உள்நாடு

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் டிஜிட்டல் புரட்சி

அரசாங்கத்தின் “டிஜிட்டல் இலங்கை” தேசிய கொள்கைக்கு அமைவாக, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஒட்டுமொத்த தரவு கட்டமைப்பையும் நவீனமயமாக்கும் பாரிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மத்ரஸா கல்வி நிறுவனங்கள் தொடர்பான தரவுகளை ஒருமித்த “டிஜிட்டல் காப்பகத்தின்” (Digital Archive) கீழ் கொண்டு வருவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால நகர்வுகள் குறித்த மீளாய்வுக் கூட்டம், மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முளப்பர் தலைமையில் கடந்த 15-12-2025 அன்று அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இத்திட்டத்தின் முதற்கட்ட மென்பொருள் வடிவமைப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளத. பொதுமக்களின் பாவனைக்காக இது 2026 மார்ச் மாதம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் என பிரதி அமைச்சர் இதன்போது அறிவித்தார். ஆவணங்களின் பாதுகாப்பு மற்றும் இரகசியத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்குமாறும், அதேவேளை பயனர்கள் இலகுவாக தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் (User-friendly) கட்டமைப்பை உருவாக்குமாறும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் திணைக்களத்தின் சேவைகள் டிஜிட்டல் மயப்படுத்தப்படுவதால், அரச நிர்வாகத்தில் அதிகபட்ச வெளிப்படைத்தன்மையும் வேகமும் உறுதி செய்யப்படும்.

கலந்துரையாடலில் உரையாற்றிய பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முலாஃபர் அவர்கள்…

“பாரம்பரிய கோப்பு முறைகளிலிருந்து விடுபட்டு, தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பொதுச் சேவையின் வினைத்திறனை அதிகரிப்பதே எமது இலக்காகும். குறிப்பாக, வக்ஃபு சபையின் கீழ் உள்ள பள்ளிவாசல்களின் பூர்வீக ஆவணங்கள், காணிப் பத்திரங்கள் மற்றும் சட்ட ரீதியான பதிவுகளை எதிர்கால சந்ததியினருக்காக டிஜிட்டல் முறையில் பாதுகாப்பது காலத்தின் தேவையாகும்.

இந்த புதிய அமைப்பின் ஊடாக, பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்காக திணைக்களத்திற்கு நேரில் வருவதைத் தவிர்த்து, இருப்பிடத்திலிருந்தே இணையம் வாயிலாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் தகவல்களைப் பெறவும் வழிவகை செய்யப்படும்.”

இந்தக் கலந்துரையாடலில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், வக்பு சபையின் தலைவர் முஹிதீன் ஹுசைன் மற்றும் வக்பு சபை உறுப்பினர்கள் மற்றும் மென்பொருள் பொறியாளர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த செயற்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் போது, இலங்கையின் அரச திணைக்களங்களில் மிகவும் நவீனமான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு நிறுவனமாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான கலந்துரையாடல்களை ஆலிம் களிடமிருந்து பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(முஷாரிப் மொஹிதீன், ஊடகச் செயலாளர், பிரதி அமைச்சர் அலுவலகம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *