் இம்மொழி முக்கியத்துவமும் சிறப்பும் பெற்றதாகவே இருக்கும். இம்மொழிக்கு மக்கா, மதீனா உட்பட சவுதி அரேபியா முழுவதுவம் அளிக்கப்படுகிறது.
சவுதி அரேபியா அரபு மொழியைப் பரவலாக்குவதற்காக உலகில் பல நாடுகளிலும் பல கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து நடாத்திகிறது. அரபிக் அகடமிகளையும் பல நாடுகளில் உருவாக்கியுள்ளது. அது மாத்திரமல்லாமல் அரபு மொழிக்கான மன்னர் சல்மான் சர்வதேச அகாடமியையும் ஆரம்பித்து இம்மொழிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்திருக்கிறது. சவுதி.

சவுதி அரேபியாவில் உள்ள சகல பல்கலைக்கழகங்களுக்கும் இலங்கை மாணவ மாணவிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான அரபு மொழி அறிவு இல்லாத வௌிநாட்டவர்கள் இலவச புலமைப் பரிசில்கள் ஊடாக உயர்கல்விக்கு பிரவேசிக்கின்றனர். அவர்களுக்கான போதனை மொழி அரபாக இருப்பதால் வௌிநாட்டு மாணவ மாணவியருக்கு இரண்டு வருடங்கள் அரபுமொழியை சரளமாக எழுத வாசிக்கக் கற்றுக் கொடுக்கப்படுகின்றனர். “அரபு மொழி பீடம்” என அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தனியான பீடங்களை அமைத்து அரபு மொழியைக் கற்க வழிவகுக்கிறது. அது மாத்திரமல்லாமல் சவுதி அரேபியாவுக்கு தொழில்கள் நிமித்தம் சென்றவர்களுக்கும் அங்குள்ள இஸ்லாமிய கலாசார மற்றும் தாவா நிலையங்களில் அரபு மொழி கற்பிக்கப்படுவதோடு இஸ்லாமிய வழிகாட்டல்களும் போதிக்கப்படுகிறது.
இவ்வாறு உலகிலேயே அரபு மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் முன்னணி நாடாக சவுதி அரேபியா விளங்குகிறது.
அரபு மொழி அல் குர்ஆனின் மொழியாகும். அது அல்லாஹ் பேசுகின்ற மொழியும் இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேசுகின்ற மொழியும் பல நபிமார்களும் பேசிய மொழியுமாகும். மறுமையில் அல்லாஹ் தன் அடியார்களுடன் பேசும் மொழியாகவும் அது உள்ளது.
சுவர்க்கவாசிகள் அல்லாஹ்வுடனும் தங்களுக்குள்ளேயும் பேசும் மொழியும் அரபி மொழியே. அந்த வகையில் அரபு மொழி என்பது மிக முக்கியமானதொரு மொழியாக விளங்குகிறது. ஐவேளைத் தொழுகைக்காக சொல்லப்படும் அதான் உட்பட முஸ்லிம்கள் தினமும் தொழுகின்ற ஐவேளைத் தொழுகையும் இன்னும் பல வணக்க வழிபாடுகளும் அரபியில் தான் அமைய வேண்டும். அப்போது தான் அவர்களது வணக்க வழிபாடுகள் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படும்.
எனவே தான் இலங்கை நாடு உட்பட உலகலாவிய அனைத்து முஸ்லிம் சிறுவர்களும் சிறுவயதிலிருந்தே அரபி மொழியில் உள்ள அல் குர்ஆனை நன்கு சரளமாக ஓதப் பழகிக் கொள்கின்றனர். அதன் பொருள்கள், விளக்கங்கள் தெரியா விட்டாலும் அரபி மொழியில் உள்ள அல் குர்ஆனை உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் சரளமாக ஓதப் பழகுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இது அவர்களுக்குக் கிடைத்த மாபெரும் அருளாகும்.
உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மொழிகளில் நான்காவது இடத்தை அரபு மொழி பிடித்துள்ளது, மேலும் இது அரபு நாடுகள் உட்பட உலகில் உள்ள சுமார் 66 நாடுகளில் பயன்பாட்டில் உள்ள மொழியாக விளங்குகிறது. இது 1974 இல் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்ட மொழி.
இப்படிப்பட்ட அரபு மொழி உலகலாவிய ரீதியில் அரபு நாடுகள் அல்லாத நாடுகளிலும் கற்பிக்கப்படுகிறது. அந்த வகையில் இலங்கையிலும் அரபிக் கல்லூரிகளிலும் அரபி மொழி சிறப்பாகக் கற்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இலங்கைக் கல்வி அமைச்சிலும் கல்விப் பொதுத் தராதர உயர் தர வகுப்பிலும் அரபிப் பாடம் ஒரு முக்கிய பாடமாக கல்வி அமைச்சு அங்கீகரித்திருக்கிறது.
உலகளவில் அரபு மொழியின் பங்கை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் வகையில் அரபு மொழிக்கான மன்னர் சல்மான் சர்வதேச எகடமியை சவுதி 2020 செப்டம்பர் முதலாம் திகதி ஸ்தாபித்தது. இது ரியாத் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயற்படுகிறது. சவுதி அரேபியா அரபு மொழியைப் பாதுகாப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன் அரசியலமைப்பின் முதல் ஷரத்தாக அது உள்ளதோடு அரபு மொழியை உத்தியோகபூர்வ மொழியாகவும் பிரகடனப்படுத்தி இருக்கிறது சவுதி.

இரு புனித பள்ளி வாசல்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் பின்வருமாறு கூறினார்கள், (எமது நாடு சவுதி அரேபியா. அது ஒரு உண்மையான அரபு நாடு. அரபு மொழியை அதன் அனைத்து துறைகளுக்கும் அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது. இதற்காக பல கல்லூரிகள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் சவுதி அரேபியாவுக்குள்ளேயும் வெளியேயும் நிறுவப்பட்டுள்ளன. அரபு மொழியின் கற்றல், கற்பித்தலை சவுதி அரேபியா என்றும் ஆதரித்து வருகிறது.

அரபு நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் அரபு மொழியின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக மறைந்த மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் கூட அரபு மொழி சேவைக்கான சர்வதேச மையமொன்றை நிறுவினார். இம்மையம் மறைந்த மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸின் ஆலோசனையில் ஆரம்பிக்கப்பட்டது. மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் அரபு மொழிக்கு சேவையாற்றுவதும் அதைக் கற்பிக்க வல்லுநர்களை பல நாடுகளுக்கும் அனுப்புவதும், அதற்கான ஆராய்ச்சி நிலையங்களை உறுவாக்குவதும் இதன் முக்கிய நோக்கங்களாகும்.
எனவே அரபு மொழியை மேம்படுத்தவும் அரபு மொழியில் அமைந்துள்ள அல் குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவை மேம்படுத்தவும் சவுதி அரேபியா எடுக்கின்ற சகல முயற்சிகளையும் அல் ஹிக்மா நிறுவனம் இன்றைய சர்வதேச அரபி மொழி தினத்தில் பாராட்டுவதோடு அந்நாட்டுக்கும் அந்நாட்டுத் தலைவர்களுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய வேண்டும் என்றும் பிராரத்திக்கிறது.

அஷ்ஷைக் எம்.எச். ஷைஹுத்தீன் பி.ஏ மதனி,
பணிப்பாளர், அல் ஹிக்மா நிறுவனம்,
கொழும்பு
