பாதுகாப்பாக தரை இறங்கியது TK733 விமானம்
கொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்குச் சென்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK 733, தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து அதிகாலை 12:28 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
கொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்கு செல்லவிருந்த விமானத்தில், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை அதன் விமானி சாமர்த்தியமாக கையாண்டுள்ளார்.
பயணத்தை தொடங்கிய சிறு பொழுதுகளிலேயே, விமானத்தின் சக்கரங்களை உள்ளிழுக்கும் அமைப்பில் (Landing Gear) சிக்கல் ஏற்பட்டுள்ளதை விமானி கண்டறிந்துள்ளார்.
அதன் பின்னர், விமானத்தைத் தொடர்ந்து இயக்குவது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்த விமானி, உடனடியாகக் கட்டுநாயக்க விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு அவசரமாகத் தரையிறங்க அனுமதி கோரியுள்ளார்.
இருப்பினும், முழுப் பயணத்திற்கும் தேவையான எரிபொருளுடன் இருந்த விமானம், அதன் அதிகப்படியான எடையுடன் தரையிறங்குவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் உடனடியாகத் தரையிறக்க முடியாமல் போயுள்ளது.
அதனை தொடர்ந்து, விமானத்தின் எடையைக் குறைப்பதற்காக சாமர்த்தியமாக செயற்பட்ட விமானி, சிலாபம் கடல் பகுதிக்கு மேலே விமானத்தை வட்ட பாதையில் செயற்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக நடுவானிலேயே பெருமளவு எரிபொருள் கடலில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் முழு அவசரக்கால எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து, நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, எடையைக் குறைத்துக்கொண்ட அந்த விமானம் நள்ளிரவில் மிகவும் லாவகமாகப் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
விமானத்தில் இருந்த 202 பயணிகள் மற்றும் 10 பணிக்குழுவினர் என யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் விமானம் தரையிறங்கியுள்ளது.
ஆபத்தான நேரத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானியின் நிதானமும், தரைக் கட்டுப்பாட்டு அறையின் துரித நடவடிக்கையும் இவ்விடத்தில் பாராட்டத்தக்கது.
அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார்நிலையில்
இதனை தொடர்ந்து, தரையிறங்கும் போது ஏற்படும் அபாயங்களைக் குறைக்க விமானி கடலுக்கு மேலே ஒரு முன்னெச்சரிக்கை எரிபொருள் நிரப்புதலை மேற்கொண்டதாகவும் அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பிலான அறிக்கை வெளியான நேரத்தில், விமானம் சிலாபம் பகுதிக்கு மேலே சுமார் 4,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்துள்ளது.
