அரசுக்கான சஜித்தின் யோசனைகள்
அனர்த்த முகாமைத்துவத் துறைக்கெனப் பிரத்தியேகமான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சொன்றை ஸ்தாபித்து, அதனை வலுப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளார்.
குருநாகல் மாவட்டம், இப்பாகமுவ பகுதியில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (16) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
“நாட்டில் துல்லியமான, திட்டவட்டமான, வினைத்திறனான அனர்த்த முகாமைத்துவத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவில்லை. அவ்வாறு எதுவும் நடைமுறையில் இல்லை. அனர்த்த முகாமைத்துவப் பிரிவும் இன்று சுனாமிக்கு அகப்பட்டுப் போனது போன்ற நிலையிலேயே உள்ளது. அனர்த்த முகாமைத்துவத்திற்குத் தெளிவான நிறுவனக் கட்டமைப்போ, வழிகாட்டுதல் தத்துவங்களோ, செயற்பாடுகளோ அல்லது செயற்றிட்ட வரைபடமோ எதுவும் இல்லை.
நாட்டில் NBRO மற்றும் GSMB நிறுவனங்களைப் போலவே சூழல் பாதுகாப்பு, கட்டடங்கள், மண்சரிவுகள், வெள்ளம், சூறாவளி போன்றவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்கள், முறையான திட்டமிடலுடன் ஒருங்கிணைந்த முறையில் செயற்பட வேண்டும். ஒருங்கிணைந்த அனர்த்த முகாமைத்துவத் திட்டம் வகுக்கப்பட்டு தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் கிராம சேவகர் பிரிவுகள் மட்டங்களிலும் இதன் பணிகளை முன்னெடுக்க வேண்டும். இதனைச் செயற்படுத்தத் தனி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சொன்றை ஸ்தாபிக்க வேண்டும்.
இதன் கீழ், விசேட பயிற்சி பெற்ற கிராமிய மட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இந்தத் துயரங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, பலவீனமடைந்துள்ள நாட்டின் இடர் முகாமைத்துவப் பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும். சுனாமி ஏற்பட்டு 21 ஆண்டுகள் ஆகியும், அடிக்கல் நாட்டப்பட்ட புத்தளம் டொப்ளர் ராடார் கட்டமைப்பு இன்னும் நிறுவப்படவில்லை. இதனை விரைவில் ஸ்தாபித்துத் தருமாறு ஜப்பான் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். மக்கள் சார்பாக இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
தற்போது தோல்வி கண்ட அனர்த்த முகாமைத்துவத் திட்டமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பெரும் சேதங்களையும் இழப்புக்களையும் சந்தித்துள்ள மக்கள் நிரந்தரமாக மீள்வதற்குத் தேவையான ஏற்பாடுகளுடன் கூடிய நிவாரணப் பொறிமுறை காணப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி குரல் கொடுக்கும்.
இந்தப் பேரழிவால் பில்லியன் கணக்கான டொலர்கள் சேதம் ஏற்பட்டுள்ளது. சேதத்திற்கு ஏற்ற இழப்பீடுகளை வழங்கப் போதிய நிதி அரசிடம் இல்லாமையால், சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அவசரமாக நடத்த வேண்டும். இந்த விடயத்தைப் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் முன்வைத்துள்ளேன்.
எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி இதில் பேதம் காட்டாது பூரண ஆதரவைத் தரும். இச்சமயம், அரசியல் ஆதாயம் தேடாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கி, மக்களின் வாழ்க்கையை வலுப்படுத்துவது அவசியமாகும். அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு மீட்டெடுப்பதே முன்னுரிமையான விடயமாகும். இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் பந்தயமாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அவசரமாகக் கூட்டி, வலுவான அனர்த்த முகாமைத்துவப் பொறிமுறையை முன்னெடுக்க வேண்டும்.
இந்தத் தவறுகளையும் குறைபாடுகளையும் சரிசெய்து கொண்டு புதிய பயணத்தை முன்னெடுக்க வேண்டும். அழிவைச் சந்தித்துள்ள நமது நாட்டு மக்களுக்காக இதனைச் செய்தே ஆக வேண்டும். இதற்கான ஆதரவை நாம் தருவோம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
